நம்மைப் பற்றிச் சில விநாடிகள் சிந்திப்போமே!

 

முன்னைய பின்னூட்டம் ஒன்று கண்ணோட்டத்திற்காக….

 

மிக நேர்மையான முறையில் குர்ஆனியக் கருத்துக்களின் அடிப்படையில் தற்போதைய பிரச்சாரகர்களாக அல்லது பிதாமகர்களாக, அல்லது பாதுகாப்பாளர்களாக, அல்லது சீர்திருத்தவாதிகளாகக் கூறிகொண்டு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி வருவோரைப் பற்றிய விமர்சனத்தை நடுநிலையில் நின்று வாசித்து அறிந்து கொள்ளும், ஆர்வமோ, ஏற்கும் மனமோ, விளங்கிக் கொள்ளும் ஆற்றலோகூட சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்குமோ என்பது தெரியவில்லை. 

அதற்கு மூலகாரணமாக உள்ளமை, உய்த்துணர்ந்து, ஐயமற அறிந்து, பின்பற்றி இறைநெருக்கத்தை தேடும் வழிகளைக் கைவிட்டு, இஸ்லாத்தைக் காப்பதாகவும், மற்றவர்களைத் திருத்துவதாகவும் கூறிக் கொண்டு, தமது மனோஇச்சையை மட்டுமே முதலாகக் கொண்டு வெளிப்பட்டமையே இறைவனின் அனுக்கிரகம் அவர்களுக்குக் கிடைக்காமல் இன்று மிகக் கேவலமான நிலையை அடைந்தமை என்பதாககக் கொள்ளலாம். 

விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதiனையை ஏற்படுத்துகின்றான் என்பதன் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது. 

எதில் உங்களுக்கு தீர்க்கமான ஞானமில்லையோ அதனைப் பின்பற்றாதீர்கள் என்ற இறைகருத்து உணரப்படாமையும் அல்லது ஏற்கப்படாமையும் தற்போதைய பிரச்சினைகளுக்குக் கால்கோளாகியுள்ளன.

மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக என்ற அல்லாஹ்வின் ஆணை ஏற்கப்பட்டிருந்தால் இந்த அடிதடிகள் உருவாகியிராது.

ஏற்பவர்களிடமே நமது இஸ்லாமிய கருத்தை வெளியிட வேண்டும் என்ற இறை கட்டளை அறியப்பட்டிருந்தால் பிரச்சினைகள் உருவாகாது, சாந்தி, சமாதானம் நிலவும். காரணம் ஏற்காதவர்களுக்குக்கூட ஸலாம் கூறி விடை பெறுமாறு அறிவுறுத்தியுள்ள மார்க்கம் நமது அண்ணலார் நடை முறைப்படுத்திச் சென்ற மார்க்கம். 

அல்லாஹ்கூட எவர் தனது கருத்தை ஏற்பார் என்பதைத் தெரிந்தே வழி காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளான். வழிகாட்டும் பொறுப்பை அல்லாஹ்வே தனதுரிமையாக்கிக் கொண்டுள்ளான். அறிந்தவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை அறியாதோருக்கு அப்படியே அறிவித்துவிட வேண்டும். 

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற கருத்து ஏற்கப்பட்டிருந்தால் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். 

தமக்குத்தாமே பெயர் சூட்டிக் கொண்ட இயக்கங்களே இன்று பிரிவினைகளைத் தோற்றுவித்து, சீர்திருந்திய பின்னர் குழப்பத்தை ஏற்படுத்துவனவாக மாறியுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படை பற்றிய எவ்வித புரிதலோ, சுயவிமர்சனமோ, எடைபோடுதலோ எதுவுமே இன்றி, ஏதோ காரணிகளை முதன்மைப்படுத்திக் கொண்டு, மற்றவர்களைப் பிழை காண்பதும், அவர்களைத் தூஷிப்பதும், எள்ளி நகையாடுவதும், தமது கருத்துக்களைப் பலவந்தமாகப் புகுத்த முனைவதும் என்ற வாக்கிலேயே அனைத்தும் நடைபெறுகின்றன. 

தொழுகையை நிலைநிறுத்துவது பற்றி அல்லாஹ் எத்தனையோ இடங்களில் கூறிக் கொண்டிருக்கின்றான் அது பற்றி சிந்திப்பதில்லை. அல்லாஹ்வை நினைவு கூரும்படி, அவனுக்கு நன்றி செலுத்தும்படி நிறையவே அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான். அவைகள் என்ன என்றாவது அறிய முற்படுவதில்லை. வெறும் சொல் விளையாட்டுக்களை தமதுடமையாக்கிக் கொண்டால் போதுமென நினைத்துக் கொண்டுள்ளார்கள் என்றே நினைக்க வைக்கின்றது.

ஈமான் கொண்டோம் எனக் கூறுபவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்லர் என்ற இறைவாக்கின் ஆழத்தைப் புரிந்திருந்தால், 3:18ல் கூறப்பட்ட, நீதியை நிலை நாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத் தவிர யாருமில்லை என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். அவ்வாறே வானவர்களும் அறிஞர்களும் சான்று பகர்கின்றனர்…. எனக் கூறியிருப்பதை சற்று சிந்தித்தால் நமது நிலையை விளங்கி நாம் கடைத்தேறும் வழிகளைக் கண்டிருப்போம். 

இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள்… என்ற 5:35இன் இறையறிவுறுத்தலை ஏற்றிருந்தால் தம்மைப் பற்றிய நிலையை அறிந்து கடமையை உணர்ந்து செயற்பட்டிருப்பர். முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்ற இறை அழைப்பு, குர்ஆனை அறியவாவது வைத்திருக்கும். அவ்வழியில் முயன்றோருக்கே அல்லாஹ் வழிகாட்டுவான்.

 

 

-    நிஹா -