உடுக்கை இழந்தவன் கைபோல…..


இன்று இப்பூவுலகின் மூலை முடுக்குகளில் எல்லாம், – சமூக, அரசியல், பொருளாதாரம், சார்ந்த பயங்கரவாதங்களாலும், விடுதலைப் போராட்டங்களாலும், ஆக்கிரமிப்புக்களாலும், – வன்செயல்களும் வான்தாக்குதல்களும்,  இழப்புக்களும் புலம்பல்களும், துன்புறுத்தல்களும் துயரக் கதைகளும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வானளாவி நிற்கின்றன.

இலக்குகளற்ற எறிகணைத் தாக்குதல்களால், கணக்கில்லா வான்தாக்குதல்களால் சொல்லொணாத் தொல்லையுள் தள்ளப் பட்டுள்ளனர். பயங்கரவாதங்களும், ஆக்கிரமிப்புக்களும், விடுதலைப் போராட்டங்களும் செயற்படும் வழிகளில் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே காணப்படுகின்றன. எல்லாவற்றிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்களாவே உள்ளனர். தாக்குதல் தொடுப் போரும் அப்பாவிப் பொது மக்களையே இலக்காக்கிக் கொள்கின்றனர். பணயப் பொருளாகவும் அம்மக்களையே பயன்படுத்துகின்றனர். அனைத்தும் மக்களுக்காகவே செய்வதாகவே அனைவரும் தம்செயல்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

யாரோ, எதற்கோ, எப்போதோ செய்த தப்புத் தண்டாக்களால் தயவு தாட்சன்யமின்றி, அப்பாவிப் பொது மக்கள் வகைதொகையின்றி இன்னல்களுக்கும், இம்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பதே தெரிவதில்லை. யார் செய்கின்றார்கள் என்பதோ, ஏன், எதற்கு என்பதோ தெரிவதில்லை. மக்களுக்காகவே நடத்தப்படுவதாகக் கூறப்படும் இப்போராட்டங்களினால் மக்களே தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறி, அல்லது வெளியேற்றப் பட்டு, அல்லது வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆற்றொணாத் துயரங்களைச் சுமந்து கொண்டு தேற்றுவார் யாருமின்றி அகதி வாழ்வே தம் தலைவிதியென சகதியோடும் அவதியோடும் நாட்களை, மாதங்களை, வருடங்களை எண்ணிக் கொண்டு மிகுதி வாழ்க்கையை நம்பிக்கைகள் சிதைந்த நிலையில் ஓட்டிக்கொண்டிருக் கின்றனர் ஆதரிப்பார் யாருமின்றி. 

