ஆன்சரிங் இஸ்லாம்என்ற தளத்தில் முகம்மதுவின் பாவங்கள்என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

 

இஸ்லாம்மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட மார்க்கம்

‘அல்லாஹ் எவனை நேர்வழிகாட்ட விரும்புகிறானோ அவனுடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்’ 6:125

‘முகம்மதின் பாவங்கள்’ என்ற தலைப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சூரா 47:19 ‘ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக – அன்றியும் உங்களுடைய நடமாட்டத் தலத்தையும் உங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.என்ற இவ்வசனத்தில் முஹம்மது பாவம் செய்துள்ளாரா என்று ‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முஹம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

இவ்வசனத்தில்! உம்முடைய பாவத்திற்காகவும்’ என்ற சொல் மட்டும் எழுந்தமாட்டாகக் கட்டுரையாளரைக் கவர்ந்துள்ளது. இது கனியிருப்பக் காய் தேடும் நிலை. இதையே வள்ளுவம், ‘இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறது.

நாம் மேற்கண்ட ‘முகம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பை ஆராயுமுன் குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மனித வர்க்கத்திற்கு அருளப்பட்டதே தவிர முஹம்மது அவர்களுக்கு மட்டும் அருளப்பட்டதல்ல என்பதுவும் முஹம்மதை மட்டும் குறித்துச் சொல்லப்பட்டதல்ல என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்வது குர்ஆனை ஆராய மட்டுமல்ல குர்ஆன் வழங்கப்பட்டவரைக் காரணமின்றிக் குறை கூறும் குற்றத்திற்கும்; கொண்டு செல்லாது.

இரண்டாவது சொற்களுக்குக் கருத்துத் தேட முற்படாது முழு வசனத்தையும், வேண்டுமாயின் முன் பின் வசனங்களையும், இன்னும் வேறு அத்தியாயங்களிலிருந்தும் பொருத்தமான வசனங்களை  நடுநிலையிலிருந்து ஆராய வேண்டும். ‘3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம்,என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.’

மூன்றாவது கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு ஆராய்ந்தால் கறுப்பாகத் தெரியும். அப்படிக் காண்பது உண்மையுமல்ல என்பதை அறிவது பிறர் மனதைப் புண்படுத்தும் மாபாதகச் செயலுக்கு உட்படுத்தாது.

எதையும்அறிய முற்படும்போது வள்ளுவர் வாக்குக்கொப்ப ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும,; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பதற்கொப்ப மெய்ப்பொருள் காண முயல வேண்டும். அதுவே அறிவாளிகளின், அறவாளிகளின் செயல், அறிவுடமையுங்கூட.

ஆக்கபூர்வமான விமர்சனங்கள், கருத்து மோதல்கள் உண்மையை வெளிப்படுத்த உதவுமேயன்றித் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளால் வெளிப்படுத்தப்படும் விடயங்கள்வேண்டுமானால், அவ்வப்போது பின்வரிசையாளர்களின் கைதட்டலைப் பெறுமே தவிர. ஞானவான்கள் மத்தியில் மதிப்பைப் பெறா. மாறாகத் தமது இழி குணத்தை வெளிப்படுத்தியதாகவே மக்கள் மத்தியில் எண்ணப்படும். அவற்றில் எவ்வகையான அடைவுகளும் இரா. யாருக்கும் நன்மை பயக்கா. யாருக்கும் நன்மை பயக்காத எதுவும் கழிவுக் குழியையே சென்றடையும் என்பது வரலாறு. 1400 வருடங்களாக இது போன்ற சேற்றை இறைக்கும் முயற்சிகள் மேற்கொண்ட பலரும், அவர்களின் எழுத்துக்களும் இருந்த இடம் தெரியாது அழிந்த சரித்திரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அப்படியானோரின் பெயர்கள் குர்ஆனில் குறிப்பிட்டவை தவிர வேறு எதையும் காண்பதற்கில்லை.

