இஸ்லாத்தை ஏற்பதில் அதிகமானோர் தயக்கம் காட்டுவதேன்!
இஸ்லாம் பின்பற்றுவதற்குக் கடினமான மார்க்கமா!
ஓன்றை ஏற்பதற்கும், தயக்கம் காட்டுவதற்கும், மறுப்பதற்கும்கூட ஏதோ ஒரு வகையான அறிவு, சம்பந்தப்பட்ட ஒன்றில் இருக்க வேண்டும். அந்த அறிவுகூட உரிய வழியில் பெற்றுக் கொண்டதாக இருக்க வேண்டும். அது முழுமையான அறிவாக இல்லாவிடினும் கூட பரவாயில்லை, தவறான அறிதலால் வந்த அறிவாக இருக்கக் கூடாது. தெளிவின்மை, கஷ்டம், சந்தேகம், போன்றன நம்பிக்கை ஏற்படாத நிலையை உருவாக்கி விடுவதால். முடிவு எடுக்க முடியாத தன்மையை உருவாக்கி விடுகின்றது. இந்நிலையில்தான் நமது பகுத்தறிவு ஏற்பையோ, மறுப்பையோ, தயக்கத்தையோ வெளிப்படுத்தி அதனால் கால தாமதத்தையும் ஏற்படுத்துகின்றது.இது தவிர, சில புறக்காரணிகளால் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்களான பாரம்பரிய முறைகள், குடும்ப நிலையின் பல்வேறு அம்சங்கள், சமூக விமர்சனங்கள், அந்தஸ்து, பதவி, அதிகாரம், வசதி, வாய்ப்புகள். நட்பு போன்றவைகூட ஏற்பதில் தயக்கம் காட்டுவதில் கணிசமான பங்கை வகிக்கவே செய்கின்றன.
ஏற்பது என்ற நிலையோடு சில விடயங்கள் நின்று விடுவதில்லை. அடுத்ததாக, பொருளாயின் வாங்குவதையும், மார்க்கமாயின் நடைமுறைப்படுத்துவதையும், இன்னொன்றை ஒதுக்குவதையும் அல்லது அதிலிருந்து விடுபடுவதையும் செய்ய வேண்டி யுள்ளமையும் தயக்கத்துக்கான இடையூறுகளைச் செய்யாமலில்லை.
உதாரணமாக, ஒன்றைப் பற்றிய உண்மை நிலையை அறிந்தால்கூட அதனை ஏற்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. தரமான பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பவன், உண்மையில் தரமான பொருள் பற்றிய சரியான தகவல்களைப் பெற்றிருந்தாலும், அப்பொருளைப் பெற்றுக் கொள்ள முடிவதில் பல இடர்பாடுகளுக்கு முகங் கொடுக்கவே வேண்டியுள்ளது. அவற்றில் பொருளாதாரம், அப்பொருளைக் கையாளக்கூடிய அறிவு, அப்பொருளை வாங்குபவர் சரியாகப் பயன்படுத்தக் கூடியவரான நிலை, போன்றவைகூட அப்பொருளைப் பெற்றுக் கொள்வதில் தடைகளாக அமைந்து விடுகின்றன. பின்னர் வரக்கூடிய மேற்கண்ட தலைப்பிலான ஆக்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இந்தளவே போதுமென நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!
இஸ்லாத்தை அறிதல்
இஸ்லாத்தை அறிவதில் பல வழிகள் உண்டாயினும், சிறப்பாக இஸ்லாமியரைப் பார்த்து பின்பற்றுதல், குர்ஆனிய உண்மைகளை புடம்போட்டு, உய்த்துணர்ந்து நல்லறிவு பெற்று இஸ்லாத்தை ஏற்றல் என்ற இரண்டும் முக்கியமானவையாகக் கருதலாம்
இவ்விரண்டிலும் முன்னையதே அதிகமானோரின் பார்வைகளிலும், கேள்விகளிலும் அதிகமாக போஷனை செய்யப்படுவதால், தாக்கத்தை ஏற்படுத்துவதால், அந்தப் போஷனைகள் குர்ஆனிய அடிப்படையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதால், மனோஇச்சைகள், பெருமளவிலான இடத்தை மார்க்கம் என்ற ரீதியில், ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதால் இஸ்லாம் வேறு ரூபத்தில் மக்களைச் சென்றடைகின்றது. இது ஒரு முக்கிய காரணியாக, இஸ்லாத்தை ஏற்பதில் தயக்கத்தையும், மறுப்பையும் சில வேளைகளில் தூஷனையையும் பெற்றுத் தருகின்றது.
