குர்ஆனை விளங்கிக் கொள்வது இறைவழியில் நடக்க விரும்பும் அனைவரதும் கடமையா !
அல்லாஹ் ஒரு விடயத்தைத் தொடங்கு முன்னர் அது பற்றிய அறிவை, எச்சரிக்கையை, அனர்த்தத்தை தெளிவாக விளக்கமாக, சந்தேகமற அறிவித்தலாகத் தந்து விடுகின்றான், அவ்வாறு தரப்பட்டவையே அனைத்து, வேதங்களும், ஆகமங்களும், வேதக் கட்டளைகளும்.
அந்த வகையில் அகில உலகிற்கும் அருட்கொடையாக அவணியில் உதித்த எழுத்தறிவற்றதால் உம்மி எனவும், நம்பிக்கைக்குப் பாத்திரமான உண்மையாளராக இருந்ததனால் அல் அமீன் எனவும் பெயர் பெற்ற முஹம்மது நபி அவர்கள் இறுதியாகக் கொணர்ந்த வேதமும் அருளப்பட்டது.
அவர்களுக்கு அடிப்படை இஸ்லாமிய அறிவு கொடுக்கப்ட்ட பின்னரே, மக்கள் மத்தியில் அவரது போதனையைத் தொடங்கும்படி அல்லாஹ் அனுமதி கொடுத்தான். அதற்குப் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும், இறைவனின் தீர்ப்பைப் பொறுமையுடன் எதிர்பார்த்திருக்கும்படி பணித்து அப்படியே குர்ஆனை முழுமையாக்கி, அதன் பின்னரே இன்றோடு எனது அருட்கொடையை அகிலத்தாருக்கு முழுமையாக்கி விட்டேன் எனப் பறைசாற்றுகின்றான்.
மேற்கண்ட உண்மைகள், குர்ஆனிய அறிவைப் போதுமான அளவில் தக்கவைத்துக் கொண்டிருப்பதன் அவசியத்தை வெளிப்படுத்துவதுடன், பின்வரும் வசனம் அதனைக் கடமையாக்கி வைக்கின்றது,
தீர்ப்புக்கள் யாவும் திருமறையின்படி கொடுக்கப்படல் வேண்டும் என்ற அல்லாஹ்வின் 4:105ஐப் பின்பற்ற வேண்டுமானால், அனைத்து முஸ்லிம்களும் குர்ஆனை விளங்கி வைத்திருக்க வேண்டியது கடமையாகிவிடுகின்றது. குர்ஆனை விளங்காமல் இறையாணைப்படி தீர்ப்புக்களை எப்படி வழங்குவது என்ற ஒன்றே நாமனைவரும் குர்ஆனை விளங்கி அறிந்திருக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை நமக்கு மிகத் தெளிவாக விளக்கிக் கொண்டிருக்கின்றது. இது அல்லாஹ் கூறிய இலகு, தெளிவு, உண்மை, நீதி போன்றவற்றை நிரூபிப்பன.
இதனை வலியுறுத்த மேலும் சில வசனங்களைக் குறிப்பிடுவது, தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்துக் கொள்ள உதவும். குர்ஆனின் வசனங்கள் கூறப்பட்டால் அதனை குருடர்களைப் போன்று பின்பற்ற வேண்டாம். எதில் உங்களுக்குப் பூரணமான அறிவில்லையோ அதனை நீங்கள் பின்பற்றாதீர்கள். இதிலுள்ள சிறந்ததைத் தேடுங்கள். விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையை ஏற்படுத்துகின்றான். இவ்வுலகில் ஊர்வனவற்றுள் மிக மோசமானவர்கள் விளங்கிக் கொள்ளாத மூடர்களே! போன்றவை அறிதலின் அத்தியாவசியத்தையும், அது சந்தேகமற அறிவது என்பதையும் கூறிக் கொண்டு இருக்கின்றன. அறிந்தவற்றை மீண்டும் மீண்டும் குர்ஆனில் உரைத்து தெளிவடைய வேண்டும். அறிதலின் போது முரண்பாடுகள் தோன்றாமை மிக முக்கியமானது. குர்ஆனும் முரண்பாடற்றது, சந்தேகமற்றது.