இஸ்லாம் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை’ அல் குர்ஆன் 2:256′. சிந்திக்கும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறும் ஓரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே. இஸ்லாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மானுட வர்க்கத்துக்கு அருளப்பட்ட வாழ்விற்கான வழிகாட்டியே தவிர, முஹம்மதுவுக்கோ, ஒரு குறிப்பிட்ட சாராருக்கோ, இனத்துக்கோ, சமூகத்துக்கோ அருளப்பட்டதல்ல. மேலும் இது இயற்கை மார்க்கம் என இறைவனே கூறுகிறான். (குர்ஆன்) உண்மையைத் தவிர வேறெதுவும் குர்ஆனில் கிடையாது. இந்த இடத்தில் பின்வருவன கட்டுரையின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள உதவும்.

  1. முஹம்மது பாவம் செய்தாரா இல்லையா என்பதை ஆராய்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை.
  1. முஹம்மது பாவம் செய்யவில்லை என்பதைக் கூறுவதற்காக வந்த மார்க்கமுமல்ல இஸ்லாம் என்பதை உணர வேண்டும்.
  1. முஹம்மதின் பிரஸ்தாபத்தைப் பற்றிக் கூறுவதும் இஸ்லாத்தினதோ குர்ஆனினதோ கொள்கையுமல்ல
  1. வல்ல அல்லாஹ் சுபுஹானஹுவதாலாவால் மக்கள் மத்தியில் அதுவும் அந்தந்த சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, நபித்துவம் கொடுக்கப்பட்ட 124000 நபிமார்களின் வரிசையில் வேதமும் வழங்கப்பட்டவர்களில்  இறுதியானவர் முஹம்மது.
  1. இவர் அரேபியாவில் கண்ணியம் பெற்ற, அச்சமயம் புனித கஃபாவிற்குப் பொறுப்பானவர்களான, பனூகுறைஷியரின் சமூகத்தில் பனூஹாஷிம் கோத்திரத்தில் தோற்றம் பெற்ற, பிறக்கும் போதே தந்தையை இழந்து,  தனது ஆறாம் வயதிலேயே தாயையும் இழந்து பாட்டனாரின் பராமரிப்பில் வளர்ந்த ஓர் அனாதை.
  1. இவரின் நற்குணத்திற்காக அன்றைய அரேபியர் அவரை ‘அல் அமீன்’ நம்பிக்கைக்குரியவர் எனப் போற்றினர்.
  1. இவர் எழுத, வாசிக்கத் தெரியாதவராயிருந்ததால் அவரை ‘உம்மி நபி’ என்றே அழைத்தனர். ‘7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கி விடுவார். எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவிசெய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான(வேதத்)தையும் பின்பற்று கிறார்களோஅவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். 
  1. முஹம்மதைப் பற்றி அல்லாஹ் கூறுகையில் அவர் தானாக எதையும் பேசுவதில்லை, அவை இறைவனிடமிருந்தேயன்றி எனக் கூறுகிறான். குர்ஆன்
  1. மேலும், அல்லாஹ், (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. 21:107 என்கின்றான்.
  1. மேலும் ’68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ அவருக்கு நற்சான்றிதழ் நல்குகின்றான்.
  1. குர்ஆன் இதற்கு முந்திய வேதங்களை உண்மைப்படுத்துவதற்காக வந்ததே எனவும் கூறுவது கவனத்திற்கெடுக்கப்பட வேண்டியது. ’10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று. அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.’ ’35:31. (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும். …’
  1. நோவா, ஆபிரஹாம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட மார்க்கத்தையன்றி உமக்குப் புதிதாக ஒன்றையுந் தந்துவிடவில்லை எனக் கூறுவது முந்தைய கூற்றை உறுதிப்படுத்துகிறது. ’42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; ‘நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து  விடாதீர்கள்’ என்பதே…..’ ’41:43. (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக்  கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை…..’ ’16:123. (நபியே!) பின்னர் ‘நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்’ என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.’

மேலும், பின்வரும் வசனமும் அதனை வலியுறுத்துகிறது. ‘3:95- ‘(நபியே!) நீர் கூறும்; ”அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.” இன்னும் ‘4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ, அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.’. அடுத்து ‘2:135. ‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் – நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.’ அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக!’

