நற் சிந்தனை! 15

 

நீதி செய்தால் மட்டும் போதாது, நீதி செய்வது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்!

இஸ்லாமியர் தம்மை ஒரு தனி இனமாக அடையாளப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மற்ற இனங்களிடமிருந்து ஒதுங்கி வாழும் இனமாக, சமூக இசைவற்ற இனமாக பிறர் கணிக்கும்படியான வாழ்க்கை வாழும் ஒரு சமுதாயமாக மாறிவிடக் கூடாது. அப்படி வாழ்தல், இஸ்லாத்திற்குச் செய்யும் அப்படடமான துரோகமாகும்.

இஸ்லாம் ஒரு நடைமுறை மாரக்கம். செய்து காட்டலினால் மக்கள் மத்தியில் அறிமுகமான மார்க்கம். செய்து காட்டல் என்னும் போதே அதில் மறைந்துள்ள உண்மை வெளிப்படையாக விளங்குகின்றது. செய்து காட்டலுக்கு பார்வையாளர் தேவையாக இருக்கின்றது. இங்கு செய்து காட்டல் என்பதில் பார்வையாளர்களைக் கூட்டி ஏதோ ஒன்றைச் செய்து காட்டும் வேலை நடைபெறுவதில்லை. ஆனால், மக்களோடு மக்களாக குர்ஆனின் அடிப்படையில் வாழ்வதன் மூலம் இஸ்லாம் கூறியுள்ள பண்புகளை நமது நடத்தையின் மூலம் வெளிப்படுத்துவதனால் உலகறியச் செய்ய முடியும். உண்மையிலேயே இதுவே சிறந்த தஃவாப் பணியாகவும் கருதலாம்.

அதனை விடுத்து, உடையணிதலின் மூலம் நாம் நம்மைத் தனிமைப்படுத்தும் போது, அதுவே ஒரு பாரிய இடை வெளியைப் பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் உருவாக்கிவிடும். அதற்காக நமது கலாசாரத்தை விட்டுவிட வேண்டுதென்பதில்லை.

இஸ்லாம் நிர்ப்பந்தமற்ற மார்க்கம் என்பதனாலும், அது ஆடையில் அடிப்படையான தன்மையை கூறி அதனைப் பின்பற்றச் சொல்லி இருப்பதிலும். நாம் மானத்தை மறைக்கக் கூடிய, அழகான, அலங்காரமான உடையை அணிவதில் அனைவருடனும் வேறுபடமாட்டோம். பெண்களைப் பொறுத்தும் உடலின் வளைவுகளை வெளிப்படுத்தாதவறான தொங்கும் தன்மையுள்ள ஆடைகள் நம்மை வேறுபடுத்திப் பார்க்க யாரையும் தூண்டுவதில்லை.

ஹறாம், ஹலாலைப் பேணுவதற்குக்கூட நமக்கு அல்லாஹ் இலகு வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளான். அது விலக்கப்பட்ட நான்கு உணவுகளை விலக்கி நடத்தலே! இதனைப் பின்பற்றுவதனால் யாருக்கும் எவ்வித அசௌகரியமும் ஏற்படுவதில்லை. பின்பற்றுவோருக்கும் கூட எவ்வித கஷ்டமுமில்லை. அல்லாஹ் மனிதருக்கு இலகுவையே விரும்புகின்றான். நமது பின்பற்றுதலின் மூலம் இஸ்லாம் பின்பற்ற முடியாத மார்க்கமாக பிறரிடம் காட்டப்படும் அதே வேளையில். நாம் பின்பற்றுவதனால் பிறருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கும் மார்க்கமாகவும் காட்டப்படுகின்றது. இதுவே முஸ்லிம்கள் மற்றைய மனிதர்களினால் வெறுக்கப்படுவதற்கான காரணங்களாகும்.

நாம் உண்ணும் உணவுகளையே உலகின் பெரும்பாலான மக்களும் உண்கின்றனர். அதிலிருந்து பெரிதாக வேறுபாடுகள் எதுவுமில்லை என்பதை மக்களறியச் செய்ய வேண்டும். அதனை நமது நடத்தைகளினாலேயே விளங்க வைக்கலாம். உதாரணமாக, செத்ததை யாரும் உண்பதில்லை. இரத்தத்தையும் பெரும்பாலானவர்கள் உண்பதில்லை. காரணம் அசுத்தம்என்பதே! அவற்றில் நோயை விளைவிக்கும் கிருமிகள் நிறைந்து காணப்படுகின்றன.