இன்னும் கூறின், நீங்கள் முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். அறியாதவராக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். எனது வழியில் முயன்றால் நான் உங்களுக்கு வழிகாட்டுவேன். முயற்சிகள் அனைத்தும் கணக்கெடுக்கப்படும். முயற்சித்ததே தவிர இல்லை. நமது முயற்சிக்கு ஏற்பவே கூலி வழங்கப்படும் போன்றவைகூட அறிதலுக்கான முயற்சிகளின் அவசியத்தை வெளிப்படுத்தி நிற்பனவே!
அறியாமையில் உழல்பவர்களைப் புறக்கணிக்குமாறும், அறிவீனர்களில் ஆவதைவிட்டும் பாதுகாப்புத் தேடுமாறும். அறிவீனர்களுடன் உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருப்பதும், அறிவீனர்களுடன் தர்க்கிக்க நேர்ந்தால் ஸலாம் கூறி விலகிக் கொள்ளுங்கள் எனவும் கூறியிருப்பவை அனைத்தும் நமது அறிதலின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தி விளக்கி நிற்பனவே!
மேலும். நம்மைச் சூழவுள்ள அனைத்திலும் அறிவு உண்டென்றும், அதனைச் சிந்தித்து அறியுமாறும், நமக்குள்ளேயும் கூட அறிவதற்கு நிறைய இருக்கின்றது என்பதனால் உங்களுக்குள்ளேயும் உற்று நோக்க வேண்டாமா என்பவை எல்லாம் அறிதலின் பாற்பட்டனவே என்பதை அறிதல், நம்மை வழி தவற விடாமல் பாதுகாக்கும்!
சிறு உதாரணமாக: நாம் ஒரு பயணத்தைத் தொடங்கு முன் எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம். அவைகளை சற்று சிந்தித்தால் அறிய வேண்டியதன் முக்கியத்துவம் தெளிவாகும். விளக்க வேண்டிய அவசியமில்லை காரணம் இதனையும் அறியாதோர் இவ்வாக்கத்தினால் விளக்கம் பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதே!
அறிவதன் அவசியம் முதலில் உணவில் தோன்றியிருக்க வேண்டும். உயிர் வாழ்வதற்கான சுவாசத்தை இறைவன் இயற்கையாகவே நம்மில் நடைபெற வைத்திருப்பதனால் அதனை அறியும் தேவை பிற்படுகின்றது. ஆனால், பசியை உணர்த்தியதால், அதனைத் தேட அனைத்து வழிகளையும் காண வேண்டியுள்ளது.
நமக்கோ அன்றைய மனிதனின் நிலை இருக்கவில்லை. நம்மிடம் கைவசமாக ஒரு யாப்பு உள்ளது. அது சரியான முறையில் வழிகாட்டப்படுவதற்காக வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவால், காலத்துக்குக் காலம் மனித வர்க்கத்திற்கு, தனது தூதர்களின் மூலம் அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டவற்றின் தொகுப்பாக, நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களுக்கு இறக்கி அருளப்பட்டது. அதனையே அவர்கள்தம் வாழ்வின் 23 வருட வாழ்க்கையாக நடைமுறைப்படுத்த வைத்து, அதில் எவ்விதச் சிக்கலும், முரண்பாடும், சந்தேகமும், சிரமமும். வழிகேடும் இல்லை என்பதனை நிரூபித்துள்ளான் கருணையே உருவான காருண்யன்.
அந்த வகையிலேயே, தனது, நமக்கான வாழ்க்கைச் சட்டத்தைத் தன் இறுதித் தூதர் மூலம் அருளி, நடைமுறைப் படுத்திக் காட்டித் தனது அருட்கொடையை முழுமையாகச் சொரிந்து, நிறைவு செய்துள்ளதாகக் கூறியுள்ளான். ஆகவே, அல் குர்ஆனே அவனது முழுமையான அருள் நிறைந்த பெட்டகம் என்பதையும் அதனை அறிவதே நமது வாழ்வின் அர்த்தமுள்ள செயற்பாடு என்பதையும் அறிந்து கொள்வது, நமது விடிவுக்கான சரியான பாதையைத் தேர உதவும்.
