விவாதமா – ஆய்வா உண்மையை வெளிப்படுத்த வல்லது!

மனித நடவடிக்கைகளில் மிக உன்னதமான இடத்ததை வகிப்பது உண்மையைக் கண்டறிவதே! அந்த வகையில் உண்மையைக் கண்டறியும் பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும், உத்திகளும் இருந்தாலும்கூட ஒப்பு நோக்கல் comparative study மிகத் தெளிவான உண்மையைக் கண்டறிய உதவும் ஓர் பொறிமுறையாகப் பார்க்கலாம்.

அந்த வகையில் ஒப்பிடுவதற்கு ஒன்றின் தன்மையை ஒரு கருப்பொருளாகக் கொள்ளலாம். நீர் சிறந்ததா! பால் சிறந்ததா! என்று இரு வேறு பொருட்களை ஒப்பிட முடியாது! அதுபோல் ஆணா! பெண்ணா! உயர்ந்தவர்கள்! கடவுளா! மனிதனா! அதாவது வெவ்வேறு தன்மைகளையும், பௌதிகப் பண்புகளையும் கொண்டவை இரண்டு ஒப்பீடுகளில் பயன்படுத்த முடியாது!

நீரைக் கொதிக்க வைத்து குடிப்பதா அன்றேல் கொதிக்க வைக்காமலே குடிப்பதா நன்மை தரும் என்றொரு தலைப்பை ஒப்பீட்டுக்குப் பயன்படுத்தி நன்மைகளைக் கண்டறியலாம். பாலை, பாலாகவா, தயிராகவா, மோராகவா, வெண்ணெயாகவா நெய்யாகவா உண்பது நல்லது என்றொரு தலைப்பு ஒப்பீட்டுக்கு உதவுவதோடு நல்ல பல தகவல்களையும், நன்மைகளையும் தரும்.

உடல் நலத்துக்கு மிக அத்தியாவசியமானது நீரா பாலா என்றொரு தலைப்பு தெரியப்படலாம்! ஆனால், பாலா- நீரா சிறந்தது என்ற தலைப்பு, குழப்பத்தைத் தவிர வேறொன்றையும் தரப் போவதில்லை. அது போன்றே தாயா – தந்தையா சிறந்தவர்கள் என்ற தலைப்பு ஒப்பீட்டுக்குப் பொருத்தமற்றது. ஆனால். குழந்தையைப் பராமரிப்பதில் தாயின் பங்கா – தந்தையின் பங்கா வேண்டற்பாலது என்ற தலைப்பு உண்மைகளை வெளிப்படுத்தி நன்மை பயக்க வல்லது.

ஓரிடத்தைச் சென்றடைவதில் இரு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் எந்தப் பாதை சிறந்தது என்றொரு தலைப்பு பொருத்தமாக இருக்கும். ஆனால், இரு பாதைகள் இந்நாட்டில் பெரிதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன அவற்றில் எது சிறந்தது என்ற ஆய்வு நோக்கம் எதுவுமில்லாதது, ஆதலால் அதில் அடைவு என்பது கேள்வியே! ஓர் உண்மையை வெளிப்படுத்தும் பண்பு அங்கு காணப்படாது. பாதைகளில் தரத்தால் சிறந்தது என்ற வேண்டுமானால் தேர்வை நடத்தலாம்.

அது போன்றே இரு வகையான சமயங்களை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒன்றை ஒன்று நிராகரிப்பன என்ற பண்பைக் கொண்டவை அவை என்பதால் எவ்வகையிலும் அவை ஒப்பிடுவதற்கோ உண்மையைக் கண்டறிவதற்கோ பயன்படப் பொவதில்லை, மாறாக வீண் பிரச்சினைகளையும், குழப்பங்களையும், கருத்து வேற்றுமைகளையும், மனத்தாபங்களையும், அமைதி யின்மையயும் போன்ற பல நட்டந்தரக் கூடிய பண்புகளை மட்டுமே வெளிப்படுத்தும்.

அத்தோடு, சமயம் சார்ந்த இந்த தலைப்பு, இரு பெரிய சமூகம் சார்ந்தவை. அவற்றை யாரோ இருவர் அல்லது இரு கும்பல் விவாதப் பொருளாக எடுத்து, தமது திறமைகளாலோ, திறமையீனங்களாலோ அவற்றில் தீர்வொன்றைக் காண விழைவது, மக்கள் மத்தியில் பிரளயம் ஒன்றையே உருவாக்க வல்லது. அதனால் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை. உண்மைகளைக் கண்டறிவது என்ற உயர் நோக்குக்கு அங்கே இடமே இல்லை.

