குர்ஆன் கூறும் தர்மமும் சமாதான சகவாழ்வும்

தர்மம் பற்றிக் கூறாத சமயங்களோ, ஸ்தாபனங்களோ, பெரியார்களோ இருக்க மாட்டாது என்பது, தர்மத்தின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளப் போதுமானது. மதங்கள், குறிப்பாக இஸ்லாம், தர்மத்தைக் கட்டாய கடமையாக்கியும் வைத்துள்ளது. அப்படியாயின், இத்துனை முக்கியத்துவம் வாய்ந்த அனைவராலும் பரிந்துரை செய்யப்படும் தர்மம் பற்றி நாம் அறிந்திருப்பது நமது கடமையாகின்றது. தர்மம் என்பதை அறியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. காரணம் அது ஏழை எளியவர்களின் வாயில், நாளும் பொழுதும் ஒலிப்பது. ஏழை எளியோர் இல்லாத உலகே இல்லை என்பதால், இச்சொல்லைக் கேளாதோரும் இல்லை எனலாம். ஆயினும் தர்மம், பிச்சை போடுதல் என்ற சிறு வட்டத்துள் அது ஒடுக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. ஏற்பது இகழ்ச்சி என ஔவையும் தன் ஆத்திசூடியில் கூறியுள்ளமையும், நபிமொழி கைநீட்டி வாழ்வதைவிட மானத்தோடு வாழும் எத்தொழிலையும் இஸ்லாம் வரவேற்கிறது என்று கூறுவதிலிருந்தும், பிச்சை போடுவது மட்டும் தர்மமாக இருக்க முடியாது. அதற்கு மேலும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்பது மறைந்துள்ளது.


பிச்சையிடுவதில் சிறு விளக்கத்தை முதலில் கூறித் தொடர்கிறேன். தர்மம் சொர்க்கத்துக்கு நம்மை வாரிசாக்குகிறது. தர்மத்தைச் செய்து சொர்க்கத்தைப் பெற எங்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. நாம் அற்பமாகக் கருதும் பிச்சைக்காரன் நம் வீட்டு வாசலில் நின்று, ‘அம்மா தர்மம் தாங்கம்மா!’ எனக் கூவுகிறான் அப்பிச்சைக்காரன், சில சில்லறைகளில் சொர்க்கம் பெறும் இறை சேதியுடன், நம் வாசலில் நிற்கிறான் என்பதை நாம் அறிவதில்லை. புண்ணியம் கிடைக்கும் அம்மா! நல்லா இருப்பீங்கம்மா! போன்றவற்றைக் கூறும்போது, அவனுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு வாழ்த்துக் கூறுகிறான். ஆனால் “புண்ணியம்”, ”நல்லா” போன்ற வார்த்தைகளுள் பொதிந்துள்ளவை புரியாமல், நமக்குக் கோபம் மேலிடுகிறது. மீந்ததை ஈந்து சொர்க்கம் பெறும்படி கூவி வாசலுக்கு வந்தவனை, நாம் நன்றி கூறி வரவேற்பதற்குப் பதிலாகத் திட்டுகிறோம். துரத்துகிறோம். நேரங்காலமில்லாது தொந்தரவு செய்கிறான் என வைகிறோம். மீந்ததை ஈந்து சொர்க்கம் பெற நேரகாலம் பார்க்க வேண்டுமா? இப்போது தர்மம் பற்றி வேறு கோணத்தில் விளக்கம் தேடுவோம். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.
தர்மத்தை ஏன் செய்ய வேண்டும்? எதைத் தர்மம் செய்யலாம்? எதற்கு தர்மம் செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? யாருக்குச் செய்ய வேண்டும்? அதனால் யாருக்கு நன்மை? அதில் விளைவுகள் உண்டா? அதனால் என்ன நன்மை? போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக நம்மனதுள் வரவேண்டும். அப்படி கேள்விகள் எழுந்தால் மட்டுமே தர்மத்தின் அத்தியாவசியம், அதில் மறைந்துள்ள மனித நேயம், சமூக இசைவாக்கம், மனிதனின் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் இறுதியாக இவ்வுலகில் சமாதான சகவாழ்வும் இன்னோரன்ன நன்மைகளும் மறைந்து உள்ளமை தெரியவரும் இல்லாதவனுக்கு ஈவதே தர்மத்தின் அடிநாதம். இங்கு இல்லாதவன் எனும்போது, நம்மனைவரதும் மனக்கண் முன் நிற்பது ஏழைகள், அநாதைகள், இரப்பவர்கள், ஏற்பவர்கள் போன்றோரே!முன்னவர்கள் மட்டும்தான் இல்லாதோரா என்றால் அதற்கு இல்லை என்ற பதிலைத் தவிர வேறும் உளதா என்ற வியப்பு வினாவையே பதிலாய் எழுப்பி நிற்கும்! இல்லை என்றால் பதில்தான் என்ன? இருக்குமாயின் அவை என்ன?

