நற்சிந்தனை! 8

 

பிறப்பிலேயே நபியாகவும், இறைதூதராகவுமாகி தொட்டிலில் கிடந்தவாறே   உபதேசித்த உயிர் வாழும் நபி!

உலக வரலாற்றில் புதுமைகள் பலவற்றை நாம் கண்டும், கேட்டும். வாசித்தும் அறிந்து வைத்துள்ளோம். அவை படைப்புகளில் புதுமை, படைப்புகளின் புதுமை, பிறப்பில், இறப்பில், உயர்வில் என வளர்ந்து கொண்டே போகும். நாம் இங்கு காண விழைவது, பிறப்பில் புதுமை, பிறந்தவுடன்புதுமை, இறவாப் புதுமை என்ற அத்தனை புதுமைகளையும் ஒரு சேரக் கொண்ட ஓர் உத்தமர் பற்றியதே!

ஓரளவு மார்க்க அறிவு கொண்டோர் நான் குறிப்பிடுவது யாரென இதுவரை அறிந்து கொண்டிருப்பர். அவர்தான் யேசுநாதர் என கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் இஸ்லாமியர், ஈஸா அலைஹிஸ்ஸலாம் என அழைக்கும், ஒரு கன்னித் தாய்க்கு மகனாகப் பிறந்த, தகப்பனற்ற, இறைவாக்கால் உருவான உத்தமர் மறை கொணர்ந்த உத்தம நபி ஈஸா அலை அவர்கள்.

இவர்களின் பிறப்பு பற்றிய புதுமையை உலகின் இரு பெரிய வேத நூற்களான பைபிளும், குர்ஆனும் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆம், அல்லாஹ் ஆண், பெண் இன்றியே ஆதம் என்ற முதல் மனிதனைப் படைத்தான்.

அதன் பின்னர் பிறந்து கொண்டிருக்கின்ற ஆதாமின் மனைவி தவிர்ந்த அனைத்து மனிதரும் பாலியல் தொடர்பால் பிறந்தவர்களே! ஆனால், நமது ஈஸா என்ற யேசுகிறிஸ்து எந்த ஆணின் தீண்டலுமற்ற நிலையில், இறை வாக்கால் உருவானவர் என்பது உலக வரலாற்றின் புதுமை எனலாம்.இது பற்றிய தகவல்கள் திருக்குர்ஆனின் மர்யம் என்ற 19வது அத்தியாயத்தின் வசனம் 16 முதல் 34 வரை விளக்கமாகக் காணப்படுகின்றது.

சாதாரணமாக ஒரு பெண் கருக் கொண்டாலே பல கதைகள் கூறும் உலகம், கன்னி ஒருத்தி குழந்தையுடன் காணப்பட்டால் விட்டு வைப்பார்களா! அந்த நிலையில்தான், ஈஸாஅலைஅவர்கள், தொட்டிலில் கிடந்தவாறே, கட்டில் சுகம் என்னவென்றறியாத தனது தாய்க்கு, தன் பிறப்பால் ஏற்படுத்தப்படுகின்ற களங்கத்தைத் துடைக்கின்றார்.

செய்வதறியாத நிலையில் அந்த அபலை, தன் குழந்தையின் பக்கல் கையை நீட்டிய போது, ‘தொட்டிலில் குழந்தையாக இருக்கும் ஒருவரிடம் நாங்கள் எவ்வாறு பேச முடியும்’ என்ற கேள்விக்கு பதிலாகப் பேசத் தொடங்குகின்றது. 19:30 – ‘நிச்சமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து, நபியாகவும் ஆக்கிஇருக்கின்றான்’ என்றுகூறி, உலகில் என்றுமே நடைபெற்றிராத ஒர் புதுமையையும்,  புதுமையான அறிவிப்பையும் செய்கின்றது.

அந்த அறிவிப்பில், முதலாவது – மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்.  அதற்கடுத்ததாக -பிறக்கும்போதே இறை வேதத்துடன்  ஒரு தூதராகவும் நபியாகவும் பிறந்துள்ளாகக் கூறும் புதுமை. அடுத்த 31ஆவது வசனத்தில் – நான் எங்கிருப்பினும், வளமிக்கவனாகவே என்னை ஆக்கியுள்ளான் எனப் பாலைவனத்தில் இருந்து பகிரங்கமாகக் கூறுகின்ற புதுமை.  உயிர் வாழும் வரையில் தொழுகையையும், ஜகாத் என்ற ஏழை வரியையும் எனக்கு உபதேசித்துள்ளான் எனக் கூறித் தனது முதல் உபந்நியாசத்தைத் தொடங்குகின்றது அன்று பிறந்த அப்பாலன்.

அடுத்த 32இல், இன்னும், என் தாயாருக்கு நான் நன்மை செய்ய வேண்டுமென்றும், இன்னும் பெருமையடிப்பவனாகவோ, துர்ப்பாக்கியமுள்ளவனாகவோ என்னை அவன் ஆக்கிவிட வில்லை எனக் கூறி, தாய்க்கு மகன் செய்ய வேண்டிதைப் போதிப்பதுடன், பெருமை பேசாதிருத்தலையும் கூறிப் புதுமை படைக்கின்றார் பெருந்தகை ஈஸா அலை அவர்கள். 

அடுத்த புதுமையாக, 33ஆம்வசனத்தில் அல்லாஹ்வே, ஈஸா அலை அவர்கள் கூறுவதாகக் கூறுகின்றமை ஓர் புதுமையே! ‘இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், நான் உயிர் பெற்றெழும் நாளிலும் என் மீது சாந்தி (ஸலாம்) நிலை பெற்றிருக்கும்’ என்கிறார். இதன் மூலம் மனிதர் அனைவரும் இறப்பை எய்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, மீண்டும் மறுமையில் எழுப்பப்படுவதையும் நிலைப்படுத்திச் செல்வது மீதிப் புதுமை.

இவற்றுக்கு எல்லாம் அப்பால் சென்று, தனது 30 வயது தொடங்கி 33 வயது வரையுள்ள காலப் பகுதியில், தனது மார்க்க உபந்நியாசங்களின் போது, பிறவிக் குருடர்களுக்குப் பார்வை கொடுத்துள்ளார். தொழு நோயாளிகளைச் சொஷ்தப்படுத்தி யுள்ளார்.

இதற்கும் மேல் பல படிகள் சென்று, இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் என்பது உலகில் எந்த நபிமாராலும், செய்து காட்டப்படாத புதுமை. 

இன்னொரு புதுமையும் உளதே! அதை மறந்து விடவோ, மறைத்து விடவோ முடியாதபடி குர்ஆன் பகிரங்கமாக்கி  உள்ளது. அதுதான், யூதர்கள் சொல்வது போல், ஈஸா சிலுவையில் மரணிக்க வில்லை. மரணித்தது போன்று காட்டப்பட்டது. அவர் உயர்த்தப்பட்டு விட்டார் என்ற சேதி. இது அனைத்திற்கும் மகுடம் வைத்தாற் போன்று இற்றை வரை இறை சந்நிதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் புதுமை.

மொத்தத்தில் ஈஸா அலை அவர்கள் பிறப்பு, தொட்டில் முதல், கட்டில் காணா திருமணமுமற்ற சீரிய வாழ்க்கை, விண்ணேற்றம் அனைத்துமே புதுமையே! அல்ஹம்துலில்லாஹ்!

- நிஹா -