நற்சிந்தனை – 23

முகநூலில் “குர்ஆன் முழுமையானது“ என்ற வலையில் தொழுகை பற்றிய பதிவொன்றில் கொடுக்கப்பட்ட கருத்துப் பதிவு

குர்ஆன் முழுமையானது. ஆம் அல்லாஹ் சம்பூரணமாக்கியுள்ளதாகக் கூறி விட்டான். இந்த உண்மை ஒன்றே போதும் குர்ஆன் முழுமையாக அணுகப்பட வேண்டிய ஓர் உன்னதக் கருவூலம் என்பதை உணர. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படை உண்மையை மையப்படுத்தி மற்றைய இம்மை, மறுமைக்கான அனைத்தையும் கூறி இருக்கின்றது. அதனால், மற்றைய அனைத்தையும் அறிய, உணர, நடைமுறைப்படுத்த முற்படும் ஒருவர் அதனடிப்படையோடு முரண்படாத, அவ்வடிப்படையை முன்னிறுத்தியதாக மற்றைய அனைத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்காதோரை ஊர்வனவற்றில் மிக மோசமானதாகக் கூறுகின்றான். விளங்காகதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றான்.

இதன் காரணமாகவே அல்லாஹ், 3:7 வசனத்தில் அடிப்படை விடயங்கள் தெளிவாக உள்ளதாகக் கூறுகின்றான். அவற்றில் பல பொருள் கொள்ள முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்பது அடிப்படை. அந்த அடிப்படையை அடைவதற்கு, சாட்சியம் கூறுவதற்கு, உண்மைப்படுத்துவதற்கு அவ்வுண்மையை அறிவதற்கு முயல வேண்டியுள்ளது. இதனால்தான் இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் என தொழுகையில் ஓதப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மீண்டும் மீண்டும் ஓதும் ஏழு வசனங்களை இறக்கி அருளியுள்ளதாகக் கூறுகின்றான். அல்லாஹ் எதனையும் வீணாகப் படைக்கவோ கூறவோ இல்லை என்பதை நாம் ஏற்றால், இதனையும் அவ்வழியில் உணர வேண்டும்.

தொழுகையின் முக்கியத்துவமும், அதன் மகத்துவமும் சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் குர்ஆனின் சில சொற்களுக்கு பொருள் எழுதிய மொழி பெயர்ப்பாளர், நடுநிலையைக் கைக்கொள்ளவில்லை. குர்ஆனை முழுமையாக முற்படுத்தவில்லை. அதனால், ஃபுது என்ற அடியோடு வரும் அனைத்து சொற்களையும் வணக்கம் என்ற பொருளுள் அடக்கி விட்டார்கள். அதனால், அல்லாஹ், அனைத்தும் தன்னை விருமபியோ விரும்பாமலோ வணங்கிக் கொண்டிக்கின்றன. துதிக்கின்றன. புகழ்பாடுகின்றன. சிரம் பணிகின்றன போன்ற சொற்களால் கூறுவதையே, மீண்டும் நம்மைச் செய்யச் சொல்லி இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டனர்.

உண்மையில் அனைத்து படைப்புகளும் செய்து கொண்டிருக்கும் வணக்கத்தை மனிதனை மீண்டும் செய்யச் சொல்வதாக விளங்குவது வீணான ஒன்றாகி விடும். அல்லாஹ்வின் கையால் உருவாக்கப்பட்டவனாக, மனிதன் உயர் படைப்பாக, வானவர்களலும் சிரம் பணிதல் செய்யப்பட்டவனாக, அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்ட வனாக, அவனின் பிரதிநிதியாக, நடுநிலையாளனாக, பதவி உயர்த்தப்படும் பேறு உள்ளவனாக, அல்லாஹ்வால் வாழ்த்துக் கூறப்படுபவனாக, சுய நிர்ணய உரிமை கொடுக்கப்பட்டவனாக, தண்டனைக்கும் பரிசில் களுக்கும் உரியவனாக, வழி நடத்தப்படுபவனாக. அறிவுரை கூறப்பட்டவனாக, மேலாகத் தன்னுடைய நெருக்கத்தைப் பெறும் அந்தஸ்துக்கு உரியவனாகப் (என அடுக்கிக்கொண்டே போகலாம்) படைத்துள்ளான்.