எனைப் பொறுத்து பணமற்றவன், பலமற்றவன், பரிவற்றவன், பரிதாபத்துக்குரியவன், அறிவற்றவன், அறமற்றவன், விளக்கம் பெறாதவன், விளக்கம் கிடைக்காதவன் . விளங்கிக் கொள்ளாதவன், சுகமற்றவன், பண்பற்றவன், ஒழுக்கமற்றவன், தாய், தந்தையற்றவன், உறவினரற்றவன் நண்பரற்றவன், கல்வியற்றவன், உதவியற்றவன் உதவ மனமற்றவன், முயற்சியற்றவன், ஒதுக்கப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன், அநீதி இழைக்கப்பட்டவன், அழகற்றவன், குணமற்றவன் இப்படி முடிவற்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஓரு கணம் வாசிப்பதை நிறுத்தி சிந்தித்துப் பாருங்கள், உண்மை துலங்கும். ஆம், மேற்கண்டவற்றிலுள்ள ஒன்றோ, இரண்டோ அல்லது பலதோ அல்லாது இவையல்லாது வேறேதோ இல்லாமை உள்ளவர்களாக, அதன் தேவை உடையவர்களாக இருக்கலாம். மனிதன் குறைபாடுள்ளவனே! இந்த இடத்தில் இறைவன், நீங்கள் அறியாதவர்களாக இருந்தால், அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் (குh;ஆன் 16 :43) எனக் கூறி இருப்பது நமது தேவையைப் பெற்றுக் கொள்ளுமாறையும், கேட்கப்படுபவருக்கும், தனக்குத் தெரிந்த உண்மைதனை விளக்கிக் கொடுக்கும் கடமையையும் கூறா நிற்கிறது. சுருங்கக் கூறின், ஏதோ வகையில் தேவைப்பட்டவர்கள், கிடைக்காமல் இருப்போர் அனைவருமே இல்லாதவர்கள் தான்.

பணம் புழக்கத்துக்கு வருமுன்னர் அவரவர் தேவையை நிவர்த்திக்கும் ஊடகங்கள் மூலமாகவே தர்மம் செய்யப்பட்டிருக்கவேண்டும். உணவு, உடை, உதவி, கல்வி, வைத்தியம், ஆலோசனை போன்ற இன்னோரன்ன அனைத்து தேவைகளும் அவையவை உள்ளவர்களிடம் இருந்து இல்லாதவர்பால் சென்றிருக்க வேண்டும். அது பண்டமாற்று முறையாகவோ, சிரமதான முறை மூலமாகவோ, கூட்டுவாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம். இவைகூட ஓர் வகையில் தர்மத்தின்பாற்பட்டதே. அந்த வகையில் அங்கு அத்தேவைகளாகக் கருதப்படும் அக்குறைகளைத் தீர்த்து வைப்பது தர்மமே. எந்த மதமாவது, ஸ்தாபனமாவது, பெரியோராவது தம் பணிகளை தர்மத்தை வளர்க்க, அது பற்றிய நன்மையான நடவடிக்கைகளைத் தொடர்வாராயின் அது தர்மமேயாகும். அதுவே, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகி, ஓர் மனிதாபிமானங் கொண்ட சமூகக் கட்டமைப்பை உருவாக்கும். சாந்தி சமாதானம் நிலவும். ஆக தர்மம் என்பது சரியாக அறிந்து செய்யப்படுமானால் உலகில் உள்ள பிரச்சினைகளில் பாதிக்கு மேல் தீர்ந்துவிடும். இதன் பின்னர் மீதிப் பிரச்சினைகள் தானாக மறைந்துவிடும். தர்மத்தை இறைவன் வளர்ப்பதாகக் (பார்க்க 2:275) கூறுவதும் மேற்போந்த பயன்பாட்டை மக்கள் பெறுவதற்காக இருக்கவேண்டும்.

