பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே, இந்நாட்டில் கல்வி . வளர்ச்சி அடையத் தொடங்கியது. அதற்கு முன்னைய காலப்பகுதியில் அமைப்பு ரீதியான கல்விச் சூழல் காணப்படவில்லை. குரு – சிஷ்ய முறைக் கற்பித்தலும், திண்ணைக் கல்வி முறையுமே காணப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு மேல், வசதி படைத்தோர் வெளிநாடு சென்று கற்கும் சந்தர்ப்பம் மிகமிகக் குறைந்த அளவில் காணப்பட்டது. பிரித்தானியர் தமது நிர்வாகத்துக்கு ஏற்றவாறான இலிகிதர்களை உருவாக்குவதற்கு ஏதுவான கல்வி முறைமையையே இந்நாட்டில் உருவாக்கி இருந்தனர். அக்கல்வியின் அதி உயர் மட்ட இலக்காக, கலைப்பட்டதாரிகள் உருவாக்குவதும், அவர்களில் இருந்து போட்டிப் பரீட்சைகள் மூலம் நிர்வாக சேவைக்குத் தேவைக்கான சில ஆட்களைத் தேர்வதையும் தம்நோக்காகக் கொண்டிருந்தனர். நிர்வாகத்துக்குத் தேவையான பெரும்பாலோர் இறக்குமதி செய்யப்பட்டவர்களே.

இந்நிலை படிப்படியாக மாறி மருத்துவம், பொறியியல், வணிகம் போன்ற கற்கை நெறிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. அக்கால கட்டத்தில் பாடசாலைகள் பொதுவான ஓர் கல்வித் திட்டத்தைப் போதித்து வந்தன. அக்கல்வித் திட்டங்கள் நாட்டின் தேவை கருதி அரசால் வகுக்கப்படும் வெள்ளை அறிக்கையைப் பின்னணியாகக் கொண்ட பாடத்திட்டங்களைக் கற்பித்து அவற்றில் சிறப்புச் சித்திகளைப் பெற்றோருக்கு மருத்துவம், பொறியியல், வணிகம், கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் உரிமை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நல்கப்பட்டது. உயர்தரக் கல்வியின் பரீட்சைப் பெறுபேறுகளில் இருந்தே இத்தெரிவு நடைபெற்று வந்தது. இதிலும் பல்வேறு குறைகள் காணப்பட்டாலும் மாணவர் கல்வி, குறிப்பிட்ட விகிதத்தில் வளர்ச்சி கண்ட வண்ணமே இருந்துள்ளது. மாணவர் மத்தியிலோ, ஆசிரியர் மத்தியிலோ, பெற்றோர் மத்தியிலோ விரக்தியோ வெறுப்போ காணப்படவில்லை. தமது படிப்புக்கும் திறமைக்கும் ஏற்றவாறான அடைவு கிடைத்ததாகத் திருப்தி கொண்டனர்.

இதில் தெரிவாவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதோர் அதற்கு அடுத்த தகுதிகளைக் கொண்ட தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், கணக்கியல் துறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். எப்படியானாலும் அன்றைய கல்வி நகர்சார், குறிப்பிட்ட உயர்மட்ட மக்களுக்கே உரித்தானதாக இருந்தமை கவலை தருவதே! ஆயினும் அது கல்வி வளர்ச்சியின் ஆரம்பகால கட்டமே, என்பதனால் நிலை அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்பதே யதார்த்தம். அது பிரச்சினையாக உருவெடுக்கவோ, விரக்தி நிலையை உண்டுபண்ணவோ கூடிய சூழலை உருவாக்கி இருக்க நியாயம் இருக்கவில்லை. மாறாகத் தேற்றிக்கொள்ளவும், தாமும் அடைவைப் பெற முயற்சிக்கும் ஆசையை ஏற்படுத்தி இருந்தமை உணரக் கூடியதாயுள்ளது.

பிரித்தானியர் காலப் பாடசாலைகள் அனைத்துமே கிறிஸ்தவப் பாடசாலைகளாகவே இயங்கி வந்தமையால் பௌத்த ஹிந்து, முஸ்லிம் சிறார்கள் அனைவருக்கும் கற்கும் வசதியோ, அன்றிக் கற்கும் வசதி கிடைத்தவர்கள்கூடத் தமது சமய அறிவைப் பெறும் நிலையோ இல்லாதிருந்ததுடன், விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்தவத்தைக் கற்க வேண்டிய சூழல்கூட உருவாகி இருந்தது. அத்தோடு மதமாற்றங்கள் கூட குறிப்பிட்டளவு நடைபெற்றமை காணக் கிடக்கின்றன. கிறிஸ்தவராக மாறுவோருக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், வாய்ப்புகள் கல்வியைக் கற்க விரும்பியோர் மத்தியில் விரக்தியையும், சிலரை மாற்றத்துக்கும் உட்படுத்தின. வெள்ளையரை விரும்பி ஏற்ற பகுதிகளில் கல்விச் சாலைகள் தரம் பெற்று விளங்கின. அதனால் ஓர் பகுதி மக்கள் சிறப்பான கல்வியைப் பெற இன்னோர் பகுதி மக்கள் அவ்வாய்ப்பை இழக்கவும் வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் உள்நோக்கின் மறுபக்க விளைவு. தவிர்க்க முடியாதது.

