நீதித்துறையில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படாதவரை நீதியை நிலைநிறுத்துவது என்பது வெறும் பகற்கனவாகவே இருக்கும்.
சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது குற்றச் செயல் நடந்து விடாமல் தடுப்பதற்காகவே தவிர, அதே சட்டமே குற்றச் செயலுக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கல்ல. குற்றச் செயல் சரியான தண்டனையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், குற்றச் செயல்களுக்கு எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாக சட்டங்களே அமைந்து விடுகின்றன.
இந்த நாட்டில் நடைபெறும் அநேக வழக்குகள் சட்டத்தை சாதகமாக்கிக் சாமான்யர்களைத் தண்டிப்பதாகவும், கொள்ளையரும். கொலைகாரரும் தப்பித்துச் செல்வதற்கு உதவுவதாகவுமே காணப்படும் நடைமுறைகளாக அமைந்திருக்கின்றன.
தற்போது நடைமுறையிலுள்ள நீதிபதி நியமனங்களில் பின்பற்றப்படும் வழி முறைகள் சிறந்த நீதிபதிகளை மன்றுகளுக்குத் தந்துவிட முடியாது. சட்டம் கற்றவர்கள் எல்லோரும் நீதிபதிகளாகிவிட முடியாது என்பதை நீதித்துறை உணராத வரை சிறந்த நீதிபதிகளை நாட்டுக்குத் தந்துவிட முடியாது. நீதியையும் நிலை நாட்டிட முடியாது.
நீதிபதியாக வர வேண்டியவருக்கு இருக்க வேண்டிய சட்ட அறிவுக்கு மேலாக அவரிடம் காணப்பட வேண்டிய அறிவுகள், பண்புகள், குணாம்சங்கள் நிறையவே உள்ளன. அவைகள் நீதிபதியிடம் காணப்படாதவரை அவரிடமிருந்து நீதியை மக்கள் எதிர்பார்க்க முடியாது. நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகளை நான் இங்கு வரிசைப்படுத்துவதாயிருந்தால், நீதிபதிகளின் மன உளைச்சலுக்கு நான் காரணனாகி விடுவேன். காரணம் அவர்களே அப்பண்பு தம்மிடம் காணப்படாமையை உணர்ந்து என்மீது சிலவேளை சினங்கொள்வர் அன்றேல் வெறுப்படைவர்!
ஒரு குற்றச் செயலுக்காக யாரோ ஒருவர் கைது செய்யப்படுவார், அவர் நீதி மன்றில் நிறுத்தப்படுவார். அவருக்கெதிராக சாட்சியங்கள் இல்லாது அல்லாது போதாமல் இருக்கும். அதனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அத்தோடு அக்குற்றச் செயலும் கண்டு பிடிக்கப்படாமல் கதவுகள் மூடப்பட்டு விடும்.
நீதிபதி தனக்கு முன் வைக்கப்படும் வழக்குகளை சட்டத்தரணிகளின் முன்வைப்புகளுக்கு இணங்க, தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கேற்ப நீதி வழங்கும் வேலையைச் செய்ய முயல்கிறார். இம்முறை, பொய்ச் சாட்சியங்களும். தயாரிக்கப்பட்ட ஆவணங்களும்கூட மகிமைபெற்று நீதியை சேதியாக்கி விடுகின்றன.
நீதிபதியிடம் காணப்படும் அதிகார எல்லை, உண்மையைக் கண்டறிவதில் சம்பந்தப்பட்டவர்களை ஈடுபடுத்த அவரைத் தூண்டுவ தில்லை. சமர்ப்பிக்கப்படும் வாதங்களினதும், ஆவணங்களினதும் கூடுதல் குறைவே தீர்ப்பை எழுதுவதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. அவை செல்லாத் தன்மையைக் கொண்டிருந்தாலும், அவை எதிர்த் தரப்பினரால் கேள்விக்கு உள்ளாக்கப்படாத வரை அவற்றின் உண்மைத் தன்மை பரிசீலிக்கப்படுவதில்லை. பரிசீலிக்கப்பட வேண்டும் என்றாலும், அது முழுமையான, நம்பகமான பரிசீலிப்புக்கான தீர்வைத் தருவதில்லை. நாட்டின் நடைமுறை ஊழலுள் சிக்கிக் கொள்கின்றன.