பக்கத்து வீட்டான் பசித்திருக்க நாம் புசித்தல் தகாது என்ற நாயகவாக்கியம் கூறுவது நாம் சிந்தித்துணர வேண்டியது. பக்கத்து வீட்டான் எல்லா வசதிகளும் உடையோனாகக் கூட இருக்க முடியும். ஆனால் ஏதோ பிரச்சினையால், கவலையால், துன்பத்தால் அன்று அவன் பட்டினியாக இருக்க வேண்டும். அதை நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற பண்பினுள் பொதிந்துள்ள தத்துவத்தை உற்று நோக்கின் உண்மையை, அதன் பின்னணியிலுள்ள நன்மையை உணர முடிகிறது. பட்டினியை போக்க நாம் முன்வரும்போது, அந்நிலைக்கான காரணங்கள் தெரிய வருகின்றன. அப்போது நாம் அதனைப் போக்கும்வாக்கில் ஆகக்குறைந்தது ஆக்கபூர்வ ஆலோசனைகளோ, அறிவுரைகளோ, ஆறுதல் வார்த்தைகளோ நிவாரண நடவடிக்கையோகூட எடுக்க முன்வருவோம். இதன்மூலம் அவர்களது பிரச்சினையினால் ஏற்பட்ட சங்கடங்கள் ஓரளவு மறையும் தன்மை உண்டாகின்றது. அல்லது அவ்வீட்டார் கவலையை விட்டு காரியத்தில் இறங்கிவிடுவர். இப்போது இவ்விரு வீட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு, நம்பிக்கை, அந்நியோன்யம் போன்றவை மலர்கின்றன. பாதுகாப்பும் கூட இயற்கையாகவே ஏற்படுகிறது. அடுத்தவரது பார்வையில், இவர்களுக்குத் துன்பம் செய்யச் சென்றால் பக்கத்து வீட்டார் என்ன?, (அந்தச் சங்கிலித் தொடரால் ஏற்பட்டுள்ள ஊர் ஒற்றுமையால்), அவ்வூரே நமக்கெதிராகத் திரளும் என்ற பயவுணர்வு ஏற்படும். ஆக நமது, அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட அது போன்ற, சிறு தர்மம் -ஆம் அதனை நான் தர்மம் என்றே குறிப்பிடுகிறேன், நல்ல வார்த்தைகளும் தர்மத்தைச் சார்ந்தனவே- எவ்வளவு நன்மைகளை விளைத்து விடுகின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் போது இறைகடாட்சம் உணரப்படுகிறது. 23: 96 இன் வசனத்துக்கு விளக்கம் தருவது.