பெரும்பாலான பாடசாலைகளில் ஐந்தாம் தரத்துக்கு மேல் கல்வி பெறும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. வேறு பல பாடசாலைகளில் பத்தாந் தரம் வரை இருந்தாலும் கணித, விஞ்ஞானம் கற்கும் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இன்னும் சிலவற்றில் உயர்தர வகுப்பு இருந்தாலும் அவை பேரளவில் இருந்ததே ஒழிய முழுமையான வசதிகளும் வாய்ப்புகளும் கொடுக்கப்படவில்லை. அத்தோடு வெகு சில பாடசாலைகளைத் தவிர்த்து அனைத்துப் பாடசாலைகளும் தமிழில் மட்டுமே, அதுவும் ஆரம்பக் கல்வியை மட்டும் ஊட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு மேல் கற்கும் வசதி கிடைத்திருக்கவில்லை. ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள் மட்டுமே உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பைத் தந்தன. இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டோர் வறியவர்களும் கத்தோலிக்க மதத்தை ஏற்காதோரும், வெள்ளையருக்கு அனுசரனை இல்லையெனக் கருதப்பட்டோருமே.

அடுத்த நிலையிலுள்ள, அப்போதிருந்த ஓரிரு சர்வகலாசாலைகள்கூட சர்வாதிகாரத் தன்மை கொண்டனவாகவும், விருப்பு வெறுப்புகளைக் கொண்டனவாகவும் இயங்கியமை ஓர் தவிர்க்க முடியா நிலையாக இன்றும் தொடர்வதே வேதனை தரும் சம்பவமாகவுள்ளது. சிறப்பான மாணாக்கரை உருவாக்குவதை விட்டுச் சிரம் சாய்ப்போர் உருவாகும் நிலை ஏற்பட்டிருந்தது. திறமைக்கு முக்கியத்துவம் என்ற நிலை மிகக் குறைவாகவே காணப்பட்டுள்ளது. வேண்டியோர் உயர் மட்ட சித்திகளையும், வேண்டாதோர் சாதாரண தரத்திலும், சித்திகள் கொடுக்கப்பட்டனர். இன்னும் அடிபணியாதோர் சித்தியின்மை என்ற சித்திரவதையுடன் வாழ்க்கை அழிக்கப்பட்டனர்.

அதற்கு மேல் {Post Graduation ) முதுநிலைக் கல்வி என்பது சிலரைத் தவிர்த்து, எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. இது பட்டதாரிகளின் பின்னணியை நுணுக்கமாக ஆராய்ந்தால் கண்டறியப்படக் கூடியது. அன்றேல் கருத்துக் கணிப்பீடொன்றின் பேரில் வெளிப்படும். தமக்கு வேண்டியவர்களுக்கு முதுநிலைக் கல்வி கொடுக்கப்பட வேண்டுமென்பதற்காக அவ்வப்போது இரும்புக் கரங்கள் தளர்த்தப்பட்டன. அங்கும் திறமை அடிப்படையிலோ, கேள்வியின் அடிப்படையிலோ முதுநிலைப் பட்டங்கள் கொடுக்கப்படாமையுடன், அது அந்நிர்வாகத்தினரின் விருப்புக்களை நிறைவு செய்யும் விதமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும், அதனால் முதுநிலைக் கல்விக்காக ஏங்கிய சில வசதி படைத்தோர் வெளிநாட்டை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் மற்றையோர் மாண்டொழிந்ததுமாகத் தெரிகிறது. இவை சில குறைபாடுகளாக இருந்தாலும் சமூக மட்டத்திலோ, ஒழுக்க விழுமியங்களிலோ பெரிய அளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஏறத்தாழ முதுநிலைக் கல்வி சாதாரண மக்களின் எட்டாக் கனியாகவே அமைந்திருந்தாக அறியக் கிடக்கிறது.