ஆக இஸ்லாத்தை அறிய விரும்புவன் இஸ்லாமியரைப் பார்த்து முடிவு எடுக்கும் நிலை மாறாதவரை இந்த தயக்கமும் இருந்து கொண்டே இருக்கும்.
நபிகளார் காலத்து நிலை அப்படி இருக்கவில்லை. நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தே பின்பற்றல் நடைபெற்றது. அங்கு நபிகளாரின் வாழ்க்கை குர்ஆனில் கூறப்பட்டவற்றைச் செயற்படுத்திக் காட்டுவதாகவே இருந்ததால் இஸ்லாமியரைப் பார்த்துப் பின்பற்றல் வெற்றியையே தந்துள்ளது.
அல்லாஹ் கூட தன்னருள் மறையின் சூரத்துல் பாத்திஹாவில் இறுதி பகுதிகளில் நீ யாரையெல்லாம் வழிநடத்தி வெற்றி பெற்றார்களோ அவ்வழியில் எங்களையும் செலுத்துவாயாக எனக் கேட்குமாறு பணித்துள்ளான். இதிலிருந்து அறியப்படுவது, நடைமுறையில் நேர்வழியில் நடந்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றல் என்பதாகும். இந்த வகைப் பின்பற்றலும் நம்மை சரியான வழியில் செலுத்தும். ஆனால் அப்படியானவர்களை இந்நாட்களில் சந்திப்பது மிக அரிதாகவே உள்ளது. ஆதலால், அப்படியானோரின் சரிதைகள் நமக்கு ஓரளவு உதவலாம்.
அதனால்தான் இலகு வழியாக, குர்ஆனையும், நபிகளாரின் வாழ்க்கையாக ஓரளவு கருதப்படும் ஹதீதுகளையும் பின்பற்றல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படியாயினும்இ குர்ஆன் ஒன்றே நூறு வீத நம்பகத் தன்மையுடையது.
இஸ்லாத்தை அறிந்து பின்பற்றுபவர்களா தற்போதைய முஸ்லிம்கள்!
இந்தக் கேள்வி, திருப்தி தரக்கூடிய பதிலைக் கொண்டிருக்க வில்லை. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக, தமது பெற்றார் வழியிலேயே முஸ்லிம்களாக்கப்பட்டுள்ளனர். தாயோ, தகப்பனோ முஸ்லிம் என்பதால் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களே அநேகமானோர். அவர்கள் புனித குர்ஆனை அரபுப் பாஷையில் ஓதவும், மனனம் செய்யவும் கூடியவர் களாகவும், பாரம்பரிய முறையில் அல்லது சில இஸ்லாமிய வெளியீடுகளை வாசித்ததன் மூலம் பெற்ற அறிவோடு இஸ்லாத்தைப் பின்பற்றி வருபவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் குர்ஆனியக் கருத்துக்களை அறிந்தவர்கள் அல்லர்.
ஷரிஆ என்று ஓர் இஸ்லாமியச் சட்டம் உள்ளதாக அறிந்து வைத்திருப்போரில் எத்தனை பேர் அச்சட்டங்களைக் கண்டு, வாசித்து, விளங்கி, அவை குர்ஆனோடு ஒத்துப் போகும் பண்பைக் கொண்டுள்ளன என்பதை அறிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக் குறியே! அடிப்படையான சில விடயங்களைச் சிறு வயதில் மத்ரஸாக்கள் என அழைக்கப்படும் இஸ்லாமிய கல்வி நிலையங்களிலும், பாடசாலைகளிலும் கூட கற்று, அவற்றைப் பாடம் பண்ணியும் வைத்திருப்பர்.