பாதையைக் கடக்க முடியாது பரிதவிக்கும் வயோதிபர், பயந்தவர்கள், ஊனமுற்றோர் போன்ற ஒருவருக்கு அவர்களின் அப்போதைய சிறு தேவைகளின் போது நாம் உதவுவது எத்தகு விளைவை அச்சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தி விடுகிறது என்பதை சிந்தியுங்கள். இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்லுக்கு நாம் ஏக வாரிசாகிவிடுகிறோம். இது மகன் தந்தைக்கு ஆற்றிய உதவியாகவும் மாறுகிறதே. இதனை மிக அறிவுபூர்வமாக இறைவன் தன்மாமறையில் பகுத்துத் தந்துள்ளான். தர்மம் கொடுக்கப்படுவோர் யார் என மிகத்தெளிவாக்கியுள்ளான். நான் முன்னர் சொன்ன எது இல்லாமல் ஒருவன் வாடுகிறானோ, அதனை நாம் பெற்றிருந்து, முடிந்தவாறு கொடுத்துவிட்டால் அது தர்மமாகிவிடுகிறது. இவை அளவுகோளுக்குள் அடங்காது அதற்கும் அப்பால் செல்வது. பெறுமதி எனப் பார்த்தால் எதுவுமே இருக்காது. மேலும், வழிப்போக்கன் அந்த தர்மத்துக்குரிய சாராரில் ஒருவனாகின்றான். பெரும்பாலும் வழிப்போக்கன் எதுவுமில்லாதவனாக இருக்கமாட்டான் என்பது திண்ணம். அன்றேல் அனைத்தையும் இழந்து தவிப்பவனாக இருக்க வேண்டும். அவனிடம், அறிவு, செல்வம் அனைத்தும் கொட்டிக்கிடக்கும். ஆயினும் எல்லாம் இருந்தும் அத்தருணம் இல்லாத நிலை. உதாரணமாக உலகின் முதற் செல்வந்தனாகக் கணிக்கப்பட்டுள்ள பில் கேட்ஸ் என்ற மைக்ரோசொப்ட் நிறுவன உரிமையாளன் வழிப்போக்கனாகலாம். வந்த இடத்தில் பாதை தெரியாதிருக்கலாம், பணத்தைப் பறிகொடுத்து இருக்கலாம், அன்றேல் பசிக்கு சாப்பிட இடங்கிடைக்காதவனாக, தாகத்தைத் தீர்க்க நீர் கிடைக்காதவனாக, உட்காரவோ படுத்துறங்கவோ இடம் பெறாதவனாக, உடலுபாதை ஏற்ட்டவனாக இருக்கலாம், மாற்றுடை, இயற்கைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள இடமற்ற நிலை, இப்படியாக எத்தனையோ எதிர்பாரா தேவைகள், தொல்லைகள், நிர்ப்பந்தங்கள். அப்போது தெருவோரத்தில் இருந்த ஏழையின் கொட்டிலே தேவைப்படுகிறது. அதுவோர் கிராமமாயின், கொட்டில் வீட்டில் இருப்பவனுடைய உதவும் பெருந்தன்மையே அந்நிலையில் வழிப்போக்கனுக்கு கைகொடுக்கின்றது. அவனுடைய செல்வமோ, கல்வியோ எதுவுமோ அவனுக்கு உதவிடவில்லை. அந்த ஏழையின் மனிதாபிமானம்தான் ஆபத்தாண்டவனாக உதவுகிறது. பாருங்கள் மேற்கண்ட வழிப்போக்கன் என்ற சொல் மூலம் எத்தகு கருவூலத்தைத் திறந்து உள்ளான் என்பதை அறியலாம். ஆண்டான் முதல் அடிமை வரை அனைவரும் வழிப்போக்கராகலாம். காலத்தால் செய்யும் உதவி…. என வள்ளுவம் கூறும் தர்மம் இதுவே.

ஆகுக என்ற சொல்லில் உலகைப் படைத்தது போல், ஒரு சொல்லில் முழுஉலகையுமே அடக்கும் செய்திகள் கொண்டது இறைவாக்கு. பங்கிடக்கூடியதை, அதிகமாவுள்ளதை தேவைக்கு மேலுள்ளதை,( superfluous)மிகையாகவுள்ளதை, மீந்ததை கொடுங்கள்- 2:219. மேற்கண்டது, தர்மமாக எதனைக் கொடுக்கலாம் என உங்களிடம் கேட்கிறார்கள், மீந்ததைக் கொடுங்கள் என்று இறைவன் தந்த பதில். எத்துனை கருத்தாழம் மிக்கது. மீந்தது என்பது கொடுப்பவனது உள்ளத்தால் அளக்கப்படுவது, உள்ளத்தின் விரிவைப் பொறுத்தது. ஒரு பிடிச்சாதம், ஒரு சோடி உடை, ஒரு படுக்கையில் இடம், ஒரு குடையுள் நிழல் போன்றவை வைத்திருக்கும் நிலையிலும் அவனது மனம் அதிலும் பகுதியை அடுத்தவனுக்கும் பங்கிடும் மனப்பாங்கை உருவாக்குவது. மேல் எல்லை மிகப் பரந்தது விரிந்தது. இங்கு பணமோ பொருளோ முன்னிலைப்படுத்தப் படவில்லை. அளவோ, எல்லையோ கிடையாது. காலநேரம் கிடையாது. பெரியவர்-சிறியவர், உள்ளவர் -இல்லதார், உயர்ந்தவர் – தாழ்ந்தவர் எதுவுமில்லை. யாரிடம் எதுவுள்ளதோ எவருக்கு (இல்லாதவர்) அவை தேவையோ அவர்களோடு பங்கிட்டுக் கொள்ள முடியும். அது உணவு, உடை, உறையுள் என்பவற்றை எல்லாம் கடந்து எல்லையற்று அறிவு, பரிவு, அன்பு, பாசம் எனச் செல்வது. அதையும் தாண்டி, இன்னுமோர்படி உயர்ந்து, ‘3:92. நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்’. என்று கூறுகிறான்.