ஆக நமது அத்தனை செய்கைகளும், அறிதலும், இந்த இலக்கை அடையும் நோக்கில் தளர்வாகி விடவோ, சருகிவிடவோ, தவறிவிடவோ முடியாது. அந்த அடிப்படையில் அந்த, நமக்கு விதியாகியுள்ள தொழுகையை செயற்படுத்த, அதில் அடைவை ஏற்படுத்திக் கொள்ள, அல்லாஹ்வின் உதவி தேவைப்படுகின்றது. உதவி பெற முயற்சிக்கும் ஒருவன், யாரிடம், எதை, ஏன் என்பது போன்ற விடயங்களை அறிந்துதான் கேட்க முடியும். அதனால்தான் உன்னையே அறிகிறோம் என்ற கருத்தை வெளிப்படுத்தும் நஃபுது என்ற சொல்லைப் பாவித்துள்ளான். உன்னையே அறிகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். அந்த உதவி கொடுக்கல் வாங்கலுக்கு உட்படுத்தாத அவனை அடைவதற்காக நேரான. வழி தவறியவர் களுடையதல்லாததாக. வழி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுடைய வழியாக அல்லாஹ் வகைப்படுததி உள்ளான். பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உதவி தேடுவர் என்பதும் அவனது வாக்கே! நினைவுகூரலில் நமது அடைவே தொழுகை நிலைநிறுத்தலாக, நிறைவேற்றலாக, பேணலாக மாறுகிறது.

மாறாக, “உன்னையே வணங்குகின்றோம்” எனக் கூறின், ஏற்கனவே அல்லாஹ், அனைத்தும் வணங்கிக் கொண்டிருக்கின்றன எனக் கூறியிருப்பதைச் செய்வதாகவும், வணங்கிக் கொண்டு இருப்பவர் வண்ங்கிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறுவதாகவும், வணங்கிக் கொண்டு உதவி தேடுவதால், கொடுக்கல் வாங்கலாக மாற்றுவது போன்றும், மேலாக, அல்லாஹ்வை வணங்குவதாகச் செய்யும் செயற்பாட்டில் உதவி தேடிக் கொண்டிருப்பதாகவும் என்ற நிலைக்குத் தொழுபவரைத் தள்ளி விடும். வணக்கத்தில் வேறொன்று கலந்திட முடியாது. அதுபோன்றே நினைவுகூரலிலும் மன ஒருமைப்பாடு வேண்டப்படுகின்றது. சம்பந்தப்படாதவரிடம் முன்வைக்கப்படும் வேண்டுதல் கேட்டை மட்டுமே தவிர பயனளிப்பதில்லை.

அந்த வசனத்தில், தொழுகையை – வணக்கம் என்ற கருத்தில் பார்க்கும் போது, தொழாத நிலையில் அவ்வசனத்தைக் கூறும் சந்தர்ப்பத்தில் ஓதுவதாக நினைத்துப் பார்ப்பின் நாம் தொழுகையை வணக்கமாகக் கூறுவது தெரிய வரும்.

இப்போது, தொழுகை பற்றிக் கூறியுள்ளதில், ‘திக்ர்’ என்ற சொல்லால் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதின் கருத்தை உற்று நோக்கின் அது நினைவுகூரலையே வெளிப்படுத்தி நிற்பது புரியும். ஏற்கனவே அறிநதிருந்த அல்லாஹ்வை, தற்போது, மறதியாளராகப் படைக்கபட்டு, மறந்த நிலையிலுள்ள நாம், தொழுகை என்ற நினைவுகூரலின் மூலமே ஞாபகத்துக்குக் கொணர்ந்து அவனிடம் உதவ தேட முடியும். அதற்காகவே தொழுகை கடமை ஆகியுள்ளது. இதனடிப் படையிலேயே தொழுகை பற்றி கூறிய அனைத்து சந்தர்ப்பங்களிலும், நிலை நிறுத்துங்கள், பேணிவருவீராக, நிறைவேற்றுங்கள் போன்ற அறிவுறுத்தல் அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ளதுடன், தொழுகையாளிகளுக்குக் கேடுதான் என்ற சாபமும் இறங்கியுள்ளது உய்த்துணரப்பட வேண்டியது.