பின்னர் படிப்படியாக இந்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, சுதந்திரத்தின் பின்னர் ஓரளவு ஆரம்பக் கல்வி, ஆங்கிலக் கல்வி போன்றவைகளைக் கற்பிக்கும் கூடங்கள் அநேக மாவட்டங்களில் ஒன்றோ இரண்டோ தேவை கருதி தோற்றுவிக்கப்பட்டன. கத்தோலிக்கப் பாடசாலைகள் மட்டும் என்ற நிலை மாறி அரச தமிழ், ஆங்கில, கனிஷ்ட, சிரேஷ்ட, கலவன் பாடசாலைகள் உருவாகின. இது ஓரளவு மனச்சாந்தியை அளித்தாலும் பெருமளவில் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக இருக்கவில்லை. மாறாக பேரளவுப் பாடசாலைகளாகவே இயங்கி வந்தன.

அரசியல் மாற்றங்களின் பின்னர் மாணவர் நலன் கருதிச் சில வசதிகளோடு கூடிய மத்திய கல்லூரிகள் ஆங்காங்கு தோற்றுவிக்கப் பட்டன. அவைகளாலும் சில மாணவர்கள் பயனடைந்தே உள்ளனர். சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணாக்கர் தேர்வுப் பரீட்சைகள் மூலம் கண்டறியப்பட்டு அரச செலவில் கற்கும் வசதிகள் புலமைப் பரிசில் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டன. இந்நிலை அனைவருக்கும் கல்வி என்ற நிலையையும், பின்னர் இலவசக் கல்வி என்ற நிலையையும், அதன் பின்னர் கட்டாயக் கல்வி என்ற புதுப் பரிமானத்தையும் பெற்றமையை நான் பெரும் பேறாகவே காண்கின்றேன்.

கட்டாயக் கல்வியைப் பெறாதோர் கண்டறிப்பட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சட்டநடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டார்கள் என்றால் அரசுகள் எந்த அளவு மக்களின் கல்வியை வளர்ப்பதில் கவனம் கொண்டிருந்தன என்பதையும், மக்கள் எந்தளவு பொறுப்பற்றிருந்தார்கள் என்ற தன்மையையும் காணக் கூடியதாயுள்ளது. ஆனால் இன்றைய பெற்றாரோ அதற்கு எதிர்மாறான நிலையை எய்தி இருந்தாலும், அரசுகள், கல்விச் சாலைகளையோ, முறைமையையோ, கண்காணப்பதிலேயோ, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதிலேயோ முற்றாக விலகிக் கொண்டுள்ளனவா என்ற அடிப்படையில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு நிகழ்வுகள் நிலைதடுமாறி உள்ளன.

கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலும் அதைத் தொடர்ந்த காலத்திலும் கற்றலை, கற்பித்தலை, அதன் நிர்வாகத்தை மேற்கொண்டோரும், பெற்றாரும், பிறரும் மிகச் சீரிய நோக்கங்களையும், மனோநிலையையும், ஆசையையும், அக்கறையையும் கொண்டவர்களாகவே காணப்பட்டனர். அதனால் கல்வி துரித வளர்ச்சி கண்டது. ஆசியாவிலேயே கற்றோர் விகிதத்தில் கூடிய நிலையிலுள்ள நாடுகளின் முன்வரிiசையை அலங்கரிக்க வைத்தது.

உயர் பண்பாடு, ஒழுக்க நெறிகள், ஆசிரியர் கௌரவம், மாணவர் பணிவும் பண்பும் போன்ற இன்ன பிறவும் ஓங்கி இருந்தன. கல்விக் கூடங்கள் தமதுயிரைப் போல மதிக்கப்பட்டன. அங்கு கற்போரும் கற்பிப்போரும் கூட உயர்வாக மதிக்கப்பட்டனர். இதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும், முதன்மைக் காரணியாகக் கொள்ளக் கூடியது அன்றைய கல்வி முறையே. அக்கல்வி முறை அறிவை வளர்க்கும் அரும்பணியை ஆற்றியது. அங்கு பட்டமோ, பதவிகளோ முன்னிலைப் படுத்தப்படவில்லை. அறிவே முதன்மையாகி இருந்தது. இன்றைய நிலையை நான் கூறி நீங்கள் தெரிய வேண்டியதுமில்லை. அக்குப்பையைக் கிளறி அந்நாற்றத்ததை அநுபவிக்க விருப்பமுமில்லை. ஆயினும் தேவை கருதி சிலவற்றை அவ்வப்போது வெளிப்படுத்துவேன். அறிவை வளர்த்தது அன்றைய கல்வி முறை- அறியாமை வளர்ப்பது இன்றைய கல்வி