இங்கு மீந்ததை என்ற நிலைக்கு மேலாக, நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து என்பதன் மூலம், கழிவுகளைக் கொடுக்கும் நிலையிலிருந்து தடுத்து, -நல்லதை- உங்களுக்கு உவப்பானதை எனக்கூறி, அப்படிக் கொடுப்பதிலேயே நன்மையும் உண்டு எனத் தெளிவுபடுத்துகிறான். இது கழிவைப் பெறும் அவலத்தை விலக்குவதுடன், சிறந்ததைக் கொடுக்கும் பண்பை வேண்டி நிற்கிறது. கழிவைப் பெற்றவன் மனத்தில் இழிகுணமும், பழிவாங்கும் மனநிலையுமே தளிர்விடும். எவ்வளவு நுண்ணறிவுடன் எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட சட்டம். அத்தோடும் நிறுத்திவிடவில்லை. பெறுபவனின் அந்தஸ்தையும் உயர்த்தி, மனிதரில் இல்லாமை இழிவை ஏற்டுத்திவிடக் கூடாதென உணர்ந்த கருணையாளன், ‘அவர்களது பொருளில் யாசிப்போருக்கும், யாசியாதோருக்கும் பங்கு உண்டு (51: 19)’ எனக் கூறி இறைநம்பிக்கையாளரின் சொத்தில், இல்லாத மக்களுக்கு சட்டபூர்வ உரிமையையும் தருகிறான். அவர்களைச் சகோதரர் என்ற நிலைக்கும் உயர்த்தியுள்ளான் (பார்க்க 2:220). உய்த்துணரத் தக்கது. என்னே கருணை! என்னே கிருபை!! என்னே மதிநுட்பம்!!! எப்போது, எங்கு, ஏன், எதற்கு, யாருக்கு என்ற அனைத்துக்கும் பதில் உள்ளது. அநாதைகள் சீர்திருத்தம் செய்யுமாறும், அவர்களும் உங்கள் சகோதரரே எனவும் 2:220 இல் உறவைக்கூட ஏற்படுத்தித் தந்துள்ளான். சீர்திருத்தி என்பதை உற்று நோக்கின் உண்மைகள் துலங்கும். அதன் தன்மைகள் புரியும்.