இவற்றைக் கொண்டு முஸ்லிம்கள் குர்ஆனை தமது மொழிகளில் வாசித்து, விளங்கி, நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்களா என்பதுகூட விசாரணைக்குரியதே! சிலர் தமது மொழியில் வாசித்து விளங்கி வைத்திருந்தாலும் கூட குர்ஆனின் அறிவுக் கருவூலத்தை சிறிய அளவிலாவது உரசிப் பார்த்திருப்பார்களா? அன்றி அதன்படி நடக்கவாவது செய்கின்றார்களா! என்ற கேள்வியும் முழுமையான பதிலைப் பெறுவதில்லை.
இதனால்தான் அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் சிந்தனை பற்றியும், ஆய்வு பற்றியும் வலியுறுத்துவதுடன், இடித்துரைக் கின்றான். இக்கட்டுரை இஸ்லாமியரின் குர்ஆன் பற்றிய அறிவை விமர்சிக்கும் ஒரு கட்டுரை அல்ல. கட்டுரையின் தலைப்பிற்கு போதுமான அளவில் இஸ்லாமியரின் இஸ்லாமிய அறிவு பற்றி அலசவே வேண்டியுள்ளது.
இஸ்லாமியரில் இஸ்லாமிய அறிவு
இவர்களில் இஸ்லாமிய அறிவு எந்த அளவில் உள்ளது எனப் பார்ப்போமாயின், இந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ – ‘அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற வாசகத்தை மத்ரஸாவிலோ பாடசாலையிலோ கற்றலின் அடிப்படையில் ஓதியோ, கூறியோ இருப்பவர்தான். இவர்கள் ஐந்து கலிமாக்களையும் அரபியிலும், அவரவர் பாஷைகளிலும் கூட பாடம் செய்து வைத்திருப்பர். ஆனால், இரண்டாவது கலிமாவான சாட்சியம் கூறுவதைக்கூட செய்திருக்க மாட்டார்கள்.
மேலும், ஆறு காரியங்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும் என்பதை அழகாக அரபியிலும், ஏன் தமது பாஷையிலும்கூடக் கூறுவர். ஆனால், அல்லாஹ் பற்றிய அறிவோ, மலக்குகள் பற்றிய அறிவோ, வேதங்கள் பற்றிய அறிவோ, இறை தூதர்கள் பற்றிய அறிவோ. மறுமை பற்றிய அறிவோ, கலா கத்ர் என்று சொல்லக்கூடிய விதி, தீர்ப்பு பற்றிய அறிவையோ அவர்கள் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.
இன்னும், ஐந்து கடமைகள் உண்டென்று மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பர். அதிலுள்ள முதலாவது கடமையான கலிமாவைப் பாடம் பண்ணியும் வைத்திருப்பர். அதுவே போதுமென்ற எண்ணமே அவர்களிடம் மிகைத்திருக்கும்!
அடுத்து தொழுகை, ஐவேளை தொழுதால் சரி அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். அவர்கள் சொர்க்கம் சென்றுவிடுவர் என்ற நம்பிக்கையோடு இருப்பர். வேண்டுமானால் தொழுகையின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் சில ஹதீதுகளைப் பாடம் பண்ணி வைத்திருப்பர்.
வருடமொரு முறை நோன்பு பிடிப்பது, செல்வம் இருந்தால் வருடமொரு முறை நோன்பு மாதத்தில் குறிப்பாக நோன்பு 27ஆவது நாளில் சில சில்லறைகளை யாசிக்க வருவோருக்குக் கொடுப்பர். இன்னும் சிலர் தமது பெருமையைக் காட்டிக் கொள்வதற்காக வேறு வகையில் அத்தர்மத்தை செய்வர்.