நாடுகள் களமாகியதால் உண்டான ரணங்களைக் குணமாக்க வாய்ப்பில்லை.  இனங்களைப் பிணங்களில் தேடுவதற்கும் முடிவதில்லை. சுணங்கி வந்தோர் சென்ற இடம் தெரியாது. பிணங்கிக் கொண்டோர் புதைக்கப்பட்ட இடமும் தெரியாது. பாலகரின் பசியைப் போக்கத் தாயிடமும் பாலில்லை, யாரிடமும் எதுவுமில்லை. சேய்களின் கதறல்களும், நோய்களின் வேதனையால் ஏற்படும் முனங்கலும் அணங்குகளின் மனங்களை ஷெல் அளித்த துன்பத்தைவிட செல்லரித்துக் கொண்டிருக்கின்றன. நாடுகள் காடாகி, காடுகளே நாடாகியதால், சொத்துக்களையும் சுகங்களையும் மட்டும் இழக்கவில்லை. தம்அன்றாட வாழ்வாதாரமான தொழில்களையும் துணைகளையும் இழந்துள்ளனர். ஷணங்களில் இழந்தவற்றை யுகங்கள் சென்றாலும் தேட முடியாது என்ற வேதனையோர் புறம், பிணங்களான தம்முறவுகளை என்றுமே காண முடியாது என்ற கவலையோர் புறம், மனங்களை வாட்டி மனநோய்க்காளாகிக் கொண்டிருக்கின்றனர். மீந்திருப்போர் நாமும் செத்துத் தொலைந்திருக்கலாமேயென அங்கலாய்க்கிறார்கள் செய்வதறியாது.
தாக்குதல் நடைபெற்ற இடங்களில் எல்லாம் பின்வரும் காட்சிகளுக்குப் பஞ்சமேயில்லை, இதனைத் தவிர. பத்துமாதம் சுமந்த தாய் தாகத்தால் தன்மடியில் செத்துமடிந்த போது ஒருசிறங்கைத் தண்ணீரைத் தரமுடியாமல் போனதால் சாகாமல் சாகின்றனர் தனயர். மன்று காணவிருந்த தன் ஓரே மகன் நின்ற இடத்திலே குண்டு விழுந்து குற்றுயிராகிக் கிடப்பதைக் கண்டு சித்தம் கலைந்த தாய்மார், வயிற்றிலிருந்த சுமையை இறக்கிட வழியிலாது வழியிலே மடியவிட்டு துடித்துக் கொண்டிருக்கும் மாதாக்கள். குண்டுகளின் தாக்கங்களால் கர்ப்பங்களைக் கலைய விட்டு வெற்று வயிறாய் வெந்து சாகும் அபலைகள். படுத்த படுக்கையாய்க் கிடந்த தம்பெற்றோரைக் கிடப்பிலே விட்டுவந்த பிள்ளைகளின் அங்கலாய்ப்புகள். மணக் கோலம் கலையுமுன்னே பிணக் கோலமாக்கப்பட்ட தம்கணவரைக் கட்டியணைத்தவாறே பித்துப் பிடித்து நிற்கும் பேதைகள். செத்த சொந்தங்களை முற்றங்களிலே விட்டு வந்த மற்றவர்கள். தொட்டிலிலே விட்ட குழந்தையை தேடிப் பிடிக்க முடியாது முட்டி மோதித் திரியும் மாந்தர். கந்தோருக்குப் போன கணவரைக் காணாது தேடிக் களைத்து நாடி ஒடுங்கி நிற்போர்.

நேற்றைய நிகழ்விலே பெற்றவளை இழந்து, இன்றைய பொழுதிலே உற்றவரையும் இழந்து புதைக்கவும் வழி தெரியாது பிணங்களோடு பிணமாகிக் கிடக்கும் பரிதாபம். இடிபாடுகளுக்குள், மடியாமல் கிடப்போரின் முனகல்களின் இரைச்சல். கிடங்குகளுக்குள் போட ஆளின்றி மடிந்து கிடப்போரின் பிணவாடை. எரிகாயங்களையும், வெடிகாயங்களையும் சுமந்து கொண்டு பரிதாபத்துக் குள்ளாகியிருப்போர் பாதிக்குமேல். கல்வியை இழந்து நிற்கும் கணக்கற்ற சிறாகளின் குமுறல். நாறிக் கிடக்கும் மனித பிணங்களை நாடி வந்து குவியும் ஊணுண்ணிகள். வீடுகள் இருந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சிதைவுகளின் மேடுகள். இவை அவற்றுற் சில.

இவையெல்லாம் ஏன் நடந்தன? என்பதை ஆராய்வதால் பாதிக்கப்பட்ட அபலைகட்கு ஏதும் நடந்து விடப் போவதில்லை. அவர்களது கண்ணீரும் செந்நீரும் துடைக்கப்படவோ ஆற்றப்படவோ போவதில்லை. இவற்றினால் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைக்கலாம், கோவைகளின் கனத்தைக் கூட்டலாம். விசாரனைக் கமிஷன்கள் நடத்தப்படலாம், அறிக்கைகள் வெளியிடப்படலாம். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதப் பயனுமில்லை. அவ்வப்போது நடைபெறும் அரச உதவிகளும் அரசுசாரா உதவிகளும் அகதிகளைச் சென்றடைவதைவிட கணக்கறிக்கைகளாகச் சென்றடைகின்றன. மேலும் அதிரடி உதவிகளும், உலருணவு வழங்கல்களும், இன்னபிற நடவடிக்கைகளும் யாருடையவோ வளங்களாகின்றன.
இந்த நிலையில் கண்டனங்களும், கணக்கெடுப்புக்களும், புள்ளி விபரங்களும், பிரச்சாரங்களும், அதையொட்டிய விழாக்களும் நடை பெற்றுக் கொண்டிருக்கும் அளவுக்கு அவ்வபலைகள் மீது, அன்பு செலுத்த, ஆதரவுக் கரம் நீட்ட யாருமில்லை. புண்பட்ட நெஞ்சங்கட்கு புதுத் தெம்புதரும் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க எவரும் முன்வருவ தில்லை என்பது இன்றைய இழிநிலை.இன்னுமோர்படி முன்னோக்கி நடக்கும் விமர்சனங்களும், விவாதங்களும், தோரணங்கள் கட்டித் துயரங்களைப் பேசும் ஈனங்களும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் முன்னெடுப்புக்கள்தான், தாம்பட்ட பாட்டைவிட மேம்பட்டு நிற்பது நம்மவர் மனதை வாட்டுகிறது.