தற்போதைய நடைமுறையில் தனி மனிதன் தனது வழக்கைத் தானே பேசும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தாலும், அவ்வுரிமைக்கு அவ்வளவாக மன்றுகளால் மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. சட்டத்தரணியின் உதவி நாடும்படி வேண்டப்படுவர். தனிமனிதனிடம் Professionalism தொழில் நிபுணத்துவத்தை நீதிபதிகள் எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம் உள்ள உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் நீதிபதி வழக்கு விசாரனையை முன்னெடுக்கும் பண்புகள் உள்வாங்கப்பட வேண்டும்.
சட்டத்தரணிகளின் வாதத்திறமை ஒரு வழக்கின் தீர்வுக்கு முடிவாகி விடக் கூடாது. சில பெறுமதியற்ற சில்லறைக் காரணங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்யும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது, சட்டத்தரணி களின் இயலாமை, கையாலாகாத்தன்மை, பிரதிவாதிகளிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தனது கட்சியை தோற்கும் நிலையில் விட்டுவிடுவது போன்றவை தீர்ப்புக்களுக்கு ஆதரவாகிவிடக் கூடாது!
சட்டத்தரணிகளில் அனேகமானோர் பணம் பண்ணும் தொழிலாகவே தமது சட்டத் தொழிலைச் செய்து வருகிறார்களே தவிர, நீதியை நிலை நாட்ட வேண்டும், நீதி தேவதைக்குத் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற பக்தியோடு, பயத்தோடு செய்வதில்லை. தமது வழக்கை வெல்ல வேண்டும் என்பதற்காக அநீதியையும் நீதியாகச் சித்தரிக்க முனைகிறார்கள். அல்லது அவர்களே இவ்வழக்கை வெல்வதற்கு எவ்வாறான குறுக்கு வழிகளைக் கையாள வேண்டும் என்பதைக் கூறி அவ்வழியில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வர்.
சட்டத்தரணிகளின் வாதத் திறமை, கையாண்ட தந்திரோபாயங்கள், உண்மையை மறைப்பதில் உள்ள செயற்பாடுகள் போன்ற இன்னோரன்னவை நீதியை நிலைநாட்ட தடையாயிருந்தமைக்காக ஒரு போதும் அவர்கள் தண்டிப்பட்டதாகச் சரித்திரம் இல்லை. மாறாக எப்படியாவது வழக்கை வெல்வது சட்டத்தரணிகளின் திறமையாகக் கருதப்பட்டு அவருக்கு பேரும், புகழும், பணமும் குவிகின்றன. இந்நிலை நீதிநிலை நிறுத்தப்படுவதற்கு உதவுவதாக இருக்க முடியுமா?
இன்னும் பல விடயங்கள் நீதியை நிலைநாட்டுவதில் பாரிய தடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் கண்டறியப்பட்டு களையப்படாத வரை நீதி தேவதை கண்ணைக் கட்டிக் கொண்டு அழுத வண்ணமே இருப்பாள்!
தீர்ப்பை அளிப்பதற்காக வேண்டப்படுபவை உண்மையே! தவிர, ஆவணங்கள் அல்ல! ஆவணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுவதால், போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் நீதியைக் கேள்விக் குறியாக்கிவிடுகின்றன.. ஆவணங்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்கவோ, போலித்தன்மையை வெளிப்படுத்தவோ ஒரு சாதாரண பிரஜையால் முடியாது. அதற்கு நிறையவே காரணங்கள் உண்டு. நீதியைக் கண்டறியும் பாரிய பொறுப்பு அரசு சார்ந்தது. அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவற்றின் உண்மைத் தன்மைகள் நீதிபதியால் கண்டறியப்படும் பண்பு உருவாகுமேல், போலி ஆவணங்கள் நீதிமன்றுகளை நிறைக்கா. போலி ஆவணங்களைச் சந்தைப்படுத்துவோர் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படல் வேண்டும். அப்போதே மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொள்வர். எப்போது நீதித் துறையில் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுகின்றனரோ, அப்போதே, குழப்பங்களுக்கான அத்திபாரம் போடப்பட்டு விடுகின்றது!