குர்ஆனை அறிவதற்கு மொழிபெயர்ப்பை நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதனால் வழிகேடுகளுக்குள் தள்ளப்படாது கவனமாக இருத்தல் வேண்டும். அதனால்தான் அல்லாஹ் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளான். குறிப்பிட்ட அந்த புதிய மொழிபெயர்ப்புகூட ‘குர்ஆன் அறிவுரை’ என்ற வகையிலும், குர்ஆனில் அறிவுரை எது என்ற கேள்வியை எழுப்பின், ‘நாமடைய வேண்டிய இலக்கு பற்றியது’ என்ற பதிலே எஞ்சும்.

இப்போது, 7:172இன் வசனத்துக்கு உங்கள் கவனத்தை ஈர்க்கின்றேன். மிகவும் உன்னிப்பாக அறிய வேண்டிய இறை கருத்தை, அதாவது நாம் முன்னொரு போது இறைவனால் வெளிப்படுத்தப்பட்டு, நமக்கு நாமே சாட்சியாளர்களாக ஆக்கப்பட்டு, அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என அல்லாஹ்விடம் சாட்சியம் கூறப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுபடுத்தும்படியும், நாளை மறுமையில் நாங்கள் மறதியாளர்களாக இருந்து விட்டோம் என சாக்குப் போக்குக் கூற முடியா நிலையை வலியுறுத்துவதன் யதார்த்தத்தை அறிவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். ஆக தொழுகை, அல்லாஹ்வை நினைவுகூரலே!

இப்போது. தொழுகையில் திக்ர் என்ற சொல் ‘நினைவுகூரல்’ என்பதுதான் என்பதை தானாக விளக்கி உறுதிப்படுத்தியுள்ள நிலையில் சிந்திப்பின் உண்மை துலங்கும். ஆக, நாம். காணாத ஒன்று என்ற மாயையில் எதையெதையோ கூறிக் கொண்டிருக்கும் அல்லாஹ்வை, நாம் ஏற்கனவே கண்டதை ஞாபகத்துக்குக் கொணர்வதன் மூலம் தொழுகையை நிலைநிறுத்துவதுதான் தொழுகை. அதற்காக தொழுகை தரப்பட்டதே தவிர அல்லாஹ்வுக்கு நமது தொழுகையால் எதுவித பயலுமில்லை. அவன் கனி, ஸமது என்ற பேருண்மையைக் கொண்டிருப்பது வெளியாகும். தொழுகையில் நினைவுகூர்ந்து பெற்ற வெற்றி இம்மையில் குருடர் மறுமையிலும் குருடரே என்ற நிலையை அடைய விடாது காக்கும்.

இப்போது, 15:99இல் உமக்கு உறுதிப்பாடு வரும் வரை அறிந்து கொண்டிருப்பீராக என்ற சரியான கருத்து அவ்வசனத்தில் இருந்து வெளியாகும். அடுத்து, 5:35இல் கூறப்பட்ட அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், அவன்பால் நெருங்குவதற் குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள், அவனுடைய வழியில் போர் செய்யுங்கள் நீங்கள் வெற்றி பெறலாம் போன்றவை தெளிவை வெளிப்படுத்தும். பதவி உயர்த்தப் படுவோர் நாம் என அல்லாஹ் அறிவித்ததனை அடைய முடியும்.

உண்மையைக் கொணர்ந்தவரும் உண்மைப் படுத்தியவரும் வெற்றியாளர் என்ற அந்தஸ்தைப் பெற முடியும். 3:18 கூறிய, நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அல்லாஹ் தன்னைத தவிர யாருமில்லை எனக் கூறியதை, அவ்வாறு வானவர்களுடன் சேர்ந்து அறிஞர்களும் சாட்சியம் கூறுவதாகக் கூறியிருப்பவர் களுள் நாமும் அடங்குவோம். நமது கலிமாவும் உண்மைப்படுத்தப்படும். அவனது வார்த்தை மேலேறிச் செல்லும் நாமும் அதற்குரியதைப் பெறுவோம்.