விளங்காததைப் படிக்க இராப் பள்ளிகள்- விளங்காமலே படிக்க டியூஷன் வகுப்புகள்:
அக்காலங்களில் பாடசாலைக் கல்வி மட்டுமே. அதற்கு மேலதிகமாகக் கற்கும் வசதிகள் மிகமிக அருமையாகவே இருந்தன. டியூஷன் முறை முற்றாக இருக்கவில்லை. யாராவது ஓரிருவர் உதவி என்ற அடிப்படையில் தனியே தம் வீடுகளிலோ, மாணவர் வீடுகளிலோ கற்பித்து வந்தனர். அதற்காகப் பேரம் பேசல் இருக்கவில்லை. சந்தோசமாகக் கொடுப்பதை சிலர் ஏற்றனர், வேறு சிலர் இலவசமாகவே தம் சேவையைச் செய்தனர். கல்வியை விலையாக்கும் தன்மை காணப்படவில்லை. அதை அகௌரவமாகவும், தமது மதிப்பைக் குறைத்துக் கொள்வதாகவும் கருதினர். மாணாக்கர் நலன் கருதி பாடசாலைகளே இராப்பள்ளிகளாகவும் சில இடங்களில் இயங்கி வந்தன. விடுமுறை நாட்களிலும், பரீட்சைக் காலங்களிலும், விடுபட்ட பாடங்களைக் கற்பிக்கும் உயர் நோக்குடனும் இலவசமாக அப்படியான சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கல்வி முறை உண்மையில் மாணவர்களின் விளக்கத்தை, அறிவை, ஆற்றலை வளர்க்கும் நோக்காகவே செயற்பட்டன. இந்நிலை படிப்படியாக மாற்றமடையத் தொடங்கின. டியூஷன் முறை பல்வேறு வடிவங்களில் புதிய பரிமானங்களை எடுத்து மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், ஆசிரியர் மத்தியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தற்போதைய டியூஷன் நிலைக்குத் தள்ளிவிட்டன. இன்றைய நிலையில் டியூஷன் வகுப்புகள் மாணவருக்கு அறிவை வளர்க்கும் நோக்கைத் தமது இலக்காகக் கொண்டிருக்கவில்லை. முதலாவது பணம் பண்ணுவது. இரண்டாவது மாணவரின் தற்போதைய மனோநிலைக்கேற்ப பரீட்சையின் கேள்விகட்கு பதிலை அறிவித்தல் என்ற பணியைச் செவ்வனே நிறைவேற்றுகின்றன. இதில் மாணாக்கருக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.

அது அவர்களால் விரும்பப்படுவதுமில்லை. பரீட்சையில் பாஸ்பண்ணும் இலகு வழிகளைக் கண்டறிவதே டியூஷன் வகுப்புகளுக்கு மாணவர் செல்வதின் இரகசியம். மேலும், அந்த டியூஷன் ஆசிரியர்களின் தகைமையாக அவர்கள் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துபவர்களா?, அல்லது பரீட்சை வினாக்களைத் தெரிவு செய்யும் குழுக்களில் அங்கம் வகிப்பவர்களா? போன்றவைகள் கவனிக்கப்படுகின்றன. அதன் நோக்கம் அந்த வருடப் பரீட்சைக்கு மட்டும் தேவையான பதில்களைத் தெரிந்து கொண்டால் போதும் என்ற குறுகிய வட்டத்துள் மாணவர் சமூகம் இன்று அடங்கியுள்ளமை என்றமை புரிகிறது.

பாட அறிவைத் தேடி வளர்த்தது பழங் கல்வி – பாடம் பண்ணி அறிவை அழித்தது புதுக்கல்வி

மாணவர் அறிவைத் தேடும் முயற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகளில் தற்போதைய கல்வி முறையே முக்கிய இடத்தை வகிப்பது. புதுக் கல்வி முறை பரீட்சையை மையமாக வைத்த கல்வி முறையாக அமைந்தமையால், பரீட்சையில் சிறப்புச் சித்திகளைப் பெறுவோருக்கே உயர் கல்வி வாய்ப்புகள், புலமைப் பரிசில்கள், சிறந்த பாடசாலைகளைத் தெரிவு செய்யும் பாக்கியம், வெளிநாட்டில் இவசக் கல்வி போன்ற இன்னோரன்னவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதனால் இந்த சௌபாக்கியங்களை அடையக் குறுக்கு வழிகளைக் கையாளும் போக்கு மாணவர் மத்தியில் வளரத் தொடங்கியது.