  1. மேற்கண்டவற்றிலிருந்து இஸ்லாம் ஒரு மார்க்கத்திற்கு எதிராகவோ, யாரையும் தாக்கவோ, யாருடைய நாற்றங்களையும் ஆராயவோ அருளப்படவில்லையென்பதும், அதன் ஓரே நோக்கம், வல்ல அல்லாஹ்வால் தன் தூதர்கட்கு உலகம் தோன்றிய காலத்திலிருந்து கொடுக்கப்பட்ட வேத உண்மைகளை மட்டும் இறுதியும் அறுதியுமாகத் தெளிவுபடுத்தி உண்மைப்படுத்தி அவற்றைக் குர்ஆன் மூலம் வெளிப்படுத்தி அங்கீகாரம் வழங்குவதற்காகவே அல்லாஹ்வால் அருளப்பட்டது என்பது புரிந்து கொள்ளப்பட்டால் காழ்ப்புணர்வுகளால் வெளிப்படுத்தப்படும் இதுபோன்ற அவதூறுகளை யாவது தவிர்த்துக் கொள்ளலாம். மேலாக, மதவிரோத நடவடிக்கைகளும் நீங்கி சமாதான சகவாழ்வை மேற்கொள்ளலாம்.
  1. கிறிஸ்துவுக்குப் பின் இறைவனுக்கு இப்படியோர் தேவை ஏற்படக் காரணமாயிருந்ததே, பைபிளில் மனிதர்களால் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, ஈற்றில் சாமான்ய மனிதர்களால் வரையப்பட்டவை கோர்க்கப்பட்டு அதுவே பைபிள் என்ற பெயரில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டமை காரணமாக இருக்கலாம். இது சாதாரண மக்கள் மத்தியில் இன்றும் காணப்படும் நடைமுறை. உதாரணமாக யாருடைய படைப்பாவது மாற்றப்பட்டு படைப்பாளனின் பெயரிலேயே மக்கள் மத்தியில் பார்வைக்கு விடப்படுபடுவது பாரிய குற்றச் செயலாகவும் மக்களை ஏமாற்றியதாகவும் கருதப்பட்டுத் தண்டணை வழங்குவது ஒருபுறம் இருந்தாலும், உண்மை நிலை சாட்சியங்களோடு, அல்லது நீதிமன்றங்கள் மூலம் மக்களுக்கு அறியப்படுத்துவது. அதுபோன்ற ஓர் செயலாக இறைவனின் இச்செயல் இருக்கலாம். நான் ஓர் கத்தோலிக்கனாயிருந்தால் போலியென உணர்ந்த பின்னராவது உண்மையுள் நுழைந்து இருப்பேன்.
  1. மிகச்சிறந்த பழக்க, வழக்கத்தை, பண்புகளைக் கொண்ட மனிதர்களின் சாட்சியமே யாராலும் மதிக்கப்படும். சாட்சியம் கூறப்படும் சம்பவத்துக்கும் பெறுமதியைத் தரும். அதனாலேயே யாவுமறிந்த இறைவன் முகம்மது அவர்களை அந்த வேலைக்காகத் தேர்ந்தெடுத்துள்ளான். அப்படித் தெரிவுசெய்யப்பட்ட உலகின் ஓரே மனிதர் என்ற பெருமையை முகம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே பெறுகின்றார் என்றால் தனி மனிதனுக்கு இதைவிடச் சிறந்த பெருமை ஒன்றை எங்கும் தேடுவதற்கில்லை என்றே ஆகின்றது. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த மனிதர்களாக அனைத்து உலகும் ஏற்றுக் கொண்டு பி;ன்பற்றப்படுபவர்களின் வேதவாக்குகளை உண்மைப் படுத்தும் தகைமை வழங்கப்படும் பாக்கியம் சாதாரணமானதா!
  1. மேலும்,  பின்வரும் வசனம், நாயகத்தின் நிலையையும், குர்ஆனின் தன்மையையும் உணர்த்துகிறது. ‘எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர். 27:79′.  குர்ஆனில் காணப்படும் பிரபஞ்சம் பற்றியதும் ஏனைய உண்மைகளும் அன்றைய அஞ்ஞான உலகில் 1400 வருடங்கட்கு முன்னர் எழுத வாசிக்கத் தெரியாத ஒருவரின் வாயிலிருந்து வெளிப்படுவதும் அவை, அவர் அறியாத உலகம் தோன்றிய கால முதலான வரலாறுகளும், எந்தப் பிழையுமின்றி இன்றுவரை இலங்கி வருவது இன்று ஆதார பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விஞ்ஞானிகளாலேயே ஏற்கப்பட்டு வருவதும் புனித குர்ஆன் இறைவனிடமிருந்தே இறக்கப்பட்டுள்ளதாக அவ்விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டும் வருவது எவரதும் கவனத்தை ஈர்ப்பன..
  1. முகம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஓர் அழகிய முன்மாதிரியாகப் படைத்துள்ளான்  ’33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. என்பதை மனத்திலிருத்துவது மேலும் மேற்கண்ட கருத்துக்கு வலுசேர்க்கும். முன்மாதிரியாக அதாவது sample சாம்பிளாகப் படைக்கப்படும் எதுவும் தனிப்பட்டவர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவனவல்ல. மாறாக எதன் மாதிரியாக இருக்கவேண்டுமோ அதுவாகவே இருக்க வேண்டும். அதனாலேயே நபியவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது எனக் கூறப்படுகிறது. முகம்மது அவர்களும் குர்ஆனைப் பின்பற்றுபவரே. ‘7:203. (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது – நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.’