முல்லைக்குத் தேர் கொடுத்து அக்கொடி படர்வதற்கு உதவிய பாரியின் பண்பும் மேற்கண்ட தர்மத்தின் பரந்துபட்ட நோக்கை வெளிப்படுத்துவதே.
அடுத்து கடனாளி என்பவர் இறைபார்வையில் தர்மத்தை பெற அருகதையுடையவராகத் தெரிகிறார். கடன்பட்டவன் ஓர் காலத்தில் செல்வச் சிறப்பில் மிதந்தவனாகக்கூட இருக்கலாம். கடன் தொல்லை அவனை நெருக்கி, அவன் மானம், மரியாதை, வாழ்வு அனைத்தையும் பறித்து அவனை இழிநிலையில் தள்ளிவிடக் கூடியது. அவனது சந்ததிக்கு மாறான அபகீர்த்தியை, ஏன் மரணத்தை இச்சிக்கும் நிலையைக்கூட கொடுப்பதாக இருக்கலாம். அப்படியான நிலைக்கு ஆளானவனது கலக்கத்தை கம்பர் மிக அழகாகத் தனது இராமகாவியத்தில் ‘வாரணம் பொருத மார்பும் …’ என்ற கவிதையில் வடித்துள்ளார். அவன் அனைத்தையும் இழந்து நின்ற நிலை ‘கடன்பட்டான் நெஞ்சம் போலக் கலங்கினான்….’ என்ற அடியின் மூலம் துன்பத்தின் உச்சநிலையைக் கூறுகிறார். எட்டுத் திக்கையும் கட்டியாண்ட இலங்கேஸ்வரனின் இழப்பினால் உண்டான துயரத்தின் அளவு கோலாக கடன்பட்டவனின் கலக்கம் உள்ளது என்பது, கடனாளியின் நிலையை விளக்கும்.

இப்போது புரிகிறதா இறைவன் கடனாளி தர்மத்துக்குரியவன் என்று பரிந்துரைப்பதன் உட்கருத்தை. அன்று அந்த இராவணனுக்கு கைகொடுக்க யாராவது இருந்திருந்தால் அவன் கலக்கம் மறைந்திருக்கும் கதையும் வேறு முடிவை எடுத்து இருக்கும். நான் இங்கு ஆயுதம் கொடுத்து உதவுவதைக் கூறவில்லை. இராவணனுக்கு அவன் செய்வது மறமென்பதை இடித்துக்கூறி, இல்லாமற் போன அறத்தை வலியுறுத்தி அவ்வழி செல்லத் தூண்ட ஆளற்றுப் போன, தர்மம் ஒழித்த இடத்தையும்தான் கூறுகிறேன்.’ இடிப்பாரே இல்லா ஏமரா….’ எனத் திருவள்ளுவம் கூறுவதிலுள்ள தர்மமும் இதுவே. இதற்குத்தான் தீர்வு தருகிறது. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக என அழைக்கும் இறைமறை-23: 96.