அதனால் விடைகளைப் பாடமாக்கும் எளிய முறை அவர்களைக் கவர்ந்தது. எவ்வாறான புத்தகங்கள் மாணாக்கர் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்ற தந்திரத்தை அறிந்து வைத்திருந்தோர் அவ்வாறான வினா விடைகளை பல்வேறு யுக்திகளுடன் எழுதியும், தொகுத்தும், வெளியிட்டும் பணம் பண்ணத் தொடங்கினர். அதிலும் முக்கியமானவை என்று கருதப்பட்டவற்றை மாணவர் பாடம் பண்ணுவதைக் கல்வியாக ஏற்றனர். இத்தோடு மாணவ இனத்தின் பாட அறிவைத் தேடும் பண்பும் அழியத் தொடங்கிற்று. கட்டுரைப் புத்தகங்கள்கூட பல்வேறு தலையங்கங்களில் எழுதப்பட்டு விற்பனை செய்யப்பட்டன என்றால் அறிவு தேடும் கல்வியின் அழிவு நிலைத் தன்மையை நன்கு புரிந்து கொள்ள முடியும். இம்முறையே பின்னர் பிட் அடிக்கும் இலகு முறைக்கும் கால்கோளாய் அமைந்தது.

அறிவை அளந்த பரீட்சை அழிவாய் மாறிய விந்தை:

மாணாக்கர் அறிவை மதிப்பீடு Evaluation  செய்வதற்காக நடத்தப்பட்ட பரீட்சைகள் காலப் போக்கில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன. இது மெல்ல வளர்ச்சி அடைந்து பரீட்சைக்காக மாணவர் கல்வி பயிலுதல் என்ற அவல நிலையை வளர்த்ததில் வெற்றியைத் தழுவின. அதனால் பரீட்சைக்கு ஆயத்தமாக்கும் போக்கும், பரீட்சைக்கு ஆயத்தமாகும் போக்கும் மட்டுமே பின்பற்றப்பட்டன. இந்த வகையில் பாடசாலையில் கல்வி கற்பது வீண் போன்ற கருத்தியல் மாணவர் அடிமனத்தில் ஊன்றத் தொடங்கின. இதுவே மாணாக்கரின் அறிவைத் தேடும் முயற்சியில் அழிவைத் தொடக்கி விட்ட இடமாக நான் கருதுகிறேன். இந்நிலையே மாணாக்கரில், கற்றலில் ஆர்வம், ஆசிரியருக்குக் கொடுக்கப்பட்ட கௌரவம், ஒழுக்கம் முதலிய பிறவற்றை இல்லாதொழிக்கும் வல்லமையுடன் வளர்ச்சிகாண வைத்தது.

படித்து பரீட்சை பாஸ்பண்ணியது மலையேறி பாஸ் பண்ணப் படிக்கும் நிலை:

ஆரம்ப காலத்தில் சாதாரண நடவடிக்கையாகவிருந்த கல்வி காலப் போக்கில் உயர் கல்வியை நோக்காகப் பெருப்பித்துக் கொண்டது. பின்னர் ஏற்பட்ட பொருளாதாரக் காரணிகள், அறிவுக்கான கல்வியென்ற நிலையிலிருந்து தடம் மாறவைத்து, பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக என்ற எண்ணத்தை ஊட்டியிருந்தது. இதனால் தொழில்சார் கல்வி என்ற கோஷத்துடன் கல்வி முறையில் மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டது. அது போட்டியை மாணவர் மத்தியில் உருவாக்கியது. உயர் புள்ளிகளே அதற்கும் தேவை என்ற நிலை ஏற்பட்ட போது பரீட்சைக்காகப் படிக்கும் நிலையை மாணாக்கர் மத்தியில் ஏற்படுத்தியது. அதுவே சரியானது போவும், அதற்கு வரவேற்பு இருப்பது போலவும் காட்டும் விதமாக நிகழவுகள் நடைபெற்றன.

அவற்றில் வினாவுக்கு விடைகள் என்ற கருத்தியலைக் கொண்ட புததகங்களும், டியூட்டறிகளும் தோன்றி மாணாக்கர் செய்கைக்கு அங்கீகாரம் வழங்கின. அப்பாவிகள், மாணவர் தம் கல்வி அழிவதை, அறிதல் குறைவதை அறியாது இருந்தமை அசாதாரணமானதன்று. பெற்றோரின் அங்கீகாரம்கூட மாணவரை வெகுவாக ஊக்குவித்தன. அனைத்து மட்டங்களிலும் பாஸ் பண்ண படிப்பு என்ற மனோநிலை வேரூன்றியது. இதனாலேயே குறுக்கு வழிகளில் பரீட்சையை முகம் கொடுக்கும் பண்பும் கூடவே வளரத் தொடங்கின. இப்படியான அங்கீகாரங்களாக் எண்ணப்படக் கூடிய பரிணாம மாற்றமே பரீட்சைக்கு,MCQ Multi- Choice Questions பல்தேர்வு வினா முறைமை அறிமுகமாகியமை. நன்னோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டாலும் சமூக மனப்போக்கு மாறியிருந்த நிலையில் அறிமுகமானதால், அப்போதைய மனப்போக்கை அடைவதற்கு உதவும் ஒன்றாகவே பாத்திரமேற்றது. காலமறியாது செய்யப்பட்ட மாற்றம் கல்வியைப் பாதிப்பதாகியது.