இந்நிலையைச் சீர்செய்ய பல்வேறு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றில் மறைந்துள்ள உண்மையைக் கண்டறிய பாரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். திருடர்களினதும், கொள்ளையர்களினதும், கொலைகாரர்களினதும், காணி அபகரிப்பாளர்களினதும் கைவண்ணத்தால் நீதி செயலிழந்து, அவர்களுக்கு சட்டபூர்வ காப்பாளர்களாக மாறிவிடும் நிலை ஆரோக்கியமானதல்ல. இது ஒரு சிறிய ஆய்வே, வேண்டுமாயின், இவைகளை போலியாகத் தயாரிக்கப்பட்டு மன்றுகளை ஏமாற்றி, நீதியை அழித்த ஆவணங்களைக் கொண்டு வெளிப்படுத்தலாம். நொத்தாரிசுகளின் ஆவணங்களே அவற்றை நிரூபிக்கப் போதுமானவை!
ஒரு ஆவணம் பதிவிற்காக வருமாயின், அதன் உண்மைத் தன்மை அறியப்படல் வேண்டும். அதற்காக பகிரங்க அறிவித்தல் கொடுக்கப்பட்டு, அதற்கு எதிர்ப்புக்கள் வராத நிலையிலேயே அவைகள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவதை அனுமதிக்கக் கூடியவாறான சடடங்கள் இன்றியமையாதன. அதிகாரிகளின் ஒத்துழைப்போடும். சில நொத்தாரிசுகளின் திறமையான தில்லுமுல்லுகளாலும் போலி ஆவணங்கள் பதிவுக்குள்ளாகி, சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறல் என்ற இழிநிலையைக் களையக் கூடிய நடவடிக்கைகள் கண்டறியப்படல் வேண்டும். அதற்காக பதிவிற்காக வரும் ஆவணங்கள், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களால் ஏற்கப்பட்டன என்ற சான்றைப் பெறல் வேண்டும். அவ்வேலையைச் செய்வதற்காக நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.
காணி ஒன்றை விற்றவன் அக்காணிக்குச் சொந்தக்காரன்தானா என்பது, சம்பந்தப்பட்ட ஆவணம் பதிவாவதற்கு முன்னர் அறிந்து கொள்ளப்பட வேண்டியது. அப்பாவியுடைய சொத்தை ஒரு கள்ளன் தன்னுடைய காணி என்று இன்னொரு நல்ல மனிதனுக்கோ அல்லது காணிக் கொள்ளையருக்கோ எழுதிக் கொடுப்பதை எந்த ஆய்வுமின்றி உறுதிப் படுத்துதலும், அதனைப் பதிவு செய்து விடுவதும் எவ்வளவு ஆபத்தானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இதனைக் களைவதற்காக, ஒவ்வொரு நொத்தாரிசும் உறுதிப்படுத்திய ஆவணங்கள் பரிசீலிக்கப்படல் வேண்டும். இதற்காக நொத்தாரிசுகளுடன் தொடர்பற்ற திணைக்களம் உருவாக்கப்படல் வேண்டும். சட்டத்திலுள்ள (தப்பித்துக் கொள்ளும் வழி) ஆவணத் தயாரிப்புக்கு உறுதுணையாகிவிடக் கூடாது.
இவை நீதியைச் சீர்குலைப்பதில் தற்போது நடைமுறையிலுள்ள சில காரணங்கள். ஒவ்வொரு துறையிலும் இவ்வாறான தில்லுமுல்லுகள் அரங்கேற்றப்பட்டு வழக்குகள் பதிவாகின்றன, அல்லது பதிவான வழக்குகள் தோற்கடிக்கப்படுகின்றன. அல்லது இழுத்தடிக்கப்படுகின்றன.
எனக்குத் தெரிய ஏறத்தாழ ஒன்பது தசாப்தங்களாக ஒரு பூதல் வழக்கு இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான தீர்ப்பு எட்டப்படவே போவதில்லை. காரணம் இழுத்தடிப்பே. இதனை ஒரு நீதிபதி படித்து தீர்ப்பளி்க்க வேண்டும் என யாராவது எதிர்பார்க்க முடியுமா! அதனால், இது போன்ற வழக்குகள் தவணை போடப்பட்டு விடுகின்றன. அதைத் தவிர நீதிபதிக்கு வேறு வழியே இல்லை! அப்படியே ஒரு நல்மனம் படைத்த நீதிபதி இதனை அறிய முற்படுவாராயின் அவரது ஆயுளே அதற்குப் போதாமல் ஆகிவிடும்.