பலி கொடுக்கப்படும் உணவுகளை பெரும்பாலானவர்கள் உண்பதில்லை. அவை தெய்வங்களுக்காக அவர்களின் பெயர் கூறப்பட்டமை என்பதால் போன்றவை எடுத்துச் சொல்லப்பட்டால் வில்லங்கங்களும், வேற்றுமைகளும் காட்டப்படாது. அறுப்பதனால் அதிலுள்ள அசுத்த இரத்தம் வெளியேறுகின்றது. அறுப்பதற்கு நாம் நோய்வாய்ப்பட்ட பிராணியைத் தேர்வு செய்யமாட்டடோம். அதனால், நல்ல வியாதியற்ற, ஏற்கனவே செத்திராத, திடகாத்திரமான பிராணியை உண்பதனால் நாம் பாதிப்படைய வாய்ப்பில்லை என்பதனைக் கூறலாம்.

பன்றி இறைச்சியை பெரும்பாலானவர்கள் உண்பதில்லை. நமக்கு மட்டும் அது தடை செய்யப்படவில்லை. கிறிஸ்தவர்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும், இந்துக்களும், பௌத்தர்களும் கூட உண்பதில்லை என்பதுவும் மேலதிகமான உண்மைகள். விஞ்ஞானம் கூட,  பன்றி இறைச்சியை உண்பதனால் ஏற்படவுள்ள வியாதிகளை தெளிவாக விளக்கி உள்ளமை போன்றவை தெரிய வரும் போது, இஸ்லாம் மனித நலத்தின் அடிப்படையில் உணவைக் கூட பரிந்துரைத்ததுள்ளமை தெரிய வருகின்றது.

இதனையே நாம் வேறுவிதமாக, அல்லாஹ் கூறாத வழியில், தனித்துவமானவர்கள் என்றவாறாகச் செயற்பட்டு நடைமுறைப்படுத்தும் போது, நாம் மற்றவர்களைக் குறைவாகப் பார்ப்பது போன்றும், அல்லது அவர்களுக்கு தாம் அசுத்தமான உணவுகளைத் தின்று வாழ்பவர்கள் என்றும் நினைக்க வைப்பது போன்றும் மறைமுகமாகச் சித்தரிக்கப்படுவதாகவும் எண்ண இடமுண்டு. அதுவும் நம்மை அவர்கள் புறந்தள்ளுவதற்கான மறைமுகக் காரணமாக அமையலாம்.

அந்தக் காலங்களில் முஸ்லிம்கள் தமது உணவைப் பின்பற்றிய விதம் அனைத்துலக மக்களையும் கவர்ந்திருக்கின்றது என்பதை, அவர்கள் ஹறாமாக்கப்பட்ட உணவுகளை முஸ்லிம்கள் உண்ண மாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தமையையும், அவற்றை நமக்கு உண்ணுவதற்குப் பரிமாறாமல் அவதானமாக இருந்து வந்ததிருந்தமையையும் வைத்து அறிந்து கொள்ளலாம்.

வணக்க வழிபாடுகளில் கூட, குர்ஆன் கூறியுள்ளபடி, உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு. நாங்கள் வணங்குவதை நீங்களும், நீங்கள் வணங்குவதை நாங்களும் வணங்குவதில்லை. ஆனால், நாம் அனைவரும் இறைவன் என்று ஒரு கடவுள் உள்ளமையை ஏற்றே இருக்கின்றோம். ஆனால், வழிபடும் முறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் இறைவனால் தீர்மானிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு வணக்க முறை உள்ளது. எமது மார்க்கம், தொழும் முறையை எமக்குத் தந்திருப்பதனால் அம்முறையையே நாம் பின்பற்றுகின்றோம்

அது போன்றே, நீங்கள்,  உங்கள் மதத்தின் புண்ணிய தலங்களாகக் கருதப்படும் புத்தர் பிறந்த, மற்றம் நிர்வானமடைந்த இடங்களுக்கும், கிறிஸ்தவர்கள் தமது புண்ணிய தலங்களுக்கும், இந்துக்கள் காசி, திருப்பதி போன்ற தலங்களுக்கும் செல்வது போன்றே, நாம் முதல் மனிதனால் முதன் முதல் ஓரே இறைவனை வழிபடுவதற்காகக் கட்டப்பட்டுள்ள கஃபா என்றழைக்கப்படும் இடத்தைத் தரிசிக்கின்றோம்.