இறுதியாக ஹஜ். இதனைத் தற்போது, தொழாதவர்கள், கலிமா தெரியாதவர்கள், இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவேகூட இல்லாதோர்கூட செய்ய முற்படுகின்றனர் என்றால் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். இவைகள்தான் இஸ்லாம் என்று முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டுக் கொண்டு இருப்பவை. தனியாள் ஆத்மீக உயர்வு என்ற ஒன்று உள்ளது என்பது சிறிதளவுகூட சிந்தனையில் இராது. சொர்க்கம் பற்றிப் அவ்வப்போது பேசிக் கொள்வர்.
இஸ்லாமியரின் நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாம் பற்றிய ஒரு முடிவுக்கு வரமுடியாது என்பதை மேற்கண்ட சில குறிப்புகள் வெளிப்படுத்தும்.
இஸ்லாமியரைப் பார்த்து, இதுதான் இஸ்லாம் என ஒருவர் நினைந்து அதன் மூலம், தனது சிந்தனையை வளர்ப்பாராயின், அன்றி நடைமுறைப்படுத்துவாராயின் அவரும் வழிகேட்டில் விழும் சந்தர்ப்பம் அதிகமாகவே காணப்படும். காரணம் அதிகமான முஸ்லிம்கள் பிறப்பால் பின்பற்றலை மேற்கொள்பவர்களே!
இந்த தயக்கத்திலிருந்து விடுபட்டு இஸ்லாத்தை ஏற்பவர்கள்கூட, ஷஹாதா கலிமாவைக் கூறிவிட்டால் இஸ்லாமியர். அவர் அதன் பின்னர் தொப்பி ஒன்றைத் தனது மேலதிக அங்கியாக அணிந்து கொண்டு பள்ளி சென்று தொழுதால் சரி என்ற நிலை. இன்னும் கொஞ்சம் கூறினால். சிலர் குர்ஆனை ஓதப் படிக்கிறார்கள்.
இஸ்லாத்தை ஏற்பதற்கு அது பற்றிய அறிவு:
அறிவின்றி எதனையும் ஏற்க முடியாது. ஆயினும், ஆய்வற்ற நம்பிக்கையுடன் ஆரம்ப நிலையில் ஒன்றை ஏற்பதில் தவறுமில்லை. ஆனால். அந்த நிலையே தொடர்வது எற்புடைத்தல்ல. ஆதலின், குர்ஆனை அறிவதே இஸ்லாத்தை ஏற்பதற்குரிய ஓரே சாதனமாகின்றது.
அல்லாஹ்கூட, நமது நாயகம் முகம்மது ஸல் அவர்களுக்கு குர்ஆனையே தனது வஹீ – செய்தி- யாக அறிவித்தான். குர்ஆனிய அறிவு பெற்ற பின்பே, அவர்கள் அழைப்புப் பணியில், அவனின் அனுமதியுடன் ஈடுபட்டார்கள். ஆரம்ப நிலையென்றதனை, இஸ்லாத்தின் நுழைவாயிலாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நுழைவாயிலில் யாரும் படுத்துத் தூங்கி விடுவதில்லை. இஸ்லாம் என்ற மார்க்கத்தில் வீறு நடைபோட்டு இறை திருப்தியை, அவனது நெருக்கத்தைப் பெறுவதாக இருக்க வேண்டும். மாக்கத்தில் படுத்துக் குறட்டைவிட்டுக் கொண்டிருப்பதல்ல.
ஒன்றை அறிந்து செயற்படுத்தும்போது. தாக்கங்கள், விளைவுகள், பயன்கள் ஏற்பட வேண்டும். அப்பயன்கள் நமக்கு நாம் எதிர்பார்த்த இலக்கை அடையப் பயன்படுவனவாக அமைதல் வேண்டும்.
இஸ்லாமிய அறிவை எங்கிருந்து பெறுவது?
இஸ்லாமிய அறிவை, இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களில் இருந்தோ, நடைமுறைகளில் இருந்தோ, சட்டங்களில் இருந்தோ பெற முனைவது, சரியான வழியில் நம்மை நடத்துவது ஆகா. அது சரியான பாதையை நமக்குக் காட்டுவதில் முழுமைத் தன்மையைக் கொண்டிராது. குருட்டுத் தனமான, வழிவழியான, நடைமுறை யிலுள்ளவையான என்ற பண்புகளோடு பின்பற்றப்படுபவை இஸ்லாமாகிவிடாது.