அகதிகள், அல்லற்படும் மக்கள் போன்ற கோஷங்களுடன் உதவி செய்வதாகக் காட்டி உதவிகள் பெற்று உல்லாச வாழ்க்கை நடத்துகிறது ஓர் கூட்டம். அதையே தம்முதலீடாகக் கொண்டு மொத்த வியாபாரம் நடத்துகிறது மற்றோர் கூட்டம். இவர்கள் எரியும் வீட்டில் சுருட்டு பற்றவைத்து சுகம் காணுபவர்கள். பிறரின் துன்ப, துயரங்களில் இலாபம் சப்பாதிப்பதற்கென்றே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாலா பக்கமும் தம் பார்வையைச் செலுத்தித் திரிபவர்கள். ஸ்தாபனங்களைத் திரையாக்கி துயரங்களைக் காசாக்கிக் காட்சிகளை ஆவணமாக்கி கணக்குப் பார்த்து கொள்பவர்கள். இவர்கள்தாம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வித்தகர்கள். மனித உரிமைகள் பற்றிப்பேசுவதையே பணம் சேர்க்கும் வழியாக்கிக் கொண்டவர்கள். சமாதானம் பற்றிப் பேசி விமானங்களில் வாழ்க்கையைக் கழிக்கத் தெரிந்த வல்லவர்கள். யுத்த நிறுத்த கோஷத்தை வைத்துப் பத்திகளிலும். பந்திகளிலும், சந்திகளிலும் முந்தி விரித்துத் தம் புகழைச் சந்தைப்படுத்துவோர். சிந்தையைத் இழந்த அந்தகர்கள்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’. உடுக்கை இழந்தவன் கை அந்த விநாடியே சடுதியாக ஓடித் தன் மானத்தை மறைக்கும் மகத்தான வேலையைத்தான் செய்யும். மாறாகத் துணி தேடும் பணி செய்யாது. அது போன்றிருக்க வேண்டும் உதவிகள். காலந் தாழ்த்தி செய்யப்படும் உதவிகள், தேவைகள் புரிந்து செய்யப்படாத சேவைகள் வள்ளுவரின் கருதுகோளுக்குள் வாரா. பசிக்கில்லா உணவும், பிணிக்கில்லா மருந்தும் பயன்தரப் போவதில்லை. அகதிகள் பெயரைச் சொல்லி தொகையின்றி வசூல் செய்து பகுதிகளைத் தம்விளம்பரங்களுக்கும் படாடோபங்கட்கும் செலவழித்து, காண்பவர் மனங்கவர் பேணர்கள் கட்டி அறப்ப(வ)ணி செய்யும் அவலம் மாற வேண்டும். மனிதாபிமான உதவிகள் கணித பாடங்களாகி விடக் கூடாது. பாவப்பட்டோருக்குச் செய்யும் உதவிகள் சேவையாகவே இருக்கவேண்டுமே தவிர நோவைத் தரக்கூடாது. எதிர்பார்ப்பின்றிச் செய்யப்படாதவை வியாபாரங்களே. களியாட்டத்தில் பெறவேண்டிய இன்பத்தை, அழிவுகளிலும், அனர்த்தங்களிலும் பெற முயலக் கூடாது. பிண விழாவை மண விழாவாக்கி பரிசு தேடலாமா! மரித்துக் கிடக்கும் போதே மனிதாபிமான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
– நிஹா –
22.01.2009