இலைமறை காயாக நடந்து கொண்டிருந்தவைகூட வெளிப்படையாக நடக்கும் பல்தேர்வு வினா முறை பாடஅறிவை வளர்த்ததா? பிட் முறையை வளர்த்ததா?

ஓரே வசனத்தில் இதற்கு விடையளிப்பது மிகச் சுலபம். ஆயினும் உண்மைகளின், நிலைமைகளின் வெளிப்பாட்டுக்காக சிறிது அலசத்தான் வேண்டியுள்ளது. பிட் Bit முறைக்கும் மேலாக, அடுத்தவன் உதவியினை வேண்டும் நிலை, இன்னொருவன் தனக்காகப் பரீட்சைக்கு விடை எழுதி பரீட்சகர்களின் உதவியோடு, தனது சுட்டெண்ணோடு கட்டப்படும் நிலை, இருவருமே சுட்டெண்களைப் போடாது, பின்னர் ஏதாவது முறையில் அழைக்கப்படும் போதோ, வலிந்தோ சென்று சுட்டெண்ணை தம் எண்ணம் போல் எழுதிக் கொள்வதும் போன்ற யுக்திகளும், குத்து மதிப்பில் விடையைத் தேர்வு செய்யும் பண்பையும், இப்போதைக்குப் பரீட்சை எழுதிவிட்டுப், பின்னர் பாஸ் பண்ணும் வழிகளைக் காணுவோம் என்ற சிந்தனையையும், இதற்கும் மேலாக வேறொருவர் தனக்காக தனது பெயரில் பரீட்சைக்கு விண்ணப்பித்து, அறிமுக அட்டைகளும் பெற்று பரீட்சை எழுதிப் பாஸ் பெறுவதும் (இதைக் குதிரை ஓடல் என வர்ணிப்பர்) போன்ற இழிநிலை வளர்த்திருந்தது.

குதிரையோட முடியுமென்றால் கதிரைகளில் காலத்தை ஏன் கழிக்கனும்? என்ற மனநிலை வளர்வதற்கு காரணமாகியதால் படிப்பதற்காகக் கதிரைகளில் அமர்வதே முட்டாள் தனம் என்ற புதிய எண்ணக் கருவை மாணவரில் வளர்த்தன. இதுவே அனைத்தின் அழிவுகளுக்கும் காரணமாகின. வினா விடைப் புத்தகங்கள் படித்தறிந்தவற்றைச் சரி காண என்ற நிலை மாறிப் படித்துப் பாடம் பண்ணும் நிலையில் இருந்து கூடத் தடம் புரளும் தன்மை காணப்பட்டது. அக்கல்வி மாணாக்கரின் அறிவுக்குத் தேவையற்றதொன்றாக அமைந்திருக்கலாம். வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதே கல்வியென்றால், பரீட்சைக்கான கல்வியைக் கணிக்கும் பரீட்சையை எப்படி முகம் கொடுத்தாலென்ன என்ற எண்ணக் கரு வளராதிருந்தாலே அது ஆச்சரியம்! இம்மனோநிலையை மாணவர் அடைந்ததால் பல்வேறு சுருக்க. குறுக்கு வழிகளும் கண்டு பிடிக்கப்பட்டன, அல்லது அறிமுகமாயின, நடைமுறைப்படுத்தப்பட்டன.

டியூஷன் படித்துத்தான் பட்டம் பெறுவதென்றால் பாடசாலைகள் எதற்கு?