முன்னேயொரு பந்தியில் ‘இஸ்லாத்தை அறிந்து பின்பற்றுபவர்களா தற்போதைய முஸ்லிம்கள்!’ என்ற உப தலையங்கத்தில் சில விடயங்களைத் தந்துள்ளேன். அது போதுமானது.
இஸ்லாத்தை ஏற்கத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ள முஸ்லிம்களின் சில நடவடிக்கைகள்
தலைப்பிற்கு வருவோமாயின், முதலில் ஆடையை எடுத்துக் கொள்ளலாம். அது மக்களின் வாழ்வில் மிகப் பிரதானமான பங்கை வகிப்பது. முஸ்லிம்களின் உடையாகத் தற்போது பிழையான விளக்கத்துடன் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண்களின் அணிகலன்களான தொப்பி, தலைப்பாகை, நீண்ட அங்கி, தோளில் துப்பட்டி போன்றவையும், பெண்களின் முகத்திரை, பர்தா, ஹிஜாப், நிகாப், அபாயா போன்றவையும் அந்நிய மக்களை மயக்கத்திலும் தயக்கத்திலும் ஆழ்த்தி விட்டுள்ளன.
.
காரணம் இப்படி அணிந்தால்தான் அவர்கள் முஸ்லிம்கள் என்று கணிக்கப்படுவார்கள் என்பது போன்ற ஓர் மாயை ஏற்படுத்தப் பட்டுள்ளதே! இப்படி உடுத்தினால்தான் இஸ்லாமியர் என்ற ஓர் மாயையை சில இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், இவ்வுடையை எப்படி உடுப்பது என்பதும் அவர்களின் தயக்கத்தை உருவாக்கியவற்றில் ஒன்றாகும்.
உண்மையாகக் குர்ஆனை வாசித்து, ஆடை பற்றிய அறிவைப் பெற்ற ஒருவருக்கு,மேற்கண்ட பின்பற்றுதல்கள் இன்றி, குர்ஆன் பரிந்துரைத்த ஆடைகளுடன் அனைவரோடும் வாழலாம் என்ற பேருண்மை புலப்படுகின்றது. குர்ஆனில், ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை’ என்ற பகறாவின் 256 ஆவது வசனம் அனைத்து நேரங்களிலும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். ஆடை பற்றி அல்லாஹ் கூறுகையில், மானத்தை மறைக்கக் கூடியதும். அழகானதும், அலங்காரமானதுமான ஆடைகளையே அணியுமாறு நமக்கு ஆலோசனை கூறுகின்றான்.
அரேபிய கலாசார ஆடை இஸ்லாமிய ஆடையா!
அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான போது, அங்கு நடைமுறையில் இருந்த மேற்போந்த ஆடைகளை அல்லாஹ் ஏற்றிருப்பானாயின், அந்த ஆடைகளையே நம்மையும் அணியுமாறு கூறியிருப்பான். ஆனால், இஸ்லாம், பரந்துபட்ட இடப்பரப்பையும். பல்வேறு காலநிலைகளையும், மனிதர்களையும், வசதி வாய்ப்புகளையும் மனத்திலிருத்தி, ‘அடிப்படை ஆடை’ பற்றிய தகவல் ஒன்றைத் தந்துள்ளது. இந்த ஆடையானது உலகில் எங்கு வாழும் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும், வெப்பதட்ப சூழ்நிலைகளுக்கும், தமது உத்தியோகங்கள், வசதிகள், வாய்ப்புகள், போன்ற பல்வேறு அம்சங்களுக்கும் ஏற்றவாறு தேர்வு செய்து இறையுத்தரவை மீறாமல் அணிந்து கொள்ள முடியும். அனைத்துக்கும் இடம் கொடுக்கும் வகையிலான ஆடையே பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதை குர்ஆனை ஆய்வோர் கண்டு கொள்வர்.