  1. குர்ஆனில் வரும் வசனங்கள் நபியை முன்னிறுத்தி வந்திருந்தாலுங்கூட அவைகளெல்லாம் மனித வர்க்கத்திற்காக வந்ததே தவிர அவருக்கு மட்டும் உரியதல்ல. அப்படி எடுப்பது நமது குறுகிய சிந்தனையையே வெளிப்படுத்தும். இதனை விளங்கிக் கொள்ள எவ்வித பட்டப்படிப்பும் தேவையில்லை. மூன்றாந்தரத்தில் கற்கும் மாணவனே மிக இலகுவாக விளங்கிக் கொள்வான்.
  1. முகம்மதுவும் மரணத்தைச் சுவைத்;த மனிதரே. ‘ஓவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும்’ 3:185
  1. ’21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.’ இதன் மூலம் நபி அவர்களின் செயல்கள் யாவும் மனிதர்கள் பின்பற்றுவதற்காகத்தான் என்பது புரிகிறது.
  1. முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்த மதிப்பும், கௌரவமும் பின்கண்ட வசனம் விளக்கப் போதுமானதாகும். 8:33. ‘ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.’

இதனை மட்டும் விளங்கும் ஆற்றல் இருந்தாலே போதும் திருக்குர்ஆனின் 47:19 வசனத்தின் சொற்களுக்குக் கருத்துத் தேடி வீணே அலைக்கழிந்திருக்கத் தேவையில்லை. இவ்வசனத்தின் கருப் பொருள் நாமனைவரும் நமது குற்றங்களுக்காகப் பிழை பொறுக்க இறைவனிடம் வேண்டும் அதே வேளை,  இறைவனை நம்பியவர்களின் குற்றங்கட்காகவும் வேண்டுதலே. இதில் பின்வரும் உயர் தத்துவம், சுயநலமற்ற தன்மை, பெருந்தன்மை, பிறரும் நன்மை பெற வேண்டும் என்ற பரந்த மனப்பாங்கு முதலியன விரவிக் கிடக்கின்றன என்பதை அறியும் எவரும் அல்லாஹ்வையும், அவனது திருவசனங்களின் உயர் பண்பையும், அது உலக மக்களுக்காகவே அருளப்பட்ட அரும் பெரும் பொக்கிஷம் என்பதையும் அறிவர்.  மனிதர் பாவம் செய்யக் கூடியவர்களென்பதால் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பது ஓர் உயர் குணம் என்பதை எவரும்; அறிவர்.4:146. யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்;. மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.

இதிலிருந்து விளங்குவது,  அந்த வகையில் ‘இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக’ என்ற வசனத்தின் மூலம் மன்னிப்புக் கேட்கும்படி கூறப்பட்டவரோ அன்றி அப்படி மன்னிப்புக் கேட்பவரோ பாவஞ் செய்தவரென்ற கருத்தை வெளிப்படுத்தாது. அடுத்து, அன்றியும் உங்களுடைய நடமாட்டத் தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். என்றதிலிருந்து, நீங்கள் இப்படிக் கேளுங்கள் எனக் கூறியதற்காக நீங்கள் குற்றஞ் செய்தவர்களாக நான் கருதவில்லை என்பதை ‘உங்கள் நடமாட்டத்தையும் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான'; என்பது விளக்கும்.