அதனாலேயே அல்லாஹ்வும் இவ்வேதத்தை தனது வேதமாகத் தெரிவு செய்துள்ளான். இவ்வேதமல்லாத எதுவும் அவனால் ஏற்கப்படமாட்டாது என்ற எச்சரிக்கையையும் நமக்கு விடுத்துள்ளான்.
ஆதலால், அறிதல் என்ற வரைபுக்குள் நுழையும் முன்னர் நாம் எதனை அறிவது என்ற தேடலைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக நாம் பிறந்த நோக்கத்தினை முதலில் அறிய வேண்டியுள்ளது. மற்றவை அதற்கான கருவிகளாக இருக்கும்.
ஆக, நாம் பிறந்ததன் நோக்கம். இறைவனை அறிதல் என்ற உண்மை குர்ஆனின் ஒவ்வொரு விடயத்திலும் இருந்து தெளிவாகின்றது.
ஒருவன் தான் முஸ்லிம் என்று கூறிக் கொள்வதற்கே லா இலாஹ இல்லல்லாஹு என்ற அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற வசனத்தை வாயினாலும் மனத்தினாலும் கூற வேண்டியிருக்கின்றது. மேலும், கூறுவதுடன் வாயளவில், மனத்தளவில் நின்றுவிடக் கூடாது என்பதற்காக வல்ல அல்லாஹ் நம்மைச் சரியான வழியில் செல்வதற்கான ஏற்பாடாக தனது அருள் மறையில் 3:18 வசனத்தை பதிவாக்கியுள்ளான்.
அது, ‘நீதியை நிலை நாட்டக்கூடியவனாக உள்ள நிலையில், ‘தன்னைத் தவிர யாரும் இல்லை’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர். அவனைத் தவிர வேறு யாருமில்லை. மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான். என்பதே!
இப்போது, நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத் தவிர யாருமில்லை என்பதை, தன்னுடன் வானவர்களையும் சேர்த்துக் கூறும் போது மனிதர்கள் எனக் கூறாது, அறிஞர்களை முன்னிலைப்படுத்துகின்றான். இதுவும் அல்லாஹ்வை அறியாமல் சாட்சியம் கூற முடியாது. அப்படி அல்லாமல் நாம் அறிந்ததாக சாட்சியம் கூறுவோமேயானால், அது அல்லாஹ்வின் மேல் பொய்யுரைத்த குற்றமாகிறது. மேலும். அல்லாஹ்விடமே பொய் சொல்லுவதாகவும் ஆகிவிடுகின்றது. அல்லாஹ்வின் மேல் பொய் கூறுபவர்களைக் கொடுமைக்காரர்கள், பொய்யர்கள், அநியாயக்காரர் என்றெல்லாம் கூறியுள்ளதுடன். அவர்களுக்குக் கேடுதான் எனவும் சாபமிட்டுள்ளான்.
அப்படியானால், எப்படி அல்லாஹ் பற்றிய அறிவைப் பெற்று அவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை மனமாற வெளிப்படுத்துவது. அதற்கு அவனே பல் வகை உத்திகளைக் குர்ஆனில் தந்திருந்தாலும், அவைகளில் முக்கியமானதாக ஞாபகப்படுத்துவதையே அதாவது நினைவு கூர்தலையே முதனிலைப்படுத்துகின்றான்.
ஆக, ஞாபகப்படுத்தல் என்பது ஏற்கனவே பெறப்பட்ட அநுபவத்தை அடியாகக் கொண்டது. அதனால் நாம் காண்பதன் மூலம் பெற்ற அனுபவமாக இருப்பதைத் தவிர வேறொன்று இருக்க முடியாது!
அப்படியானால், இந்த அனுபவம் நமக்கு உண்டா என்ற கேள்வி நம்முன் வந்து நிற்கின்றது. ஆக, அல்லாஹ் ஞாபகப்படுத்தும்படி கூறியிருப்பதால் அதனை நாம் ஏற்றே ஆக வேண்டும். அன்றேல் நமது ஈமானே ஈடாட்டம் கண்டு விடும். இந்த அடிப்படையுடன் தேடின், அதனைத் தீர்க்கமாக அறிந்து கொள்ள அவனது வசனமே நமக்கு உறுதுணையாகும்.