பாலைநிலத்தில் வாழும் ஒருவர் அணியும். உடையை பனிப் பிரதேசத்தில் வாழ்பவர் உடுத்திட முடியாது. உழைப்பாளி உடுத்தும் ஆடையை ஒரு பொலிஸ்காரரோ, உயர் அதிகாரியோ, ஏன் ஓர் ஆசிரியரோகூட அணிந்திட முடியாது.
அதுபோன்றே பெண்களுக்கும் முன்னைய பரிந்துரைப்பிற்கு மேலதிகமாக, சிலவற்றைக் கூறி நிற்கின்றது குர்ஆன். அது, பெண்களின் உடல் கவர்ச்சியோடு படைக்கப்பட்டுள்ளதால், அதனால் சமூகத்துள் அசம்பாவிதங்களையோ தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு அசௌகரியங்களையோ, தொல்லைகளையோ ஏற்படுத்தாது பாதுகாக்கும் நோக்கைக் கொண்டது.
ஆண்களின் ஆடை மானத்தைக் காத்து, அழகையும் அலங்காரத்தையும் வெளிப்படுத்தினாலும், பெண்களின் ஆடை, மானத்தைக் காப்பதுடன், அலங்காரத்தை அதிகமாக வெளிப்படுத்தாத தன்மையையும், உடலின் அவயங்களின் கவர்ச்சிகளை வெளிப்படுத்தாத பண்பையும் கொண்டிருப்பதுடன் அவைகளையே அவர்களின் பாதுகாப்புக் கேடயமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று உலகில், முஸ்லிம்களின் உணவு ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது. இது முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டதினாலும். மனித சட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க முனைந்ததனாலும் ஏற்படுத்தப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
காரணம், ஆடையில் கூறியதற்கு மேலதிகமாக, விலக்கப்பட வேண்டிய உணவையும் பட்டியலிட்டு, உலகில் எந்த மார்க்கமும் சட்டமும் கூறிடாத அளவில், இரத்தினச் சுருக்கமாக எவற்றை உண்ணலாம், எவற்றை உண்ணலாகாது எனவும். நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தடைசெய்யப்பட்ட உணவையும் அத்துமீறாமல், அளவு கடந்திடாமல் உண்ணுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்துள்ளான்.
ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் குர்ஆனில் மிகத் தெளிவாக விரித்துரைத்த சட்டங்களை விடுத்து, தாமே தமது இச்சைக்கேற்ப ஹலால் – ஹறாமைத் தீர்மானிக்கின்றனர். இது முழுமையாக இஸ்லாத்தை நிராகரிக்கும் செயலே. ஆனால் துரதிருஷ்டவசமாக இதனையே அவர்கள் பெருமையாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இது ஷிர்க்கை வருவிப்பதாகவும் உள்ளதாக குர்ஆனின் மூலமாக அறிகின்றோம்.
ஆக இந்நிலையைப் பார்க்கும் ஒருவர் இஸ்லாம் பின்பற்ற முடியாத மார்க்கம் என்ற முடிவுக்குள் தள்ளப்படுகின்றார். அல்லது இஸ்லாத்தை ஏற்பதற்குத் தயங்குகின்றார் அன்றி நிராகரிக்கின்றார். அதனால்தான் இஸ்லாத்தை அறிய விரும்புவோர், குர்ஆனையே அறிய வேண்டும்.
நாம் X எக்ஸ் என்ற ஒருவரைப் பற்றி அறிய வேண்டுமாயின், எக்ஸின் தகப்பனை, தாயை, சகோதரரை, நண்பர்களை, உற்றார், உறவினரை அறிவதன் மூலம் அல்லது அவர் பற்றி யாரோ கூறும் கருத்துக்களை வைத்துக் கொண்டு X எக்ஸ் பற்றிய சரியான முடிவைப் பெற்றுக் கொள்ள முடியுமா! ஆதலால், X எக்ஸை அறிவதாயின் அவர் பற்றிய ஆய்வை மேற்கொண்டே, அவரை வைத்தே நடாத்தி, கண்டு கொள்ளலாம்.