நினைவு கூருதலின் வெற்றிக்கும் இறைவன் உறுதி மொழி தந்தே உள்ளான். பார்வைகள் அவனை அடையாது. அனைவருடைய பார்வையையும் நான் அடைந்து விடுகின்றேன் என்கின்றான். ஆக அவன் வழியில் முயன்றால், அவன் முயற்சிக்கேற்ப பலனை நல்குவான் என்ற உத்தரவாத்தையும் தந்துள்ளான்.

மேலும், உங்களிடமுள்ள ஆதங்கத்துக்குக்கும் அல்லாஹ் பதிலைக் குர்ஆனில் வைத்தே உள்ளான். அது, நமக்கு விருப்பமானதை அவன் வழியில் செலவிடாத வரை நன்றி பெற்றவர்களாகிவிட மாட்டோம் என்பதுவே. இதுபோன்று,

குர்ஆன் முழுமையானது என்பதை அறிந்து வைப்பது ஒரு அறிவாகி விடுமே தவிர, அதுவே அடைவு ஆகி விடாது. அதனால், முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்ற அல்லாஹ்வின் அழைப்பைச் செயற்படுத்தி இருக்க வேண்டும். நாயகம் ஸல் அவர்கள் முழுமையாக குர்ஆனை அறிந்திருந்த நிலையிலேயே அல்லாஹ் இவ்வறிவுறுத்தலை ஆலோசனையை வெளிப்படுத்தி உள்ளான்.

தொழு‌கையில் நினைவுகூரலின் வெற்றியால் உறுதி பெறும் ஈமான், நன்றி செலுத்துவதுடன் இணைக்கப்பட்டு, அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து விலக்குப் பெற்று, அந்நன்றி அல்லாஹ்வின் பாராட்டுதலுக்கு நம்மை உரித்துடையவராக மாற்றி விடுகின்றது.

நன்றி என்றால் என்னவென்பதைக்கூட நாசூக்காகக் கூறியேயுள்ளான். நன்றி செலுத்துவதற்காகச் செயல்களைச் செய்து வாருங்கள் என்ற அழைப்பு மறைவான உண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. நன்றியின் பெறுமதியை, “நீங்கள் ஈமான் கொண்டு நன்றியும் செலுத்தி வந்தால் உங்களைத் தண்டிப்பதால் அல்லாஹ் என்ன நன்மை அடையப் போகின்றான்? அல்லாஹ்வோ நன்றி பாரட்டுகிறவனாகவும், அறிபவனாகவும் இக்கிறான்“ என்ற கருத்தை வெளயிட்டதன் மூலம் வலியுறுத்தி உள்ளான். தேவை அற்றவனுக்கு நன்றி செலுத்துவதை விளங்குவதற்கு நன்றி என்ன என்பதை அறிய வேண்டியுள்ளது. அது முந்திய வசனத்தின் மூலம் தெரிய வருகின்றது.

இவ்விடயம் பாரிய அளவு விளக்கங்களைக் கொண்டது, ஆயினும் முடிந்தளவு சுருக்கி உண்மையைப் புகுத்த முயன்று உள்ளேன். தாங்கள் அறியும் முயற்சியில் உள்ளவராக, விளங்கக் கூடியவராக, அவன் வழியில் நிற்பவராக நான் கருதியதால், இம்முயற்சிக்கு முடிந்தளவு, என்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டிய கடப்பாடு இருந்ததால் இதனை எழுதி உள்ளேன். இதில் விளக்கம் போதாமல் கேள்விகள் எழும்புமாயின், ‘தர்க்கம்’ என்றவாறல்லாது, விளக்கம், அறிதல் என்ற அடிப்படையில் என்னால் முடிந்ததை அல்லாஹ் நாடினால் வெளிப்படுத்தக் கூடிய அளவு கூற முடியும்.

Please refer http://factsbehind.net/ to find some articles on Quran.