அது, 7:172இல் கூறப்பட்டுள்ள,‘இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளிலிருந்து. அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?’ ‘ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்’ என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும். ஏனென்றால், ‘நிச்சயமாக நாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்’ என்று நீங்கள் மறுமை நாளில் கூறாதிருப்பதற்காக.’
இப்போது நாம் அவனைப் பார்த்திருக்கிறோம் என்பதை, அல்லாஹ்வின் வாயிலாக அறிந்து விட்டோம். ஆனால், மேலும், விளக்கம் ஒன்று தேவையாகின்றது. அதாவது, அது, அல்லாஹ்வை யாரும் காண முடியாது என்ற ஓர் ஒப்பற்ற உண்மை. ஆம், அல்லாஹ்வும் அதனை மறுக்கவில்லை. அவனை யாருடைய பார்வைகளும் அடைவதில்லை என்கின்றான். அதேவேளை, அவன் எல்லோருடைய பார்வைகளையும் அடைகின்றான் என்று அனைத்து சந்தேகங்களுக்கும் ஆப்பு வைத்து, நமது பார்வைகளை அவன் அடைந்த நிலையிலேயே, நம்மிடம் நான் உங்கள் ரப்பு அல்லவா என்று கேட்டிருக்க வேண்டும்.
உடனே, நாமும் தேடலுக்கிடமில்லாமல், எடுத்த எடுப்பிலேயே ‘ஆம் நாங்கள் சாட்சி கூறுகின்றோம்’ என ஓரே சமயத்தில் ஏகோபித்துக் கூறியுள்ளோம். ஆக, முன்னர் கண்ட ஒன்றை நாம் ஞாபகமூட்டலின் மூலம் காணலாம் என்பதை மறுக்கமாட்டோம் என்ற நிலையில், அவனை ஞாபகமூட்டலின் மூலம் காணலாம் என்பதை வலியுறுத்துகின்றான்.
அதற்காகவே குர்ஆனில் பல இடங்களில் அவனை நினைவுகூரும்படி, அதிகம். அதிகமாக நினைவுகூரும்படி, அனைத்துத் தொழுகைகளின் போதும் நினைவு கூர்ந்த வண்ணமே இருக்கும்படி எல்லாம் கூறியுள்ளான்.
பார்வையிற்படாத எதுவும் மனதில் இருப்பதில்லை என்பதால், அதிகமதிகமாக நினைவுகூரல் என்ற எத்தனத்தால் பார்வைக்குள் கொணர வேண்டும். அப்பொழுதே நாம் அவனை மறவாதவர்களாக இருப்போம். மறதியாளர்களாக இருந்துவிட்டோம் என்ற கையறு நிலையை மறுமையில் வெளிப்படுத்த மாட்டோம்.
அப்படி அல்லாதோரை, அல்லாஹ் 18:101இல் விமர்சிப்பதனை அறிவது மேலும் அல்லாஹ்வை காண்பதன் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. ‘அவர்கள் எத்தகையோரென்றால், என்னை நினைவு கூர்வதைவிட்டும் அவர்களது கண்கள் திரைக்குள் இருந்தன. மேலும், அவர்கள் செவியேற்கச் சக்தி அற்றவர்களாக ஆகிவிட்டனர்.’
இதன் காரணமாகவே, மீண்டும் ஓரிடத்தில், இம்மையில் குருடர்கள் மறுமையிலும் குருடர்களே என்பதனைக் கூறியுள்ளான். இவை அனைத்தும் விளங்கிக் கொள்ளப்படாத வரை நமக்கு ஈடேற்றம் என்ற படிகளைக் கடந்து கொள்ள முடியாது. நாம் படிப்படியாககட கடக்க வேண்டியுள்ளது என்பது அவனது அறிவுறுத்தலே!
அதனால், தேவையற்ற விடயங்களில் வீணே தர்க்கித்துக் கொண்டு காலத்தை இழந்து, மறுமையில் நமது கெஞ்சல்களுக்கு, அல்லாஹ்விடமிருந்து, ‘உங்களுக்குப் போதுமான வயதை நாம் தந்திருக்க வில்லையா’ என்ற பதிலைப் பெறுவதைத் தவிர்த்துக் கொள்வது, நரகிலிருந்து தப்பிக்கும் வழியாகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
- நிஹா -