இவ்வசனத்தின் கருத்தை மேலும் வலுவூட்ட அதற்கு முன்னோடியான வசனம் மிகவும் இன்றியமையாதது. அதாவது, ‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக’ என்பதுவே. இதனை விளங்க முகம்மது நபி (ஸல்) அவர்களின் காலம், குர்ஆன் அருளப்பட்ட போது அரேபியாவும், அகில உலகமும் இருந்த அனாச்சார நிலை கவனத்துக்கெடுக்கப்படல் வேண்டும். (இன்றே, – விக்கிரக வணக்கமும், அனாச்சாரங்களும், அறிவுக் கொவ்வாத மதமென்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகளும், மனிதர்களையே கடவுள் போன்று நினைத்து நடத்தும் பாத நமஸ்காரமும் – இந்த நிலையென்றால், அன்று 365 நாட்களுக்கும் 365 விக்கிரகங்கள் கஃபாவில் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கூத்தாடிய நிலையைச் சற்று பின்னோக்கிப் பாருங்கள்) ‘விசுவாசிகளிடையே ……….அவர்களோ நிச்சயமாக பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். 3:164′

மேலும், 40 வயதுக்குப் பிறகே நாயகத் திருமேனி முகம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிந்தனர், இறைவனிடமிருந்து பெற்றனர். அவரைப் பின்பற்றிய ஏனையோரும் அவ்வாறே. ஆக அவரும் அவரை அப்போது பின்பற்றியவர்களும், தோன்றிய சூழலில், வளர்ந்த வேளையில், விக்கிரக ஆராதனை பற்றிய சிறு சலனத்தையாவது தமது வாழ்வில் பெற்றிருக்க வாய்ப்புண்டு – அதாவது இறைவனைத் தவிர வேறு நாயன்களும் உண்டு என்ற எண்ணம் சில வேளை ஏறபட்டிருக்கலாம் முஹம்மது அவர்கள் ஒரு போதும் முஷரிக்காக இணைவைப்போராக இருந்ததில்லை என அல்லாஹ் கூறும் அதே வேளை, எண்ணகங்ளில் பெரும்பாலானவை பாவங்களாகும் எனக் கூறியதிலிருந்தும், நான் உம்மைப் பலப்படுத்தியிராவிட்டால், நீரும் அவர்களின் பக்கலில் சார்ந்திருப்பீர் என்றவாறும் கூறப்பட்ட திலிருந்தும். இன்ன பிற காரணங்களாலும் அவர்கள் மன்னிப்பை ஆஷிக்குமாறு கூறுகின்றான். அதாவது அவர்கள் மற்றவ்ரகளைத் தூய்மைப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதால், அதன் முன்னர் சிறு சலனங்கள்கூட இருக்கக் கூடாது என்பதற்காக இருக்கலாம். – அன்றைய அரேபியர் அல்லாஹ்வை நம்பினர். அத்தோடு தமது விக்கிரகங்களையும் நம்பினர். ஓரே கடவுள் என்ற கொள்கையையே அவர்கள் புறக்கணித்தனர். அல்லாஹ்வைப் பொறுத்து அவன் மன்னிக்க மாட்டேன் என்று கூறுகின்ற பாவம் இணை வைப்பதே.”4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.’  இங்கு அந்தப் பாவத்துக்காகவே இறைவனிடம் அனைவருக்காகவும் மன்றாடும்படி கேட்கச் சொல்வதன் காரணம், இஸ்லாத்துக்கு முந்திய நிலையில் நபியோ அல்லது பின்பற்றிய முஸ்லிம்களோ அறியாது அப்பாவத்தைச் செய்திருந்தால் அதை இப்போதே மன்னிப்புக் கேட்டு ஆக்கினை யிலிருந்து மீண்டு கொள்ள வேண்டுமென்ற கிருபா கடாட்சமே. காரணம் மறுமையில் நியாயத் தீர்ப்பு நாளில் மன்னிப்புகள் ஏற்கப்படுவதில்லையென இறைவனே கூறுகிறான்.