அது போன்றே இஸ்லாத்தை அறிய விழைபவர் நேரடியாகவே அவர் விளங்கும் பாஷை ஒன்றிலுள்ள ஏற்கப்பட்ட குர்ஆனிய மொழி பெயர்ப்பு ஒன்றைப் பெற்று அறிந்து கொள்ளலாம். இதற்கும் மேல் அறிந்தவர்களின் உதவியை நாடலாம்.
அடுத்த ஒரு முக்கியமான விடயம், அதிகமானோரால் பிழையாகவே அர்த்தம் கொள்ளப்பட்டு, அதுவே சரியெனப் பினபற்றப்பட்டுக் கொண்டிருப்பது, திருமணம். திருமணம் முடிப்பது கட்டாயம். அப்படியல்லாத உறவு விபச்சாரம் எனத் தெட்டத் தெளிவாகக் கூறுகின்ற ஒரு மார்க்கம் இஸ்லாமே! யார் யாரை முடிக்கலாம், யார் யாரை முடிக்கக் கூடாது என்றெல்லாம், விதிவிலக்குகள் இன்றி, மிகத் தெளிவான சட்டத்தை நமக்காக யாத்துத் தந்துள்ளான் வல்ல அல்லாஹ். இது பாரிய பல உண்மைகளை தன்னகத்தே கொண்டு நிற்பதுடன், அனர்த்தங்களை முற்றாகவே அழித்து, மனித இனப் பெருக்கத்தையும், சந்ததிகளையும், உறவு முறைகளையும், கடமை, கடப்பாடுகளையும், கௌரவத்தையும், பாதுகாப்பையும் போன்றவற்றை உறுதிப்படுத்துகின்றது.
ஆனால், குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் பலதார மணம் மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தி இருப்பதுடன், பலரைத் திருமணம் செய்வதற்கான ஒரு வழி இஸ்லாத்தை ஏற்பதே என்ற நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. இதுவும் அவ்வசனத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நடைமுறையே! அதனால் குர்ஆனைச் சரியாக விளங்கிக் கொள்வது ஒன்றே நம்மே நேர்வழியில் நடத்தும்.
ஆதலால் திருமணம் பற்றிய உண்மையை அறிய விரும்புவோர் குர் ஆன் என்ன கூறியிருக்கிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்வாராயின், பலதார மணம் என்ற சிந்தனையை அவர் மறந்தே விடுவார்.
இது போன்று பிழையான விளக்கங்களுடனும், பழைய மனித சட்டங்களுடனும் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘றிபா’, இதனைத் தமிழில் வட்டி என அடைக்கின்றார்கள். ஆனால் ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் அனைத்திலும், USURY என்ற பதமே கையாளப்படுகின்றது. இந்தப் பதமே சரியென்பதைக் குர்ஆன் யூஸரி என்பதற்கு தந்திருக்கும் வரைவிலக்கணம் உறுதிப்படுத்துகின்றது.
‘றிபா’ Riba நடைமுறையிலிருந்த நாயகம் ஸல் அவர்களினதும், அவர்களுக்குப் பிந்திய காலங்களினதும் நிலையில் நடை முறையில் இருந்த றிபாவுக்கு அப்போதிருந்த இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள் யாத்து வைத்திருந்த சட்டத்தை, இன்று றிபா இல்லாத காலத்திலும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், இஸ்லாம் நவீன கால ஓட்டத்துக்கு முன்னால் செயல் இழந்து நிற்பது போன்ற மாயை ஏற்படுத்தி வைத்துள்ளது.
இதுவும்கூட இன்று இஸ்லாத்தை ஏற்பதில் தாமதத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் காரணியாகின்றது. இக்குழப்பத்தில் இருந்து விடுபட, இஸ்லாத்தை ஏற்பதிலுள்ள தாமதத்தைத் தவிர்க்க குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதே உண்மையைக் கண்டறிய விழைவோருக்கான செய்தியாக உள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
– நிஹா -