கடன் கொடுப்பதைக்கூட, ‘அழகிய கடனாகக் கொடுங்கள்’ எனக்கூறி, கொடுப்பவர் அழகிய காரியத்தைச் செய்வதாகக் கூறுவதுடன், நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அதைத் தர்மமாக கொடுத்துவிடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும் (2:280) என வலியுறுத்துகிறது. அறிந்தவர்களாக என்பதன் மூலம், கடன்பட்டவரின் உண்மைநிலை…, அதைத் தர்மமாக கொடுத்துவிடுவதன் நன்மை, மனித மானத்தின் பெறுமதி போன்றவற்றை அறிந்ததாகின்றது. ஆக பெற முடியாத கடன் துன்ப தொல்லை, சண்டை சச்சரவு, குழப்பம், அவமானம் போன்றவற்றை ஏற்படுத்தாது. தர்மமாக மாறும் போது மேலும் அந்யோன்யமும், பரஸ்பரம் நல்வெண்ணமும் பெருகுகிறது. ‘கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை’ என்ற பழமொழி, மக்கள் மத்தியில் அடிக்கடி கூறப்படுவதன் காரணம் நாமறிந்ததே. இங்கு எதிர்மாறான நிலையை தர்மமாக்குதல் ஏற்படுத்துகின்றது. கொடுத்தவனும் விடுத்திடுவான், எடுத்தவனும் கலங்கான். கடன் பெற்றவருங்கூட சிறந்த அறிவையும், உயர்ந்த பாடத்தையும், புதிய அநுபவத்தையும் பெறுகிறார். அவரது பண்பிலும் பாரிய தாக்கங்கள் விளைகின்றன. யாருடைய தூண்டுதலுமின்றி, தானாகவே ஓர் சமுதாய கலாசார மலர்ச்சி, மாற்றம் ஏற்படுகிறது. அமைதிப் பூங்காவாக அனைவரின் வாழ்வும் அகமகிழ்கிறது. தர்மங்களில் மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுவது ஒருவனை நல்வழிப்படுத்தும் நடவடிக்கையே. அது நிலையானது. நிரந்தரத் தீர்வாவது.  ( பார்க்க குர்ஆன்2 :220 )
இல்லாதானும், இல்லாத நாடும் இல்லாத உலகு இல்லை. அழகிய கடன் என்னும் போது பெற்றவரின் அந்தஸ்தில் சிறு குறைவும் ஏற்படாத நிலை தோன்றுகிறது. இங்கு கடன்பட்டான் நெஞ்சம் என்ற கலக்கம் ஒழிக்கப்படுகிறது. பெற்றதும் அழகான கடன் என்ற முறையில், இறுக்க முடியாத போது இவரைக் காக்க இறை பாதுகாப்புச் சட்டம் வேறு. எப்படி கலக்கம் வரும். தான் மனிதனுக்கு நன்மையையே விரும்புகிறான் என்று இறைவன் கூறுவதன் உண்மை, மகிமை தெரிகிறதா? இன்னும் சொன்னால், கடனாளி தர்மத்துக்குரியவனாகவும், கடன் கொடுத்தவன் பெற்றுக் கொள்ள வழியில்லாத போது அதைத் தர்மமாக்குவதன் மூலமும், தர்மம் செய்தல் என்ற விடயம் இலகுபடுத்தப்படுகிறது. சாதாரணமாகக் கொடுக்கப்படும் தர்மத்தைவிட உயர் அந்தஸ்தை, கடன் தர்மமாக மாற்றப்பட்ட போது அடைகிறது. தர்மத்தின் கடமைகூட பூர்த்தி பெறுகிறது. இங்கு கடன் கொடுப்பது தர்மமல்ல. கொடுத்த கடனுக்குப் பின்னால் மறைந்துள்ள அநர்த்தங்களைக் களைவதற்காக, இறுக்க முடியாத நிலையிலிருக்கும் போது தர்மமாக்குதலே தர்மம். இல்லாமையே, பஞ்சமா பாதகங்கள் உட்பட எல்லா குற்றச் செயல்களுக்கும் காரணி. இல்லாதோனைப் பாதுகாக்க உண்டாக்கப்பட்ட வல்லோனின் சட்டம் உலக அமைதிக்கு களம் அமைக்கிறது. பலம் தருகிறது. வளம் பெருக்குகிறது.

மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக. குர்ஆன் 23:96 பணிப்பது இவை போன்றவற்றையே. இவ்வுலகில் அரசுகள் தீமைக்குத் தண்டனை கொடுக்கும் தன்மையையே கொண்டிருக்கின்றனவே அன்றி, தீமைகளைக் களைவதற்கான பண்புகளைக் கொண்டிருப்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. ஓர் தீமை -குற்றச்செயல் – ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுவதில்லை. குற்றத்தைக் கண்டுபிடிக்கவும், அதற்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவும், குற்றவாளிகளைத் தண்டனை என்ற பெயரில் தடுத்து வைத்து அவர்களுக்காகச் எந்த நன்மையுமின்றிச் செலவழிக்கப்படுவதையும், அக்குற்றங்கள் தளிர்விடாது பாதுகாப்பதற்கான சீர்திருத்தச் செயல்களில் செலவிட்டிருந்தால் நியாயமான மாற்றத்தை உலகில் ஏற்படுத்தலாம்.

உதாரணத்திற்கு, மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அப்போதைய நிலையில் உணவுப் பொட்டலங்களும், இன்ன பிறவும் கொடுத்து உதவுவது தர்மத்தின்பாற்பட்டது என்பதைவிட, அது அரசினது கடமை என்பதைவிட, அரசுக்கான தண்டனையாகவே கருத வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளம் ஏன் வருகின்றது என்பதைக் கண்டறிந்து, அக்காரணியைக் களைவதே நிரந்தரத் தர்மாகிறது. அக்காரணிகள் களையப்படாததால் ஏற்பட்ட வீண் செலவை, உயிரிழப்பை, உடமை அழிவை, அல்லை தொல்லை, துயரங்களை தவிர்க்கும். இது போன்றே குற்றங்கள் தோன்றக் காரணமாயுள்ள, இல்லாமை ஒழிக்கப் பாடுபடுவது சீர்திருத்தத்தின்பாற்பட்டது. நியாயபூர்வமாக, பரிகாரம் காணும் நோக்கில் தயவுதாட்சன்யமற்று நடவடிக்கை எடுக்கப்படும்போது உருவாகும் பிரச்சினைகளை கடும் போக்கைக் கைக்கொள்ளலாம். நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படுவதே சீர்திருத்தம். சீர்திருத்தமே தர்மம். அதுவே நிரந்தரமான உலக அமைதிக்கு வழிகோலும் ஒப்பற்ற இறை தீர்வு.