பாடசாலைகள் விளையாடும், பொழுது போக்கும் நிலையங்களாக மாணவர்களால் கணிக்கப்பட்டன. கல்விச் சாலைகள் கலவிச் சாலைகளாகிய கண்ணறாவியும்தான்! இதற்கு சில அதிபர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், அவர்தம் செயற்பாடுகளும் உரமிட்டன. பரீட்சையில் பாஸ் பண்ணும் பல வழிகள் தம் கைவசமிருந்ததால், பாடசாலைகளுக்கு இருந்த மதிப்பு, ஆசிரியருக்குக் கொடுக்கப்பட்ட கௌரவம், கல்வியிலிருந்த ஆர்வம், பற்று, புனிதம் போன்றவை செல்லாக் காசாகின. புதிய மாற்றங்களுக்காளாகாத அப்பாவியான பண்புகளைக் கொண்ட மாணவர்கூட பத்தாம்பசலிகளாகக் கணிக்கப்பட்டனர். ஏன் தாக்கவும் பட்டனர் என்றால் பாருங்களேன். நல்ல மாணாக்கரும் கற்க முடியா நிலையைப் பாடசாலைகள் அடைந்தன. ஒழுக்கத்தை அழித்த இழிவான கல்விச் சூழலாக உருவெடுத்த நிலைக்கு மாணவர் மட்டுமல்ல அனைத்து சாராரும் பதில் கூறியே ஆகவேண்டும். பொழுதுபோக்கு நிலையங்களாகியுள்ள பாடசாலைகள், அழுகல் சமுதாயத்தை வளர்க்கும் கல்விச்சாலைகளாக மாறியமை தூரதிருஷ்டமே. அதனால் ஏற்பட்ட விளைவுகளே பயங்கரவாதம் என்ற படுபாதாளத்தை நோக்கிய பயணமாகியது.

பணம் பண்ணும் தொழிலாகக் கல்வி மாறியதால் பிணந் தின்னுது இன்று சமூகம்! குதிரையோடுவதையே தொழிலாகக் கொள்ளும் நிலை நாட்டில் ஏற்பட்டதால், அறிவை விற்றுப் பணம் பண்ணும் தொழிலாகியது அதுவும். அத்தோடு வரவேற்பும் பெற்றன. அந்த வட்டத்துள், அத்தொழிலாளர்க்கு மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு கேள்விகளும் Demand கூடின! கூடவே ஏமாற்றுக்காரர்கள் தோன்றினர்.

எங்கெல்லாம் இருந்து மேற்கண்ட அழிவுகளுக்கான அத்திபாரம் போடப்பட்டதென்பதை உற்று நோக்கும் போது, விடைத்தாள் திருத்தும் முறையால் பரீட்சைகள் கடை நிலையடைந்தமை  தெள்ளிதிற் புலனாகின்றது. தற்போது பரீட்சை எழுதுவோம் பாஸ் பண்ணும் வழிகளைப் பின்னர் காணுவோம் என்ற மனநிலை இருந்ததாக நான் ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! அந்த வேறு வழிகளில் முக்கியமானதுதான், இப்போது நான் கூறப் போகும் வழி!

அதற்கு முன்னர் விடைத்தாள் திருத்தல் தற்போதைய நிலைக்கு வரு முன்னர் எப்படி நடந்தது என்பதைச் சிறிது ஆய்வது நன்மை தீமைகளை ஒப்பிட இலகுவாகவிருக்கும். வினாத் தாள்களைத் திருத்தும் பணிக்காக ஏதோ ஓர் முறையில் திணைக்களத்தால் தேர்ந்தெடுக்ப்பட்ட ஆசிரியர்களுக்குப் பரீட்சைத் திணைக்களத்தால் விடைத் தாள்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டு அவை அவர்களால் திருத்தப்பட்டு, தபால் மூலமே அனுப்பப்படும். எந்த மாவட்டத்துக்குரிய வினாத்தாள்கள் எந்த மாவட்டத்துக்குப் போகும் என்பது இரகசியமாக வைக்கப்படும். திருத்துவோருக்குக் கூட எம்மாவட்ட விடைத்தாள் தமக்கு வந்துள்ளது என்பது தெரியாது. இதில் சில தீமைகளும் இருந்தன. சிறப்பாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் இம்முறையால் தவிர்க்க முடியாதிருந்தது. அதிலிருந்த, நானறிந்த பெரும் குறைபாடொன்றை இங்கு கூறிச் செல்வது பொருத்தமே!