மற்றைய மதத்தவர்கள் உண்ணா நோன்பு இருப்பதைப் போன்று நாமும் வருடத்தில் ஒரு மாதம் முழுவதும் உண்ணா நோன்பு இருக்கின்றோம்.

தர்மம் செய்வதனை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன! எமக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், இல்லாதோருக்கும். கடனாளிகளுக்கும், விடுபட வேண்டியவர்களுக்கும், வழிப் போக்கருக்கும், இறைவழியில் தம்மை அர்ப்பணித்தோருக்கும் தர்மம் வழங்குமாறு பணித்துள்ளான்.

அத்தோடு எமது சொத்தில் இரப்போருக்கும். இரவாதோருக்கும். இல்லாத ஏழைகளுக்கும் பங்கு உண்டென இறைவன் கூறியுள்ளான். இவற்றிற்கும் மேலாக, ஏழைகளுக்குக் கட்டாயமாக ஸக்காத் என்னும் ஏழை வரியைக் கொடுத்து விடும்படி பணித்துள்ளான். இவையே நாம் செய்து வருவன.

இது போன்று பழிவாங்கல், மன்னித்தல், அளவு கடவாது எதனையும் செய்தல், நிர்ப்பந்தத்தின் பேரில் சிலவற்றைச் செய்வதற்கான அனுமதி, நாட்டுக்கு நம்பிக்கையாக நடத்தல், தலைமைகளுக்கு, அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு நடத்தல், அளவு, நிறைகளில் நேர்மையாக நடத்தல், அனுமதியின்றி அடுத்தவர் பொருளை உண்ணா திருத்தல், அனுமதியின்றி அடுத்தவர் வீட்டிற்குள் நுழையாதிருத்தல், களவு, பொய், கொலை, விபச்சாரம், கொள்ளை, கேலி, கிண்டல், பரிகாசம், ஏற்றத் தாழ்வு காட்டல், துருவித்துருவி ஆராய்தல், புறம் பேசல் அவதூறு விளைத்தல் போன்றவற்றை தவிர்த்தல், நாடாமல் இருத்தல்களை நமது செயற்பாடுகளின் மூலம், நாம் நெருங்கி, அவர்களுடன் பேதமை பாராட்டாது ஒழுகி வெளிப்படுத்தி, வருவோமேயாகில், அது அந்நியரை நம்மேல் பிரியத்தை ஏற்படுத்த உதவவே செய்யும்.

அனைத்திற்கும் மேலாக. இஸ்லாம் முஹம்மது நபி அவர்களுக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்ட ஒரு மார்க்கமல்ல. அது உலகம் தோன்றியதிலிருந்து, இறைவனால் மக்களுக்குப் பின்பற்றுவதற்காக. வெவ்வேறு காலங்களில். தனது தூதர்கள் மூலம் இறக்கி அருள்ப்பட்ட வேதங்களில் கூறப்பட்டவையை உண்மைப்படுத்தவும், சாட்சி கூறவும், பேணிப் பாதுகாக்கவும் என இறக்கி அருளப்பட்ட இறுதி வேதமே தவிர இல்லை என்பதைத் தெளிவாக விளங்க வைக்கலாம். இவை அனைத்தும் பிரச்சாரம் என்ற மாதிரியில் அல்லாது, நாம் அவர்களுடன் – மக்கள் மத்தியில் – மனிதர்களில் வேற்றுமை கிடையாது என்ற அடிப்படையில் நெருங்கி, ஒற்றுமையாக, பரஸ்பரம் உதவி வாழும் நமது நடத்தைகளின் மூலம் அவர்களுக்குத் தெரிய வைப்பது.