இறை நம்பிக்கை, அவன் பற்றிய பயம் ஏற்படாத போதே இறைவனும் அவ்வப்போது இயற்கை அனர்த்தங்களை (குர்ஆன் 41:53) ஏற்படுத்திச் சோதிக்கிறான் என்பதையும் மறந்துவிடலாகாது. இறையச்சம் இருந்திருந்தால் நாமும் சீர்திருத்தங்களிலும், தர்மச் செயல்களிலும் ஈடுபட்டிருப்போம். சோதனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
பொருளாதாரப் பிரச்சினை மட்டுமாயின் அது சிறிது காலத்தில், அரசுகளால் நீண்ட காலத்தில் திட்டத்தில் அல்லது வேறு வகையில் தீர்க்கப்படலாம். தீரவும் செய்யும். அதன் பின்னர் தர்மத்தைப் பற்றிப் பேசும் தேவையும் இராது. நாம் முன்னர் பார்த்த அனைத்து இல்லாமைகளும் வளர்ந்த வண்ணமே இருப்பதால், அதைத் தீர்க்க வேண்டிய வேலைகளும் கூடும் போது தர்மம் வளர்ச்சி அடையவே செய்கிறது. தர்மத்தை வளர்ப்பதாகக் கூறும் இறை கருத்தின் மகிமை புரிகிறது. இறைவனின் கருத்துக்கள் எப்போதும் உய்த்துணர்ந்து நல்லறிவு பெறப்பட வேண்டியவையே. அதற்கு இசைவாகவே இறை கூறும் தர்மம் பெறுவோர் வகைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

தர்மத்துக்கு உரித்தானவர்களாக பெற்றார், உறவினர், அநாதைகள், ஏழைகள், அண்டை வீட்டார், நண்பர்கள், வழிப்பயணிகளாக கூறப்பட்டுள்ளனர். அதனால் மேற்கண்ட பயனாளிகளில் உண்டாகும் தாக்கங்களும் விளைவுகளும் சமாதான சகவாழ்வாகவே உருப்பெறுகின்றது. இது இறைகூறும் தர்மத்தின் அடிநாதமாகவிருந்து, அது வெளிப்படுத்தும் விளைவுகளின் அளப்பரிய நன்மைகளே. நாம் உற்று நோக்குவோமாயின் இதைவிடச் சிறந்த ஒன்றை சமாதானம் தேடி அலைய வேண்டியதில்லை. சமாதானம் பற்றிப் பேசும், சமாதானத்தை விரும்பும், அல்லது விசேடமாக இறை ஆணைக்குக் கீழ்ப்படியும் ஒவ்வொருவருக்கும் இது சமர்ப்பணம். வாசிப்பதற்காகவல்ல செயற்படுத்த. இதைச் செயற்படுத்த நம்மிடம் எது இருக்கிறதோ அதுவே போதுமானது. மேற்கண்ட அனைத்தையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் சென்று பழிக்குப்பழி வாங்காது விட்டுவிடுவதே தர்மம் எனப் பிரகடணம் செய்கிறது. அதற்கு மேலும் சென்று நமது பாவங்களுக்கும் பரிகாரமாகும் என்னும் போது, அவை மன்னிக்கப்படும் என உறுதிகூறப்படுகிறது. 5:45. அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தபடி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! நமது பாவங்களைப் போக்கும் இலகு வழியாகவும், அதற்கான ஊடகமாகவும் இருக்கிறது. இது தர்மத்தின் மேலதிகச் சிறப்பும், தகைமையும், பலனுமாகும்

- நிஹா -