அறிந்து அவனது அருட்கொடையை அடைந்து கொள்ள ஓர் வசனம்!

அல்குர்ஆன் 4:147

‘நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்தும், அவனுக்கு நன்றி செலுத்தியும் வந்தால், உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன அடையப் போகின்றான்? அல்லாஹ் நன்றி பாராட்டுகிறவனாகவும் நன்கு அறிகிறவனாகவும் இருக்கின்றான்.’

மேற்கண்ட கருத்திலமைந்த புத்திமதிகள், அன்பு கலந்த ஆலோசனைகள் சாதாரணமாக வழக்கில் வீடுகளில், தாய்மாரால் தமது பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவது. இவ்வசனத்தின் முழு நோக்கும் பிள்ளையின் நன்மை கருதியதே தவிர, கூறுபவருக்கு எந்த நன்மையையும் எதிர்பார்த்துச் சொல்லப்பட்டதல்ல. தாய் தன் பிள்ளையை ஏசவோ, தண்டிக்கவோ செய்வது அப்போது அப்பிள்ளை அறிந்திராத, அப்பிள்ளையின் எதிர்கால நன்மை கருதியதே என்பதை அறிந்து கொண்டால், இவ்வசனம் ஓர் தாயன்பைச் சொரிவது போன்று, எச்சரிக்கைளும் தண்டனைகளும் பற்றிப் பேசும் குர்ஆனை, அறிந்து கொள்வதை இலகுவாக்கும்.

இது ஒரு புறமிருக்க, அவ்வசனத்தை அணுகின், அதில் எதனைச் செய்தால் அல்லாஹ், தான் நம்மைத் தண்டிப்பதனால் ஒரு நன்மையையும் அடையப் போவதில்லை எனக் கூறி, உங்களைத் தண்டிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை மறைமுகமாத் தருகிறான் என்பதை அறிய வேண்டியுள்ளது.

அந்த வகையில், நம் விசாரணைக்கும், பரிசீலனைக்கும் இரண்டு விடயங்களை விட்டு வைத்திருக்கின்றான். ஒன்று, அல்லாஹ்வை விசுவாசித்தல், இரண்டு அவனுக்கு நன்றி செலுத்தல்.

விசுவாசித்தலை நாம் நம்பிக்கை, ஈமான் என்ற வார்த்தைகளால் அறிந்து வைத்துள்ளோம். இஸ்லாமியரின் அடிப்படையே இந்த ஈமான்தானே! ஈமான் கொண்டுதானே நாம் இஸ்லாமியராகி உள்ளோம் என்ற கேள்வியும் நம்முள் எழாமலில்லை.

கேள்வி ஒன்று உண்டானால் ஓரே பதில் இருக்க வேண்டும். அப்படி பதில் இல்லாத கேள்வி, கேள்வியாக இல்லாமல், இன்னொரு கேள்வியை அல்லது பல கேள்விகளை உருவாக்கிவிடும்.

அப்படி எழும் கேள்விகளுள் முதலாவதாக, ஈமான் அல்லது நம்பிக்கை, அல்லது விசுவாசம் கொண்டோம் என்று கூறும் நாம் அந்த விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்துள்ளோமா! என்பது நம் முன்னிற்கின்றது. அடுத்து அடுத்தாகப் பல கேள்விகள் – ஒன்றில் விசுவாசம் கொள்வதென்றால் அறியாமல் எப்படி ஈமான் கொள்வது, நாம் இறைவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறின், அவனை அறிந்து விட்டோமா, எப்படி அறிந்து வைத்துள்ளோம், எப்போது அறிந்தோம், அது வெறும் யூகம்தானா, அல்லது வெறுமனே கேள்வி ஞானமா, அல்லது முன்னோர்கள் கூறிச் சென்றபடி வழிவழியாக வந்ததுதானாத, அல்லது குருட்டு நம்பிக்கையா போன்ற – எண்ணற்ற கேள்விகளுக்கு விடகாண வேண்டியுள்ளது.

போன்றே, அடுத்துக் கூறப்பட்ட அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல் என்ற நிபந்தனை பற்றி அறிய முற்படின், அங்கும் பல கேள்விகள் எழுகின்றன! உதாரணமாக, நன்றி என்றால் என்ன? அதை யாருடையவும், எதனுடையவும் தேவைகளற்ற அல்லாஹ்வுக்கு எப்படி செலுத்துவது, செலுத்துவதற்கு அவனை நாம் அறிந்து விட்டோமா, எதநற்காக நன்றி, ஏன் செலுத்த வேண்டும்? அது வாயினால் கூறும் நன்றி என்ற சொல்லா? அல்லது வேறு ஏதாவது வகையில் அதுவெளிப்படுமா போன்ற எண்ணற்றவை முன்போல் கேள்விகளாக வெளி்ப்படுகின்றன!