நான் ஓர் முறை கொழும்பிலிருந்து வடக்கே செல்லும் யாழ்தேவி மூலம் பயணம் செய்த போது நடந்த விபரீத அனுபவம் அது. ஒரு ஆசியராக அல்லது விரிவுரையாளராக இருக்க வேண்டும். விடைத்தாள் திருத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். புகையிரதத்தின் யன்னல் திறந்திருந்தது. அதனருகே அமர்ந்து திருத்திக் கொண்டிருந்த அந்நபர், வைத்தது வைத்தபடி எழுந்து கழிவறைக்குச் சென்றார். திரும்பி வந்ததும் அவரிடம் நான், நீங்கள் விடைத் தாள்களை அப்படியே விட்டுச் சென்றீர்களே அவைகளில் சில காற்றில் பறந்து தொலைந்திருந்தால் என்ன செய்வது எனக் கேட்ட போது அவர் அளித்த பதில் என்னைத் திடுக்கிட வைத்ததுடன், பரீட்சைப் பெறுபேறுகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்தம் நிலையை எண்ணிப் பார்க்க வைத்தது. இரண்டு வருடங்கள் படித்து விட்டு பரீட்சை எழுதி சிறந்த பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவரின் பரிதாப நிலை என்னைப் பாடாய்ப்படுத்தியது. அவர் சொன்ன பதில், ‘தொலைந்த விடைத்தாளுக்குப் பதிலாக வேறு இரண்டு வெற்று விடை எழுதும் தாள்களை அந்தச் சுட்டெண்ணை எழுதி வட்டத்தையிட்டு வைத்துவிடுவேன் அவ்வளவுதான்’ என்பதே. என்னே கொடுமை! என்னே பயங்கரம்!

அதனால் புதிய முறையான, அனைத்து ஆசிரியத் திருத்துனர்களையும் வெவ்வேறு விடைத்தாள் திருத்தும் நிலையங்களுக்கு அழைத்து, அங்கேயே சில நாட்கள் தங்கி நின்று திருத்திச் செல்வது என்றவாறு அறிமுகம் செய்யப்பட்ட போது மகிpழ்ச்சியாயிருந்தது. இதுவே மாணவரின் கல்வியில் இருந்த அக்கறை அற்றுப் போகக் காரணமாய் அமைந்து விடுமென அப்போது யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இம்முறை எப்போது, எப்படி களவு செய்யலாம் என்பதற்காக ஆலாய்ப் பறந்தவர்களுக்குச் சிறந்த இரையாகியது.

அது திருடர்களின் சந்தை போன்றும், பண்டமாற்று முறையிலும் நடக்கும் வியாபாரம் போன்றும் பவ்வியமாக நடந்தது! திருத்த வரும் ஆசிரிய அசிங்கங்கள் சில, தம்மோடு, தமக்கு வேண்டியோரின் பல சுட்டெண்களைக் காவிக்கொண்டு செல்லும். முதல் வேலையாக தம்மிடம் இருக்கும் சுட்டெண்களை கைமாற்றுவதே முக்கிய வேலையாக அங்கு பரபரப்பாக நடை பெறும். அந்த தேடல், தமக்கு வேண்டியோரின் , என்ன பாட விடைத் தாள்கள், யார், யாருக்கு வந்துள்ளன என்பதைக் கண்டறிவதில் ஈடுபடுவதே! இதில் பணம் பண்ணியவர்களும், டியூஷனில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பவர் என்ற பெருமை பெற்றவர்களும் உண்டு!

இப்போது, விடைத்தாள் திருத்தும் முறையால் பரீட்சை கடை நிலை அடைந்ததை ஓரளவு விளங்கி இருப்பீர்கள். இந்த வசதி இருந்தால் யார், கல்வியிலோ, பரீட்சையிலோ அக்கறை காட்டுவர். வேண்டியதெல்லாம் பரீட்சைக்குத் தோற்றியிருப்பதே! அதுவே மாணவர்கள் நூலறுந்த பட்டமாக மாறியமைக்கும், கல்வி வாலறுந்து கேவல நிலையை இன்று அடைவதற்கும் வழிகோலியது. இவ்வாறான நிலை, கல்விக் கொள்கையாகவா அல்லது கல்விமான்கள் கொள்கையாகவா அறிமுகமானது?

பட்டங்கள் கூட தற்போது இட்டம் போல் பெற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆம், University Colleges  சர்வகலாசாலைக் கல்லூரிகளில் அதிகமானவை அக்கைங்கரியங்களை, மிக நேர்த்தியாகச் செய்து கொண்டிருக்கின்றன! அது இளமானி, முதுமானி, கலாநிதி வரை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பட்டம் நோக்கிய படிப்பு என்ற நிலை பரிணாமம் பெற்று, பட்டத்தையே Sale களில் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்த பின்னர், தேவையானதெல்லாம் கட்டுக் கணக்கில் சிறு பணமே!

இப்போது பாடசாலை, படிப்பு, தேவையா இல்லையே! ஆக, சிறிதளவு ஆங்கிலம் பேசும் அறிவுடன், கையும், பையும் கொள்ளாத பர்ஸ், ஒரு செல்லிடத் தெலைபேசி இருந்தால் போதும் தறு தலை(வர்)களாகி விடலாம் அல்லவா!

 – நிஹா -