இறுதியாக மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் முக்கியத்துவம் பின்வரும் வசனத்தின் மூலம் அறியப்படலாம். ‘9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல‘.ஆக நபியவர்கள் முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) இவர்களுக்காக வேண்டியது கூடக் குற்றமாக இருக்கலாம். அதனால் உம்முடைய பாவம் என்பது முன்னைய வசனத்தில் குறிப்பிடப்பட்ட முஷ்ரிக்குகளுக்காக மன்னிப்புக் கோரிய குற்றத்தையும், இதன் பின்னர் நம்பிக்கை கொண்டோருக்காக பாவ மன்னிப்புக் கோரலாம் என்பதிலுமிருந்து மிகத் தெளிவாக நபிகளாரின் குற்றச் செயல் என்னவென்று தெரிகிறது. அத்தோடு செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்கும்படி பணிக்கப்படுகின்றது. இதற்குப் பின்னர் குற்றஞ் செய்யாதிருக்கும் வழிவகை கூறப்படுகின்றது. மாறாக உலக மக்கள் இதுவரை செய்த, உலக அழிவு வரை செய்யவுள்ள குற்றங்களுக்காக தாம் சிலுவையில் இரத்தஞ் சிந்தும் முட்டாள் தனத்தைச் செய்யுமாறு குர்ஆன் நபியைப் பணிக்கவில்லை. அவரை ஓர் மனிதராகவே குர்ஆன் கருதுகிறது. அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர்களே பதில் கூற வேண்டுமெனப் போதிக்கிறது.

நபிகளாரை ஓர் முன்மாதிரியாக இறைவன் ஆக்கியுள்ளதால், உலகு எதிர்வு கொள்ளவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் கொடுக்கப்படும் வகையில் அவரது காலத்திலேயே பிரச்சினைகளை ஏற்படுத்தி அவரை முகங் கொடுத்து தீர்வு கண்டு மக்களுக்கு முன்மாதிரி காட்டும் நிலையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். இச்சந்தர்ப்பங்களை நபிகளார் குற்றஞ் செய்தவர் என்பதாகக் குறை காண்பது எழுதியவரது இல்லாமையையும், இயலாமையையும், கல்லாமையையும்,காழ்ப்புணர்வையும்  இன்ன பிறவையும் வெளிப்படுத்துமேயன்றி நபிகளாரின் ஆளுமைக்கு எந்தக் குந்தகத்தையும் ஏற்படுத்தி விடாது.

ஆக இவ்வளவு உயர்ந்த நோக்கம் கொண்ட 47:19இல் கூறப்பட்ட அல்லாஹ்வின் திருவசனத்தில் குற்றங் காணவோ குறை காணவோ முடியாத நிலையில், இது முகம்மது பாவஞ் செய்தவர் என்பதை அவ்வசனம்; குறிக்கின்றது. அவரது பாவத்தை மறைக்க மொழி பெயர்ப்பாளர்கள் சொல் விளையாட்டை நடத்தியிருக்கிறார்கள் என்று மலையைக் கல்லி எலியைப் பிடிக்க முற்பட்டு மூக்குடைபட்டு உள்ளமையை என்னவென்று கூறுவது.

மேலும், குர்ஆன் மொழி பெயாப்பாளர் ஒரு அரபிச் சொல்லுக்குப் பல கருத்துக்கள் காணப்படும் வேளையில் தமது அறிவுக்கெட்டியவாறு ஒர் சொல்லைப் பாவித்து மொழி பெயர்த்திருப்பர். குர்ஆன் உய்த்துணர்ந்து அறிவு பெறவே படைக்கப்பட்டுள்ளதாக  இறைவன்; கூறும் போது அதைவிட்டு மொழி பெயர்ப்பாளரின் அறிவை தராசாகப்  பாவித்து குர்ஆனை அளக்க முயல்வது வெற்றுக் கண்களால் சூரியனைப் பார்த்து அதன் பருமனை, தன்மையை, பயன்பாட்டை இன்னபிறவற்றை அறிவதையொக்கும். அகப்பார்வை உடையோரும், அறிவு கொடுக்கப் பட்டுள்ளோருமே குர்ஆனின் ஞானங்களை அறிவர். சற்று நீங்களே  தனியே ஓரிடத்திலிருந்து யோசித்தீர்களென்றால் உண்மை விளங்கும். இனிமேலாவது இதுபோன்ற தற்கொலை முயற்சியில் இறங்க மாட்டீர்கள்;. சேறுபூச முற்படுவோர் தமக்கே முதலில் சேற்றைப் பூசிக் கொள்கின்றார்களென்பதை உணர்ந்தால் இதுபோன்ற இழி செயல்களைத் தவிர்க்கலாம்.