இப்போது தலைப்புக்கு மீண்டால், விவாதமா! ஆய்வா! உண்மையை வெளிப்படுத்த வல்லது என்பதற்கு, அது நாம் கருப்பொருளாகக் கொள்ளப் போகும் தலைப்பைக் கொண்டே கூறக் கூடியதாயிருக்கும்.

இருப்பினும், விவாதத்தினால் பெறப்படுபவை முழுமையான உண்மையைத் தன்வசம் வெளிப்படுத்தாது. அது திறமையிலும், வாக்கு சாதுரியத்திலும், அப்போது முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின் மத்தியிலும் தீர்ப்புக்குள்ளாவது. ஆதலால், அது சரியான உண்மையின்பால் நம்மை வழி நடத்தாது. பொழுது போக்குக்காக, தேடலை ஊக்கு விப்பதற்காக, பேச்சுவன்மையை வளர்ப்பதற்காக, ஏற்கும் மனப்பான்மை, தலைமைத்துத்துக்குக் கட்டுப்படுதல், பகைமை பாராட்டாதிருத்தல் போன்ற நற்பண்புகளை வளர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தலாம்.

ஆனால், உண்மையைக் கண்டறிய விளைபவன், மிகச் சிறந்த ஆய்வொன்றையே, தலைப்பின் அடிப்படையில் செய்ய வேண்டும். அங்கு வாக்கு வன்மையோ, எழுத்தாற்றலோ, அறிவோ கூட பெருமளவில தேவைப்படுவ தில்லை. ஆக தாம் ஆய்வில் கண்டறிந்தவற்றை மற்றவர் விளங்கிக் கொள்ளும் அனவிற்கு பாஷை வளம் கொண்டவராகவும், படைப்பாகக் கொடுக்கும் ஆற்றல் கொண்டவராகவும், ஏற்புடை பண்பை ஏற்று ஆய்வு செய்பவராகவும் இருக்க வேண்டும்.

அங்கும் கூட நடுநிலை என்பது மிக மிக வேண்டற்பாலது, நடுநிலையின்றி பக்கச் சார்பாக ஆய்வை மேற்கொண்டி ருந்தால் அது குறுகிய காலத்தில் பொய்யான ஆய்வு என்ற பெயரைப் பெற்று குப்பையைச் சென்றடைந்து விடும். அல்லது தகுதியற்றதாகக் கணிக்கப்பட்டு விடும்.

ஆய்வு நடத்துபவர் சில ஆதாரங்களை வேண்டுமென்றே தனது ஆய்வுக்குப் பயன்படுத்தாது, தான் கொண்டிருந்த உள்நோக்கை நிறைவு செய்வதற்காகவும் ஆய்வை மேற்கொள்ளலாம். அப்படியான ஆய்வுகளும் ஆயுவுகளென்ற பண்பிலிருந்து விலகிச் சென்றமை துல்லியமாகத் தெரிய வைத்து விடும்.

சிறு உதாரணத்தின் மூலம், இதனை விளக்கலாம். இந்நாட்டின் ஆரம்பக் குடிகள் எவை என்ற தலைப்பில் ஓர் ஆய்வை மேற்கொள்பவர்,  நடுநிலையாளராக மட்டும் இருந்தால் மட்டும் போதாது, போதிய தகவல்களின் அடிப்படையைத் தெரிந்து கொண்டவராகவும் இருக்க வேண்டும். சில உண்மைகள் ஆதாரங்களின் மூலம் காட்டப்படாதவையாகக் கூட இருக்கலாம், அனால் அந்த உண்மை, மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாது என்ற பண்போடு ஆய்வை நடத்த வேண்டும். பகிரங்க வேண்டுகோள்களை விடுத்து, எழுத்து மூலமாகவோ, வாய் மூலமாகவோ, ஆவணங்கள் மூலமாகவோ உண்மைகளைக் கண்டறிய முயலல் வேண்டும். அவை கூட முழுமைதான் என்று வரையறை கட்டிவிட முடியாது. அவை குறைபாடுள்ளனவே என்ற குறிப்போடு, எப்போதும் மேலும் உண்மைகளைச் சேர்த்துக் கொள்ளும் பாதைகள் திறந்து வைக்கப்பட்டிருத்தல் அவசியம். இதுவே மக்கள் நலம் சார்ந்த ஆய்வாக ஏற்கப்படக் கூடியது. இப்போது தீர்ப்பை உங்களுக்கே விடுகின்றேன். இது ஒரு ஆய்வுக் கட்டுரை அல்ல. சில நிமிடங்களில் உதித்த சிறு சிந்தனையின் வெளிப்பாடு!

- நிஹா -