அல்லாஹ் நபிகள் நாயகத்தை மனிதர்களுக்கு முன்மாதிரியாகப் படைத்துள்ளான். ஆக மனிதர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியவர்கள். நபிகள் பெருமான் தற்போது உலகில் வாழாமையால், அவர்களின் வழி வந்தவர்கள் என்ற வகையில், முஸ்லிம்கள் நடுநிலையுள்ள சமுதாயமாகப் படைத்துள்ளான் என்பதையும் பேணி, நபிகளாரைப் போன்று முன்மாதிரியாக முஸ்லிம்கள் வாழும் போது, அல்லாஹ்வின் நாட்டமிருந்தால், நாம் மற்றைய மக்கள் நம்மை விரும்பிப் பின்பற்றும் நிலையையும் ஏற்படுத்தி விடலாம்.

 
அது தாடி வைத்து, ஜுப்பாபோடுதல், தலைப் பாகைகட்டுதல், நிகாப், ஹிஜாப்,  அபாயா,  கறுப்பு,  பச்சை நிறங்கள் என்பவைகள் அல்ல என்பதையும்,  அந்த உடைகள் அவர்களின் கலாசார உடைகள் என்பதையும், அவை இஸ்லாமிய உடைகள் அல்ல வென்பதையும், அறிந்து கொள்ளல் அவசியம். முன்மாதிரி என்பது நடத்தையே தவிர உடைகள் அல்ல.

இவ்விடத்தில் நான் ஒரு கேள்வியை எழுப்புவதன் மூலம் உடை பற்றிய உண்மையை,  அதனை இஸ்லாம் எவ்வளவு நாசூக்காக வெளிப்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். வட துருவத்தில், அந்த பனிப் பாறைகளில் மத்தியில் வாழும் ஒருவன், அரேபியாவில் உடுத்தும் அவர்களின் கலாசார உடையுடன்அங்கு வாழ முடியுமா! ஆனால். இஸ்லாமிய, குர்ஆன் பரிந்துரைத்த உடை எந்த உடைக்குள்ளும் தன்னை உள்வாங்கிக் கொள்ளும். அதுதான் அடிப்படையான முறைமையின் மகிமை!

அல்லாஹ் இஸ்லாத்தை நமக்கு முழுமையாக்கி, பூரணப்படுத்தி, அவனது முழுமையான அருளாகவும் அதனை ஆக்கி, நமக்காக இறக்கி அருளப்பட்ட குர்ஆனின்படி முஸ்லிம்கள் நடந்து வருவார்களேயானால் முழு உலகுமே, நமது எதிரிகளுட்பட, நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. முஸ்லிம்களே மேன்மையானவர்கள். அவர்களே வெற்றியாளர்கள் என்பதனால் விளங்கப்படுவதும் இதுவே!

மொத்தத்தில் நாம் பிறருக்குக் கண்ணாடி போன்று, அவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மனித நேயத்தைப் பெரிதாக மதிப்பவர்கள், ஒரு சீரான வாழ்க்கைத் திட்டத்துடன், பிறருக்குத் தொல்லை தராது, அனைவருடனும் ஒட்டி உறவாடி, நன்மை, தீமைகளில் பங்கேற்று, உதவிகளையும், நன்மைகளையும் செய்து, உண்மைபேசி, நீதி,  நியாயமான வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் என்பதனை நமதுசெயற்பாட்டின் மூலம் உலகறியச் செய்ய வேண்டியவர்கள்.

அல்லாஹ் தனக்கு உதவும்படி கூறி இருப்பதுவும் இதுவே! அவனின் உயர்ந்த தன்மைகள் உலகுக்கு வெளிப்படும் கருவிகளாக நாம் இருத்தல் அவசியம். நபிகளாரைப் பற்றி அல்லாஹ் புகழந்து கூறிய நற்சாட்சிப் பத்திரமும் அதுவே. அது, ‘நீர் உயர் குணங்களின் உன்னத நிலையில் இருக்கிறீர்’. அதனாலேயே அவர் பின்னப்பற்றப்பட வேண்டியவராவார் என்ற அடிப்படையில், அருளாகவும், முன்மாதிரியாகவும் ஆக்கப்பட்டவர்கள்.

 

- நிஹா -