மைக்கல் ஹார்ட் என்ற கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த ஓர் ஆய்வாளர் உலகில் இதுவரை தோன்றிய சிறந்தவர்களை வரிசைப்படுத்தும் முயற்சியில் முகம்மது (ஸல்) அவர்களை முதலாவதாகக் குறிப்பிடுவதிலிருந்து மைக்கல் ஹார்ட் அவர்களின் பெருமை உயர்ந்துள்ளது. காரணம் அவர் உண்மைகளை ஏற்பவர் என்பதே. உண்மைகளை ஏற்போருக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் மதிப்பும் மாண்பும் உயரும் என்பது தெளிவாகின்றது. ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே….’ என்ற மூதுரைக்கேற்ப நல்லாரை இனங் காண்பவர் கூட புகழ் பெறுகிறார்.

மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பிரார்த்தனையை ஞாபகமூட்டி எனது கட்டுரையை முடிக்கிறேன். ‘ அறிவீனர்களில் நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்-2:67.’ அறிவற்றிருப்பதே மனிதனின் இழிநிலையென்பதால் அவர்களது தொடர்பைக் கூட இறைவன் விரும்பவில்லை. அறிவாளர்களின் பகை கூட ஆபத்தை விளைக்காது. அறிவீனரின் பகை மட்டுமல்ல, நட்பும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதே.

கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிவதன் ஆபத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சொந்தத்தில் விடயதானம் இல்லாதவனே பிறர் குற்றங்களைத் தேடி அதன் மூலம் தன்குறைகளை மறைத்து மலிவாக விளம்பரம் தேடி அலைகிறான். நாம் முஸ்லிம்கள் குர்ஆனின் பெருமைகளை எடுத்தியம்பா விட்டாலும் அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள், வானிலை ஆய்வாளர்கள், பௌதிக ஆராய்வாளர்கள் அவர்களின் ஆராய்ச்சிகளின் பயனாக குர்ஆனில் விரவிக் கிடக்கும் விஞ்ஞானப் பேருண்மைகளையும் இன்னபிறவையையும் ஆதார பூர்வமாக நிறுவி, தாம் கண்ட உண்மைகள் குர்ஆனில் காணப்படுவதால் தமக்கும் தமது ஆராய்ச்சிகட்கும் அங்கீகாரம் கிடைப்பதை உணர்ந்து உளம்புளகாங்கிதம் கொண்டு அதனை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

ஒன்றை மட்டும் கூறி எனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறேன். குர்ஆனில் வேண்டுமானால் மொழி பெயர்ப்பில் சிறுசிறு வித்தியாசங்கள் காணப்படலாம். அதனை அறிய அதன் பக்கத்திலேயே மூலக் குர்ஆன் அரபியுடன் இருக்கும். அதன் மூலம் அறிய விளைபவர் அறிந்து கொள்ளலாம். ஆனால் பைபிளின் மூலகர்த்தாக்களின் சுவிசேசங்களே பலவிடங்களில், பலவிடயங்களில் முரண்படுகின்றதே அதை நீங்கள் பார்த்ததே இல்லையா? உ-ம்: மத்தியூ 27:46, மார்க் 15:34 எள லூக் 23:46, ஜோன் 19:30. யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறக்கும் தருவாயில் எழுப்பிய அவலக் குரலில் ‘ கர்த்தரே! கர்த்தரே! என்னைக் கைவிட்டு விட்டீரா?’ என்று இறை நம்பிக்கையையே இழந்த நிலையில் ஒப்பாரி வைத்ததைக்கூட ஏகோபித்துக் கூற முடியாமல் முரண்பட்டு நிற்கின்றனரே.