அப்படியானால், இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டிய கடப்பாடு நமக்கு வந்து விடுகின்றது. அல் குர்ஆனின் வசனங்களை நாம் நம்புவது போல் இதனையும் நாம் நம்புகின்றோம், இதனை நிராகரிக்கவுமில்லை. மேலும், இவ்வசனம் இறை தண்டனையை நமக்கு ஹறாமாக்கிவிடும் தன்மை கொண்டது போன்ற உயரிய பண்பைக் கொண்டுள்ளமையால், அதனை அறிவதன் அத்தியாவசியமும். அவசரமும் வெளிப்படுகின்றது.

இவைகளை அடைவதற்கு, அல்லாஹ் பற்றிய புரிந்துணர்வு மட்டும் போதாது, அவன் பற்றிய அறிவும் வேண்டப்படுகின்றது. அதனை நாம் குர்ஆன் வழியாகக் காண வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. தேடலின் அவசியம் புலப்படுகின்றது. ஆக நாம் இஸ்லாமியன் எனக் கூறிக் கொள்வதற்கு ஈமான் கொள்வதை – குர்ஆனை ஓதியுணர வேண்டிய தவிர்க்க முடியா நிலை உள்ளதை- இங்கு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வேதங்களைப் பற்றி ஈமன் கொண்டேன் எனக் கூறும் ஒருவர் வேதத்தை அறியாமல் ஈமான்கொள்ள முடியாது என்பதைனை ஏற்க முடியுமாயின். அல்லாஹ்வை அறியவும் வேதத்தை, சிறப்பாக புனித குர்ஆனை, ஓதியுணர்ந்து கொள்ள வேண்டியே உள்ளது.

இதனை இன்னும் அறிவதாயின், இன்னும் அவர்கள் எத்தகையவர்களென்றால், தங்கள் ரப்பின் வாசகங்களைக் கொண்டு நினை வூட்டப்பட்டால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் அதில் விழமாட்டார்கள். அல் குர்;;ஆன் 25:43. இவ்வசனம் மிகத் தெளிவாக எமது நம்பிக்கை குர்ஆனின் ஆய்வினடிப்படையில் நம்பிக்கை கொள்வதை வலியுறுத்தி நிற்கின்றது.

மீண்டால், அல்லாஹ்வை அறிவதற்கு, அவனது கலாமைத் தவிர இன்னொன்று நமக்கு உதவ முடியாது என்பதனால் அதில நமது கவனத்தை ஈர்க்கவே வேண்டியுள்ளது. குர்ஆனில், நமது முயற்சி அல்லாஹ்வினால் ஏற்கப்படுமாயின், பொருத்தமான வசனங்களை நாம் காண்பது, அறிவது, விளங்கிக் கொள்வது மட்டுமல்ல, அல்லாஹ்வின் நாட்டமும் இருப்பின் அதன் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது இன் ஷா அல்லாஹ், அல்லாஹ்வில் நம்பிக்கை கொள்வதில் ஒரு முழுமையை அடைய முடியும். சுருக்கம் கருதி அல்லாஹ்வை அறிவது பற்றிய பல வசனங்களைப் பதிவதைத் தவிர்த்துள்ளேன். அதிகமான வசனங்க்ள நமது தேடலை ததூண்டுவதாகவே அமைந்தவை. உதாரணமாக 5:35 – அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கான வழிகளைத் தேடிக் கொள்ளுங்கள்.

இப்போது, இரண்டாவது நிபந்தனையின்பால் கவனத்தைச் செலுத்துவதற்கும் அவனது குர்ஆனிய அறிவே தேவைப்படுகின்றது. நன்றி பற்றி அல்லாஹ் என்ன கூறியுள்ளான் என்பதைப் பார்க்கும் போது, 24:13 எம்முன் வந்து நிற்கின்றது. அது, நன்றி செலுத்துவதற்காகச் செயல்களைச் செய்து வாருஙகள். என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துவோர் குறைவானவர்களே! எனக் கூறுகின்றது. தேவைகளற்ற அல்லாஹவுக்கு நன்றி செலுத்துவது எப்படி என்று இவ்வசனத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒருவர், அல்லாஹ் நாடினால் கண்டு கொள்வர்.

ஆக ஈமான் கொள்ளவும், நன்றி செலுத்தவும் முடியுமானால், அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நாம் காக்கப்பட்டு விடுகின்றோம். ஆம், அவன ஈமான் கொண்டவர்களைப் காப்பதைத் தன் கடமையாக்கிக் கொண்டவனல்லவா, அதனால். நாம் கடைத்தேறும் இலகு வழிகளை நமக்கு அறிமுகமாக்கி, அதில் முயல்வோரை வெற்றி கொள்ள வைத்து, தன் தண்டனையை அவர்களுக்கு ஹறாமாக்கி விடுகிறான் என்பது தெளிவாகின்றது.

என்னுடைய முன்னைய ஆக்கமான, “வல்ல நாயனை நினைவு கூர்ந்து நல்ல வாழ்வைப் பெறுவோம்“ என்பது உதவக் கூடியதாக இருக்கலாம். அனைத்திலும் முயற்சி நம்முடையதே! முயற்சிக்கேற்பவே கூலி, முயற்சித்ததே தவிர இல்லை போன்றவை எல்லாம் அவன் கூற்றே!

– நிஹா -