நிலைமைகளைச் சீர்செய்வதில், இதற்கு மேலும், காணிப் பதிவுத் திணைக்களத்தில் உள்ள விஷமிகளால், அங்குள்ள பதிவுகள் வேண்டுமென்றே சிதைக்கப்படுவதும் உண்டு. சில சமயங்களில் இடத்திற்கு இடம் மாறும் போதும் அந்த ஆவணங்கள் பொறுப்பற்ற விதத்தில் கையாளப்படுவதனால் அழிவுகள் ஏற்படும். இத்தகு சீர்கேடுகள் களையப்பட இலத்திரணியல் முறையில் பிரதிகள் செய்யப்பட்டு காப்பகங்களில் வைக்கப்படல் வேண்டும். அவைகளைக் கையாள்வதில் விஷேட பயிற்சிபெற்ற அதிகாரிகள் ஈடுபடுத்தப்படல் வேண்டும்.
மேலும், ஆவணங்களைப் பதிவு செய்யும் அதிகாரிகளைக் கண்காணிக்கும் மேலதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும். இதன் மூலம், சட்டத்திலுள்ள ஓட்டைகளைக் கையாண்டு உறுதிப்படுத்தப்பட்ட போலி ஆவணங்களின் பதிவை மட்டுப்படுத்தலாம் இதில் ஈடுபடுவோர் மிகச் சில கீழ்த்தர நொத்தாரிசுகள் என்பதால் இவர்களைக் கண்டு பிடித்தல்கூட மிக இலகுவானதே! காரணம், அவர்களுடைய பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானதே! அவர்களின் முன்அனுமதி பெற்று பதிவுகள் மேற்கொள்ளும் நடைமுறை வரவேற்கத்தக்கது. அத்தோடு குறிப்பிட்ட காலக்கெடுவில் அல்லது நிபந்தனையுடன் பதிவுகளைச் செய்தல் சீர்கேடுகளைக் களைத்து உதவலாம்.
இவைகள் எல்லாம் சட்டத்திலுள்ள குறைபாடுகள் காரணமாக உருவானவை. இக்குறைபாடுகள் தீர்க்கப்படாத வரை சிறிய, பெரிய குற்றங்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவரும் பாதையில் இறங்கிப் போராடும் நிலை உருவாகும். உருவாகவும் வேண்டும். காரணம் மக்களின் இயல்பு வாழ்விறகும். அவர்களது சொத்துக்களுக்கும் பாதுகாப்பற்ற, குந்தகம் தரும் நிலையே! அரசு இதில் இப்போதாவது தீவிர கவனம் செலுத்தாவிடில், இந்நாடு ஊழல்களின் சாம்ராஜ்யங்களின் வரிசையில் முதலிடத்தைப் பெற்றுவிடும்.
யாரோ சில திருடர்களால் ஒரு நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்படும் அவப்பெயர் ஒழிய வேண்டும். இன்றேல் தேசப்பற்றுள்ளவர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இது பற்றிய கவன ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும். அரசு இதற்காக உடனடியாக ஓர் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும். அதில் தலைசிறந்த உள்ளுர் வெளியூர் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு கள்வர்கள் தண்டிக்கப்பட்டு, மக்ளுக்கு உண்மையான நீதி வழங்கும் சீரான தன்மையை மன்றுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சட்டத்தரணிகளினால் விடப்படும் பிழைகள் வழ்க்கின் தீர்ப்புக்களுக்கான தகுதியைப் பெற்று விடுவது போன்ற அநியாயம் உலகில் வேறு இருக்க முடியாது. சட்டத்தரணிகளின் நொத்தாரிசுகளின் குற்றங்னளைப் பதிவு செய்து நீதி பெறும் நிலையை இலகுவாக்க வேண்டும். மக்களுக்காகவேதான் அனைத்தும் என்பதை அனைவரும் உணர்ந்தால், இந்நிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும். இது முழமையான ஆய்வக் கட்டுரையல்வ. என் சிற்றவில், அனுபவத்தில் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளேன்.
இவ்வாறான அநீதிக்கு உள்ளானவர்கள், தமது ஈமெயில் சகிதம் கருத்தைப் பதிவு செய்தால், அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றைப் பெற்று வெளிப்படுத்தி உதவும் இவ்விணையம்.
– நிஹா –