யேசு கிறிஸ்துவின் வமிச வரலாற்றைக் கூறுவதில் கூட உங்கள் பைபிள் முரண்படுவது உங்களுக்கத் தெரியவில்லையா? ஆதியாகமத்தில் 19:31-38, லூர்தும் அவரது இரு பெண்பிள்ளைகளும் தகப்பனுடன் கூடி, இரு ஆண் பிள்ளைகளைப் பெற்றதாகக் கூறுவதை நீங்கள் பார்க்கவில்லையா? வேறு ஆண்களே அக்காலத்தில் இல்லையென்று கூறியே தமது வமிசம் பரவ வேண்டுமென்ற ரீதியில் தகப்பனின் வாரிசுகளைச் சுமந்ததால் அதன் தொடர்ச்சியாகத் தாமும் தமது இரு ஆண்பிள்ளைகளுடனும் கூடித்தானே பிள்ளைகளைப் பெற்றிருப்பர்.

மேலும், ஆதியாகமம் 38:13 – 18 இல் யூதாவும் தனது மகனுடைய விதவை மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது உமக்குப் புலப்படவில்லையா?

மேலும், யாத்திராகமம் 20:3 – 5, 34:14, லேவியராகமம் 19:4, 26:1, இராஜாக்கள்-18:23, முதலியவற்றில் மிகத் தெளிவாக வானத்திலோ, பூமியிலோ, இடையிலோ எப்பொருளையும் தனக்கு இணையாக்கி சித்திரமாகவோ, சிலையாகவோ செய்து அல்லது வேறுவிதமாகவோ வணங்க வேண்டாம் எனக் கூறியிருப்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் பண்ணி அந்தப் புண்ணியத்தையாவது தேடிக் கொள்ளலாமே!

மார்க் 7:27 யூதர்கள் தவிர்ந்த மற்றவர்களை நாய்கள் என்று கிறிஸ்து தன் வாயினாலேயே கூறியிருக்கிறாரே! மத்தியூ 12:39 இல் மரித்து மூன்று நாளின் பின் உயிர்த்தெழுதலுக்கு விளக்கம் கேட்டவர்களை ‘விபச்சாரச் சந்ததியினர்’ என கிறிஸ்து தன்வாயாலேயே கூறுவதை என்னவென்பதோ? இது போன்று ஆயிரக்கணக்கான அபாண்டங் களையும், அசிங்கங்களையும், அனாச்சாரங்களையும், அபத்தங்களையும், அறிவுக் கொவ்வாதவைகளையும் என்னால் பையிளிலிருந்தே தர முடியும். அது எனது தொழிலோ எனக்குத் தேவையோ, அல்லது அதனால் எவ்வித இலாபத்தையோ பெறப் போவதில்லை . அத்தோடு கால விரயம். இறைவன் கைவிட்டவர்களை மனிதர் திருத்த முடியாது, நபிகளாருக்கே அது அநுமதிக்கப்படாத போது நாம் அதில் ஈடுபடப் போவதில்லை. உலகில் அதிகமானோர் குர்ஆனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை இறைவனே கூறியிருக்க நம்மால் என்ன செய்ய முடியும்? ஆதலால் திருந்த வேண்டுமென்ற நோக்கில் இதனை எழுதவில்லை. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்க வேண்டாமெனவே கூறுகிறேன். நீங்கள் இருப்பது கண்ணாடிக் கூண்டென்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி முடிக்கிறேன்.

அறுதியாக, இறுதியில் பைபிளிலிருந்து  எடுத்துக் காட்டிய விடயம், எந்த வகையிலும் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவோரின் மனத்தைப் பாதிப்பதற்காக எழுதவில்லை. ஆனால், மற்றைய மதங்களிலுள்ள சில வசனங்களைத் திரிபுபடுத்திக் கூறும் சில மத போதகர்களுக்கு அவர்தம் சிந்தனை பிழையென்பதையும், அதனைவிட பாரிய பிழைகள் பைபிளில் காணப்படுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டவும் எழுதப்பட்டதே. நாம் அனைத்து வேதங்களையும், அதனைக் கொணர்ந்த தூதுவர்களையும் நம்பிக்கை கொள்ளவதுடன், அவர்களைப் பெரிதும் மதிப்பவர்கள். அன்றேல் எமது நம்பிக்கை கேளவிக் குறியாகி நாமும் நிராகரிப்போர் ஆகிவிடுவோம்.